Nஆபத்தில் ஸ்மார்ட்போன் உலகம்!

entertainment

ஏப்ரல் 1ஆம் தேதியிலிருந்து ஸ்மார்ட்போன்கள் விற்பனையில் கடும் வீழ்ச்சி ஏற்படும் என ஸ்மார்ட்போன் விற்பனையாளர்களால் கணிக்கப்பட்டிருக்கிறது. ஜிஎஸ்டி கவுன்சிலில் அறிவிக்கப்பட்ட பல அறிவிப்புகளில், ஸ்மார்ட்போன் உலகத்தையும், மக்களையும் பெரும் அதிர்ச்சிக்குள் தள்ளியது ஸ்மார்ட்போன்களுக்கான ஜிஎஸ்டி வரி 12 சதவிகிதத்திலிருந்து 18 சதவிகிதத்துக்கு உயர்த்தப்படும் என்ற அறிவிப்பு. ஸ்மார்ட்போன்களுக்கு மட்டுமல்லாமல், குறிப்பிட்ட சில பாகங்களுக்கும் இந்த வரி அதிகரிப்பு பொருந்தும் என ஜிஎஸ்டி கவுன்சில் அறிவித்தது, ஸ்மார்ட்போன் துறையில் கோலோச்சும் முக்கிய வியாபார நிறுவனங்களின் தூக்கத்தைக் கலைத்திருக்கிறது.

ஸ்மார்ட்போன்கள் விற்பனையில் இரண்டாவது இடத்திலிருந்த அமெரிக்காவை கீழே தள்ளி, 151.9 மில்லியன் ஸ்மார்ட்போன்களை விற்று இரண்டாவது இடத்துக்கு வந்தது இந்தியா. இந்தியாவைவிடவும் இரண்டு மடங்கு டிவைஸ்களை விற்பனை செய்து சீனா முதலிடத்தில் இருந்தாலும், இரண்டாவது இடத்தைப் பிடித்த இந்தியாவுக்கு இது மிகப்பெரிய வரப்பிரசாதமாக அமைந்தது. பல்வேறு ஸ்மார்ட்போன் நிறுவனங்களும் போட்டி போட்டுக்கொண்டு தங்களது விற்பனையை இந்தியாவில் தொடங்கிட, விரைவில் விற்பனை செய்ய இந்தியாவில் ஸ்மார்ட்போன் உற்பத்தி தொழிற்சாலைகளையும் தொடங்க முடிவெடுத்தனர். இது இந்திய அரசாங்கத்தின் ‘மேக் இன் இந்தியா’ பிரச்சாரத்துக்கும் பெருமளவில் உதவியது. இப்படி ஸ்மார்ட்போன் விற்பனைத் துறை ஏறுமுகமாகச் சென்றுகொண்டிருந்த நேரத்தில் ஜிஎஸ்டி வரியை உயர்த்தியிருப்பது பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்தும் எனக் கூறி தங்களது அதிருப்தியை வெளிப்படுத்தி வருகின்றன ஸ்மார்ட்போன் நிறுவனங்கள்.

சாதாரண நிலையில் 12இல் இருந்து 18 சதவிகிதத்துக்கு வரியை உயர்த்துவது பெரிய பிரச்சினையாக இருந்திருக்காது. ஆனால், கொரோனா வைரஸால் உலகமே ஸ்தம்பித்திருக்கும் சூழலில் ஸ்மார்ட்போன் துறை மட்டும் தப்பித்துவிடுமா?

சீனாவில் ஏற்பட்ட முழு அடைப்பு மற்றும் டெலிவரி சிஸ்டத்தை முழுமையாக இயக்கத் தேவையான தொழிலாளர்கள் உலகமெங்கும் வெளியே வரமுடியாத சூழல் ஆகியவை ஏற்கனவே ஸ்மார்ட்போன் துறையை பதம்பார்த்து விட்டன. இதனால், பல தொழிற்சாலைகளை தற்காலிகமாக மூடிவைக்க திட்டமிட்டிருக்கின்றன உற்பத்தி நிறுவனங்கள். இப்படிப்பட்ட சூழலில் ஜிஎஸ்டி வரியை உயர்த்தியிருப்பது, இந்திய நாட்டுக்கான உற்பத்தியை இயல்பு நிலை திரும்பிய பிறகு மீண்டும் தொடங்குவதற்கான நம்பிக்கையைக் கொடுக்காது எனக் கருதுகின்றனர்.

ஷியோமி மொபைல் நிறுவனத்தின் இந்திய இயக்குநர் மனு குமார் ஜெயின் ஜிஎஸ்டி வரி உயர்வு குறித்து வெளியிட்டுள்ள அறிவிப்பில் “ஜிஎஸ்டி வரி உயர்வு ஸ்மார்ட்போன் துறையையே நிர்மூலமாக்கிவிடும். ஏற்கனவே, டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு கடும் வீழ்ச்சியை சந்தித்திருப்பதால், இந்திய ஸ்மார்ட்போன் துறை பலவீனமாக இருக்கிறது. இந்த நிலையில் ஜிஎஸ்டி வரியை உயர்த்தியிருப்பது, ஸ்மார்ட்போன் விலையை உயர்த்துவதற்குக் காரணமாக அமையும். இதனால், மேக் இன் இந்தியா திட்டத்தில் பாதிப்பு ஏற்படும்” எனக் கூறியிருக்கிறார்.

**-சிவா**�,

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *