விமர்சனம் : வாத்தி!

சினிமா

சீரியசாக சொன்னாலும் சிரிப்பு மூட்டிச் சொன்னாலும், அட்வைஸ் என்றாலே இளைய தலைமுறை காதைப் பொத்திக் கொள்கிறது. அவர்கள் மத்தியில் புத்திமதி சொல்வது கஷ்டமான விஷயம். அதுவும் திரைப்படத்தில் கருத்து சொல்வதென்பது முயற்கொம்பைப் பிடிக்கும் காரியம். கொஞ்சம் பிசகினாலும் ‘க்ரிஞ்ச்’ என்று சொல்லிவிட்டுக் கிளம்பிவிடுவார்கள். ஆனாலும், இன்றைய சமூகத்திற்குத் தேவையான கருத்தொன்றை சொல்லியே தீருவேன் என்று அடம்பிடித்திருக்கிறார் ‘வாத்தி’ தந்திருக்கும் இயக்குனர் வெங்கி அட்லூரி.

எந்தவிதப் பொறுப்புகளையும் சுமக்கத் தயாராக இல்லாமல், எந்நேரமும் தன் மனதுக்குகந்த கேளிக்கைகளில் மட்டுமே கவனம் செலுத்த தயாராக இருக்கிற ஒரு இளைஞனாகவே பல படங்களில் நடித்த தனுஷ், இதில் ஆசிரியராக நடித்துள்ளார் என்பது இன்னொரு சிறப்பம்சம்.

‘அதெல்லாம் சரி, படம் பார்க்குறமாதிரி இருக்கா’ என்று நீங்கள் கேட்பது புரிகிறது.

பாடமெடுக்கும் தனுஷ்

2000ஆவது ஆண்டில் நிகழ்வது போல, இக்கதை அமைக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் தனியார் பள்ளிகள் அதிகக் கட்டணம் வசூலிப்பதாக ஒரு பிரச்சனை எழுகிறது. அதிலிருந்து மக்களின் கவனத்தைத் திசை திருப்புவதற்காக, தனியார் பள்ளிகளைச் சேர்ந்த ஆசிரியர்களை நான்காண்டுகளுக்கு அரசுப் பள்ளிகளில் பாடம் நடத்தச் செய்யலாம் என்கிறார் தனியார் பள்ளிகள் சங்கத் தலைவரான திருப்பதி (சமுத்திரக்கனி).

மற்ற பள்ளிகளின் உரிமையாளர்களும் ஒப்புதல் தெரிவிக்க, அத்திட்டம் மாநில அரசின் உதவியுடன் நிறைவேறுகிறது. ஆனால், தனியார் பள்ளிகளில் இரண்டாம், மூன்றாம் நிலையில் இருக்கும் ஆசிரியர்களே அதற்காக அனுப்பப்படுகின்றனர்.

அப்படித்தான் திருப்பதி நடத்திவரும் பள்ளியொன்றில் பணியாற்றும் பாலமுருகன் (தனுஷ்), அவ்வாறு சோழவரத்தில் உள்ள அரசுப் பள்ளிக்குச் செல்கிறார்.

அந்த ஊரில், மாணவ மாணவிகள் பள்ளிக்கு வருவதில்லை. குடும்ப வறுமை காரணமாகப் பலர் வேலைக்குச் சென்று வருகின்றனர். தவிர சாதிப் பாகுபாடு, குறைவான வருவாய், தனியார் பள்ளிகளின் கவர்ச்சி என்று பல காரணங்கள் மாணவர்களின் வரவைத் தடுக்கின்றன. அனைத்தையும் மீறி, அம்மாணவர்களைப் பள்ளிக்கு வரவழைக்கிறார் பாலமுருகன். பதினோராம் வகுப்பில் அவர்களைச் சிறப்பான மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற வைக்கிறார். அது, திருப்பதியின் கண்களை உறுத்துகிறது.

இது போன்று பல ஆசிரியர்கள் முன்னேற்றத்தைச் செயல்படுத்தினால், தனியார் பள்ளிகள் நிலை கவலைக்கிடமாகும் என்று யோசிக்கிறார் திருப்பதி. அம்மாணவர்களின் படிப்பை முடக்குவதற்கான வேலைகளில் இறங்குகிறார். அந்த கிராமத்திற்குள் பாலமுருகன் நுழையமுடியாதபடி முட்டுக்கட்டைகளைப் போடுகிறார். தனிமனிதராக அவற்றை எதிர்கொள்ள இயலாமல் பாலமுருகன் தவிக்க, திடீரென்று அம்மாணவர்களை ரகசியமாகப் படிக்க வைக்கும் ஐடியா ஒன்று அவரது மனதில் எழுகிறது.

பாலமுருகனின் ஐடியா பலன் தந்ததா இல்லையா என்பதை அறிய ‘வாத்தி’யை முழுதாகக் காணலாம்!

எம்ஜிஆர் காலத்து கதை என்றாலும், இன்றைய சூழலுடன் பொருத்திப் பார்க்கும் வகையில் காட்சிகளையும் வசனங்களையும் அமைத்திருக்கிறார் இயக்குனர் வெங்கி அட்லூரி. அதுவே தியேட்டரில் ‘க்ரிஞ்ச்’ என்று சொல்லைத் தவிர்க்க வழி செய்கிறது.

’மாஸ்’ வாத்தி!

’நாயகன்’ கமல் போன்று மடித்துவிடப்பட்ட அரைக்கை சட்டையுடன் படம் முழுக்க ‘ஆர்ம்ஸ்’ காட்டுகிறார் தனுஷ். ஆக்‌ஷன் காட்சிகளுக்கு அது ஓகே. ஆனால், மாணவர்களுக்குப் பாடம் நடத்தும்போதும் அப்படியே வருவதை என்னவென்று சொல்வது? அதற்காக, தனுஷின் நடிப்பைக் குறை கூறுவதை விட அபத்தம் வேறிருக்காது. சிரிப்பூட்டும் இடங்கள் தவிர்த்து, சீரியசான காட்சிகளில் மனுஷன் கண் கலங்க வைக்கிறார்.

தனுஷ் உடன் பணியாற்றும் ஒரு ஆசிரியையாக வருகிறார் நாயகி சம்யுக்தா. அவருக்கும் சில காட்சிகள் இருக்கின்றன. அவை முழுக்கவே காதலுணர்வை வெளிப்படுத்துபவை. அதுதான் எரிச்சலூட்டுகிறது.

வில்லனாக வரும் சமுத்திரக்கனி, தோற்றத்தில் பி.எஸ்.வீரப்பாவை நினைவூட்டுகிறார். நல்லவேளை, ’மணந்தால் மகாதேவி’ என்கிற ரேஞ்சில் வசனம் பேசவில்லை. இடைவேளைக் காட்சியில் பின்னியெடுத்தாலும், கிளைமேக்ஸில் அவருக்கான பங்கு தரப்படவில்லை.

ஆடுகளம் நரேன், பிரவீனா, ஹரீஷ் பேரடி, மொட்ட ராஜேந்திரன், ஆர்ஜே சரா என்று ஏற்கனவே தமிழ் திரைப்படங்களில் பார்த்த முகங்களோடு தணிகல பரணி, நாரா ஸ்ரீனிவாஸ், பம்மி சாய், ஹைபர் ஆதி என்று தெலுங்கு கலைஞர்களும் இதில் நடித்துள்ளனர். இப்படம் தமிழ், தெலுங்கு என இரு மொழிகளிலும் எடுக்கப்பட்டதே அதற்கான காரணம்.

ஹைபர் ஆதி, சரா சம்பந்தப்பட்ட காட்சிகள் லேசாக கிச்சுகிச்சு மூட்டுகின்றன. ஆனால், அப்பாத்திரங்கள் தேவையில்லை என்று முதல் அரை மணி நேரத்திலேயே கழற்றிவிட்டிருக்கிறார் இயக்குனர். மாணவ மாணவியராகப் பலர் வந்தபோதும், அவர்களில் கென் கருணாஸ் மட்டுமே நமக்குத் தெரிந்தவராக இருக்கிறார். அனைவருமே பின்பாதியில் சிறப்பாக நடித்துள்ளனர்.

இப்படத்தின் மாபெரும் பலம் ஜிவி பிரகாஷின் இசை. ’வா வாத்தி’ பாடல் இனிவரும் நாட்களில் இளசுகளின் ‘இன்ஸ்டாகிராம் ரீல்ஸ்’களில் தவிர்க்க முடியாததாக மாறும். நாடோடி மன்னன், சூரிய பறவைகளே பாடல்கள் சட்டென்று நம்மைக் கவர்கின்றன. இவற்றைவிட, பின்னணி இசை மூலம் காட்சிகளின் அழுத்தம் கூட்ட உதவியிருக்கிறார் ஜிவி பிரகாஷ். கொஞ்சம் பிசகினாலும் கிண்டலடித்துவிடும் ஆபத்தை அறவே தவிர்க்க அதுவே உதவியிருக்கிறது.

ஜெ.யுவராஜின் ஒளிப்பதிவு, நவீன் நூலியின் படத்தொகுப்பு இரண்டும் ஒன்றிணைந்து ஒரு கமர்ஷியல் படம் பார்க்கும் உணர்வை அதிகப்படுத்துகின்றன. அவினாஷ் கொல்லாவின் கலை வடிவமைப்புதான், ‘எதெல்லாம் ஸ்டூடியோ காட்சிகள்’ என்று கணக்கு போட வைத்திருக்கிறது.

’கேட்ட பொருளை வாங்கிக் கொடுக்கலேன்னா குழந்தைங்க ஒருநாள் தான் வருத்தப்படுவாங்க பெத்தவங்க அதை நினைச்சு வாழ்க்கை முழுக்க வருத்தப்படுவாங்க’, ‘படிப்புதான் மரியாதையை கொடுக்கும்’ என்பது போன்ற இயல்பான வசனங்கள் ஈர்ப்பைக் கூட்டுகின்றன.

ஒரு ஆசிரியர் மூலமாக கிராமத்து அரசுப் பள்ளிக்கூடத்தில் மாணவ மாணவியர் சிறப்பான நிலையை எட்டுகின்றனர் என்பதுதான் ‘வாத்தி’யின் அடிப்படைக் கதை. இருபதாண்டுகளுக்கு முன்பு நடப்பதாகச் சொல்லி, இக்கதைக்கு ‘கிளாசிக்’ அந்தஸ்தை தர முயன்றிருக்கிறார் இயக்குனர் வெங்கி அட்லூரி. ஆனால், அதனை யதார்த்தம் நிறைந்த திரைக்கதையாகத் தராமல் ஹீரோயிசத்துக்கு வழி விட்டிருக்கிறார். அதுவே ‘வாத்தி’யை மாஸ் படமாக மடை மாற்றியிருக்கிறது. திரைக்கதையில் நேர்த்தியை எதிர்பார்க்கும் ரசிகர்களுக்கு இது அலர்ஜியான விஷயமே!

நிச்சயம் பாராட்டலாம்!

கடந்த பத்தாண்டுகளாக மகேஷ்பாபு நடித்த தெலுங்குப் படங்கள் ஏதேனும் ஒரு சமூகப் பிரச்சனையை மையப்படுத்தியதாகவே இருந்து வருகின்றன. அந்த பாதிப்புகளுக்கான தீர்வுகள் ஹீரோ எனும் ஒரு தனிமனிதரைச் சார்ந்திருப்பதாகக் காட்டப்பட்டாலும், அப்பிரச்சனைகள் பேசுவதற்குரியவை என்பதை நிச்சயம் கவனத்தில் கொள்ள வேண்டும். நம்மூரில் ரஜினி, கமல் போன்றவர்கள் இந்த விஷயத்தை பெரிதாகக் கண்டுகொள்வதில்லை. ஆனால், சமீபகாலமாக விஜய்யும் அஜித்தும் தம் படங்களில் லேசுபாசாக ரசிகர்களுக்கு ‘மெசேஜ்’ சொல்லி வருகின்றனர்.

அந்த வகையில், தம் ரசிகர்களில் பலர் விடலைகள் என்று தெரிந்தும் அவர்களுக்குப் புத்திமதி சொல்லும் கதையொன்றைத் தேர்ந்தெடுத்த காரணத்திற்காக தனுஷை பாராட்டியே தீர வேண்டும். எங்கும் தனியார் பள்ளிகள் மலிந்திருக்கும் காலகட்டத்தில், பணம் இல்லாமல் எவரும் கல்வியைப் புறக்கணித்துவிடக் கூடாது என்று வலியுறுத்தியிருப்பது நல்ல விஷயம்.

ஷங்கரின் ‘முதல்வன்’ படத்தில் மாற்றுத்திறனாளி ஒருவர் நாயகன் அர்ஜுனை பார்த்து ‘என்னை மாதிரியே இந்த நாடும் இருக்கு சார்’ என்பார். இன்றைய தலைமுறைக்கு அந்த காட்சி நிச்சயம் ‘க்ரிஞ்ச்’ தான். ஆனாலும், அது போன்ற கிண்டல்களை எதிர்கொண்டுவிடலாம் என்ற நம்பிக்கையுடன் வாத்தியைத் தந்திருக்கிறார் இயக்குனர்.

வழக்கமான காதல், நகைச்சுவை காட்சிகளைத் தாண்டி முகம் நிறைய செயற்கைப்பூச்சுகளோடு அழும் மாணவ மாணவியரைப் பார்ப்பது அபத்தமாகத்தான் இருக்கிறது. ‘கமர்ஷியல் சினிமா’ என்ற போர்வையில் எரிச்சல்படுத்துகிறார்களே என்ற எண்ணம் மேலெழும் அளவுக்குச் சட்டென்று பல குறைகளும் தென்படுகின்றன.

அதையெல்லாம் தாண்டி, ‘படிப்பு ரொம்ப முக்கியம் குமாரு’ என்று சொல்லும் இடத்தில் தனுஷ் இருக்கிறார் என்பதும், பதின்ம வயதில் இருக்கும் ஆண்களையும் பெண்களையும் அது சென்றடையும் என்பதும் ‘வாத்தி’யின் சிறப்பம்சம். கூடவே, ‘நெஞ்சை உருக்கும் தருணங்கள்’ என்பது போல கண்ணீர் விட்டுக் கதற வைக்கும் காட்சியமைப்புகளும் நிறையவே உண்டு என்பதுதான் இப்படத்தின் பலம்.

உதய் பாடகலிங்கம்

சென்னையில் கரும்பு விவசாயிகள் கைது!

தடா பெரியசாமி வீடு தாக்குதல் வழக்கு: திருமாவளவனின் பெயர் சேர்ப்பு?

+1
1
+1
1
+1
0
+1
8
+1
1
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *