pதயாரிப்பாளர்கள் நலன் காக்க கூட்டுக்குழு!

entertainment

இந்தியாவில் 2020 ஜனவரி 30ஆம் தேதி கொரோனா தொற்று கண்டறியப்பட்டது. ஏப்ரல் மாதம் தேசம் தழுவிய ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால் திரைப்படத் துறை மொத்தமாக முடங்கியது. அதிலிருந்து இன்றுவரை மீண்டு வர முடியாமல் தயாரிப்பாளர்களும், திரையரங்கு உரிமையாளர்களும் தடுமாறி வருகின்றனர்

ஏனெனில் திரைப்படத் துறையில் அதிகமான முதலீடு செய்திருப்பதும் செய்யப்பட்ட முதலீட்டுக்குப் பொறுப்பானவர்களும் இந்த இருவர் மட்டும்தான். 2020 ஏப்ரல் மாதம்

கொரோனா ஊரடங்கு 2021 ஜனவரியில் சற்று தளர்வு ஏற்பட்டு மீண்டும் ஏப்ரலில் ஊரடங்கு தொழில்கள் முடக்கம் ஏற்பட்டபோதெல்லாம் தமிழகம் தவிர்த்து கன்னடம், மலையாளம், தெலுங்கு, இந்தி, திரைப்படத் துறையில் சினிமாவை மீண்டும் பழைய நிலைக்குக் கொண்டு வருவதற்கான முயற்சிகளில் கோடிகளில் சம்பளம் வாங்கும் நடிகர் முதல் கோடிக்கணக்கான முதலீடு செய்த தயாரிப்பாளர்கள் வரை ஈடுபட்டனர்.

அப்படிப்பட்ட எந்தவிதமான முயற்சியும் தமிழ் சினிமாவில் மேற்கொள்ளப்படவில்லை. ஆனால், தங்களது பலத்தைக் காட்ட புதிது புதிதாக சங்கங்கள் தொடங்கப்பட்டன. தயாரிப்பாளர்களையும், நடிகர்களையும் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர நடப்பு திரைப்பட விநியோகஸ்தர்கள் சங்கம் தொடங்கப்பட்டது.

இதனால் தமிழகத்தில் விநியோக ஏரியாவில் செயல்பட்டு வந்த விநியோகஸ்தர்கள் சங்கங்கள் மூடு விழா காண இருக்கின்றன. சிறு முதலீட்டு விநியோகஸ்தர்கள் மொத்தமாக அழிக்கப்படுவார்கள்.

கொரோனா தொற்று காலத்தில் சிறு தொழில்கள் அழிவை நோக்கி போனது. கார்ப்பரேட் நிறுவனங்களை பெரு முதலாளிகளை அரசாங்கம் ஊக்கப்படுத்தி வளர்த்தது. அதேபோன்ற நிலைதான் தமிழ் சினிமாவில் நடந்தேறி முடிந்துள்ளது. தயாரிப்பு, விநியோகம், திரையிடல் என மூன்றையும் குறிப்பிட்ட சில நபர்களே எதிர்வரும் காலங்களில் தீர்மானிப்பார்கள். அதைப் பாதுகாப்பாக அமல்படுத்த நடப்பு விநியோகஸ்தர்கள் சங்கம் வேலை செய்யப்போகிறது.

இதுபற்றிய எந்த தொலைநோக்கு பார்வையும் இன்றி தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத்தில் இருந்து நடப்பு தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கம் தொடங்கப்பட்டது. இதனால் தயாரிப்பாளர்களுக்கு எந்த நன்மையும் ஏற்படவில்லை. இந்த நிலையில் தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்களின் நலனைக்கருதி, ஒருங்கிணைந்த கூட்டுக்குழு ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கம், நடப்பு தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கம் இணைந்து வெளியிட்டுள்ள அறிக்கையில்,

தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்களின் நலன் கருதி செப்டம்பர் 17 அன்று தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்க நிர்வாகிகள், தமிழ்த் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர்கள் சங்க நிர்வாகிகள், தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்க முன்னாள் தலைவர்கள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

அந்தக் கூட்டத்தில் தயாரிப்பாளர்கள் அனைவரின் நலனுக்காக இரண்டு சங்கங்களும் ஒன்றிணைந்து செயல்பட தீர்மானம் நிறைவேற்றப்பட்டு ஓர் ஒருங்கிணைந்த தயாரிப்பாளர்கள் கூட்டுக்குழு (Joint Producers Committee or JPC) அமைப்பது என்று முடிவெடுக்கப்பட்டுள்ளது. இந்த கூட்டத்தில் சில தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அதன்படி,

1. தற்போது தயாரிப்பில் உள்ள திரைப்படங்களுக்கு முன்னுரிமை அளித்து நடிகர்கள், தொழில்நுட்பக் கலைஞர்களைப் பயன்படுத்தி படப்பிடிப்புகளை நடத்துவது என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

2. திரைப்பட தயாரிப்பாளர்களின் வருங்காலத்தைக் கருத்தில்கொண்டு நிலுவையில் உள்ள படங்களின் வெளியீட்டுக்கு உதவுவது என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

3. விளம்பரச் செலவுகளைக் குறைப்பது குறித்தும், விபிஎஃப் கட்டணத்தை முறைப்படுத்துவது குறித்தும் முக்கிய முடிவுகள் எடுக்கப்படும்.

4.பெப்சியுடன் பேச்சுவார்த்தையில் ஒருங்கிணைந்து செயல்பட்டு தயாரிப்பாளர்களின் நலனுக்காக ஒப்பந்தங்கள் செய்யப்படும்.

மேலும் ஒவ்வொரு மாதமும் இருமுறை சந்தித்து தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்களின் நலனுக்கான செயல்பாடுகளை இரண்டு சங்கங்களும் இணைந்து முடிவெடுத்து செயல்படுத்த உறுதி செய்யப்பட்டது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒருங்கிணைந்த கூட்டுக்குழுவில் தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்க முன்னாள் தலைவர்கள் பாரதிராஜா, கே.முரளிதரன், எஸ்.ஏ.சந்திரசேகரன், கேயார், கலைப்புலி எஸ்.தாணு,

தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்க நிர்வாகிகள் முரளி ராமநாராயணன், ஆர்.ராதாகிருஷ்ணன், டி.மன்னன், எஸ்.கதிரேசன், ஆர்.கே.சுரேஷ், எஸ்.சந்திரபிரகாஷ் ஜெயின்.

தமிழ்த் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர்கள் சங்க நிர்வாகிகள் டி.ஜி.தியாகராஜன், டி.சிவா, ஜி.தனஞ்செயன், எஸ்.ஆர்.பிரபு, எஸ்.லலித்குமார், சுரேஷ் காமாட்சி ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

**-இராமானுஜம்**

�,

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *