ஊர் குருவியாக கவின்

Published On:

| By Balaji

ரெளடி பிக்சர்ஸ் சார்பில் நட்சத்திர காதலர்களான நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் இருவரும் தமிழ் சினிமாவுலகில் அடுத்தடுத்து பல யூகிக்க முடியாத படைப்புகளை அறிவித்து வருகின்றனர்.

உலகமெங்கும் விருதுகளை அள்ளி குவித்து வரும் ‘கூழாங்கல்’ மற்றும் இரத்தமும் சதையுமாக, அதிர்ச்சி மிகுந்த படைப்பாக உருவாகியுள்ள ‘ராக்கி’ ஆகிய படங்கள் ரெளடி பிக்சர்ஸ் சார்பில் வெளியீட்டுக்கு தயாராகி வருகிறது.

தற்போது இந்நிறுவனம் தனது புதிய படைப்பாக ‘ஊர் குருவி’ படத்தினை அறிவித்துள்ளது.

ஒருபுறம் மெலோ டிராமாவாக உருவாகியுள்ள ‘கூழாங்கல்’ இன்னொருபுறம் க்ரைம் திரில்லராக உருவாகியிருக்கும் ‘ராக்கி’ என இரு வித்தியாசமான படைப்புகளை வெளியிடும் இந்நிறுவனம் முழுக்க, முழுக்க காமெடி டிராமாவாக ‘ஊர் குருவி’ படத்தினை தயாரிக்கவுள்ளது.

நடிகர் கவின் இப்படத்தில் நாயகனாக நடிக்கவுள்ளார். இயக்குநர் விக்னேஷ் சிவனின் உதவியாளராக ‘தானா சேர்ந்த கூட்டம்’ படத்திலும், இயக்குநர் அஜய் ஞானமுத்துவிடம் ‘டிமாண்டி காலனி மற்றும் இமைக்கா நொடிகள்’ படங்களில் உதவி இயக்குநராக பணியாற்றிய அருண் இப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார்.

இந்தப் படம் குறித்து இயக்குநர் விக்னேஷ் சிவன் கூறும்போது, அருண் என்னிடம் தானா சேர்ந்த கூட்டம்’ படத்தில் உதவி இயக்குநராக பணியாற்றினார். அவரது ஐடியாக்களும், அவரின் தெளிவான சிந்தனையும் என்னை எப்போதும் ஆச்சர்யப்படுத்திக் கொண்டே இருக்கும்.

எங்களுடைய ரெளடி பிக்சர்ஸ்சார்பில் தாயாரிக்கப்படும் ஊர் குருவி படம் மூலம் அவரை இயக்குநராக அறிமுகம் செய்வது மகிழ்ச்சியாக உள்ளது. இப்படத்தில் நடிக்க தமிழின் முக்கியமான பெரிய நட்சத்திரங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம். விரைவில் இது குறித்து அதிகாரபூர்வமான அறிவிப்பு வெளியாகும்.

இப்படம் முழுமையாக தமிழ்நாட்டின் தென் பகுதிகளில் படமாக்கப்படவுள்ளது. நேர்த்தியான, தரமான கதைகளின் மீது ரெளடி பிக்சர்ஸ் எப்போதும் பெரும் நம்பிக்கை கொண்டிருக்கிறது. இந்த ‘ஊர் குருவி’ திரைப்படம் ரசிகர்களுக்கு இனிமையான ஒரு அனுபவத்தை தரும்என்றார்.

**-அம்பலவாணன்**

�,”

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share