அன்று வாரிசு இன்று வாத்தி : ரெட் ஜெயண்ட்டை எதிர்த்து வெற்றி பெறுவாரா லலித்குமார்?

Published On:

| By Kavi

நடிகர் தனுஷ் நடித்துள்ள ‘வாத்தி’ திரைப்படத்தின் ட்ரெய்லர் நேற்று முன தினம் வெளியாகி உள்ளது. இந்தப் படம் பிப்ரவரி 17 அன்று  தமிழ், தெலுங்கு மொழியில் வெளியாக உள்ளது.

இந்தப் படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார். பாலமுருகன் எனும் கதாபாத்திரத்தில் ஆசிரியராக தனுஷ் நடித்துள்ளார். சம்யுக்தா, சமுத்திரக்கனி, சாய் குமார், ஆடுகளம் நரேன், இளவரசு, மொட்ட ராஜேந்திரன் உள்ளிட்டோர் இந்தப் படத்தில் நடித்துள்ளனர்.

இந்தப் படத்தை சித்தாரா என்டர்டெயின்மென்ட் மற்றும் பார்ச்சூன் ஃபோர் சினிமாஸ் இணைந்து தயாரித்துள்ளன. இயக்குநர் வெங்கி அட்லூரி இயக்கி உள்ளார்.

வாத்தி படம் கல்வி என்பது வியாபாரமாக்கப்பட்டதை திரைக்கதையாக கொண்டது என ஏற்கனவே படத்தின் இயக்குநர் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பேசியிருந்தார்.

தற்போது வெளியாகி உள்ள வாத்தி படத்தின் டிரைலர் கல்வித்துறையில் உள்ள குறைபாடுகளை சுட்டிக்காட்டும் படமாகவும், கல்வி எப்படி வியாபாரமாக உள்ளது. அதனால் மாணவர்கள் எப்படி பாதிக்கப்படுகின்றனர் என்பதை எடுத்துரைக்கும் படமாகவும் உருவாகி இருப்பதை டிரைலரை பார்க்கும் போதே புரிகிறது.

தனுஷ் கண்டிப்பான, மாணவர்களுக்காக குரல் கொடுக்கும் வாத்தியாராகவும் இருக்கிறார் என்பதை உறுதிப்படுத்துகிறது.

தரமான கல்வி கொடுக்கணும்னா காசு கொடுக்கணும்…, படிக்கணும் என்கிற ஆசை எவனுக்கு வந்தாலும் பணம் கட்டுனா தான் படிப்பு கிடைக்கும்…, கல்வியில் கிடைக்கும் காசு அரசியலில் கிடைக்காது…, பணம் எப்படி வேண்டுமானாலும் சம்பாதிக்கலாம், ஆனால் படிப்பு மட்டும் தான் மரியாதையை சம்பாதித்து தரும்….” என்பது போன்ற வசனங்கள் டிரைலரில் இடம் பெற்று இருப்பது படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.

அதுபோன்று வாத்தி படத்தின் வியாபாரமும், வெளியீடும் தமிழ் சினிமா வியாபார வட்டாரத்தில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. வாத்தி படத்தின் தமிழ்நாடு விநியோக உரிமையை வாங்குவதற்கு விநியோகஸ்தர்கள் ஆர்வம் காட்டாத நிலையில் 11 கோடி ரூபாய்க்கு செவன் ஸ்கீரீன் லலித்குமார் வாங்கியுள்ளார்.

ஜனவரி 11 அன்று வெளியான வாரிசு படத்தின் தமிழ்நாடு உரிமையை வாங்கி வெளியிட்டவர் லலித்குமார். அஜித்குமார் நடித்த துணிவு படத்தை தமிழகத்தில் ரெட் ஜெயண்ட் மூவீஸ் வெளியிட்டபோது வாரிசு படத்திற்கு திரையரங்குகள் கிடைக்காது என கூறப்பட்ட நிலையில் அதனை சமாளித்து துணிவு படத்திற்கு இணையாக வாரிசு படத்தை திரையரங்குகளில் ரீலீஸ் செய்தார் லலித்குமார்.

அதற்காக ரெட் ஜெயண்ட் மூவீஸ் நிறுவனத்திற்கு வாரிசு படத்தின் ஐந்து ஏரியா விநியோக உரிமைகளை வழங்கினார். இருந்தபோதிலும் தமிழ்நாட்டில் துணிவு படத்திற்கு நள்ளிரவு 1 மணி சிறப்புக்காட்சிக்கு அனுமதி வழங்கியவர்கள் வாரிசு படத்திற்கு வழங்கவில்லை.

தாங்கள் தமிழ்நாடு முழுவதும் வெளியிடும் துணிவு படம் வாரிசு வசூலை காட்டிலும் அதிகம் வசூலிக்க வேண்டும் என்பதற்காக அதிகமான திரைகள், அதிகமான காட்சிகள், அதிக விலைக்கு டிக்கெட் விற்பனை என ரெட் ஜெயண்ட் மூவீஸ் அரசு எந்திரத்தை பயன்படுத்தினார்கள்.

இருந்தபோதிலும் துணிவு படத்தின் வசூலை காட்டிலும் வாரிசு தமிழகத்தில் அதிகமான வசூலை குவித்தது. கடந்த 2022 ஆம் ஆண்டு வணிகரீதியாக வெற்றி பெற்ற படங்கள் அனைத்தும் ரெட் ஜெயண்ட் மூவீஸ் மூலமாக வெளியானது.

2023ஆம் ஆண்டு தொடக்கத்தில் வெளியான துணிவு படத்தை போன்று வாரிசு படத்தை கைப்பற்ற ரெட் ஜெயண்ட் மூவீஸ் திரைமறைவில் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டது.

அதற்காக திரையரங்குகளில் ஆளும்கட்சியின் அதிகாரத்தை பயன்படுத்தினார்கள். ரெட் ஜெயண்ட் மூவீஸ் ஏரியா பொறுப்பாளர்கள் அமைச்சர்கள் போன்றே தியேட்டர் முதலாளிகளிடம் வரம்பு மீறி பேசினார்கள். அடுத்து வெளிவரும் நட்சத்திர நடிகர்கள் நடித்த படங்கள் அனைத்தும் எங்கள் மூலமே வெளியாகும் எங்களை பகைத்துக்கொண்டு தியேட்டர் நடத்த முடியாது என்றெல்லாம் மிரட்டப்பட்டார்கள் திரையரங்க உரிமையாளர்கள்.

இந்த நிலையில் தான் வாரிசு படத்தை வெளியிடுவதில் ரெட் ஜெயண்ட் மூவீஸ் உடன் சுமுகமான அணுகுமுறையை கடைபிடித்த லலித்குமார் வாத்தி படத்தின் வெளியீட்டில் அதற்கு எதிரான அணுகுமுறையை பின்பற்றுகிறார் என்பது தான் தமிழ் சினிமா வட்டாரத்தில் முக்கிய விவாத பொருளாக மாறியுள்ளது.

வாத்தி படத்தின் குறிப்பிட்ட ஏரியா உரிமைகளை ரெட் ஜெயண்ட் மூவீஸ்க்கு வழங்க லலித்குமார் விரும்பினாலும், தமிழ் நாட்டின் மொத்த விநியோக உரிமையும் தங்களுக்கு கொடுக்க வேண்டும், இல்லை என்றால் வேண்டாம் என்று ரெட் ஜெயண்ட் மூவீஸ் கூறிவிட்டது.

அவர்களை மீறி தமிழ்நாட்டில் புதிய படங்களை  வெளியிட முடியாது என்கிற சூழல் தற்போதும் தமிழகத்தில் நிலவுகிறது. ஏதேனும் ஒரு வகையில் வெளியீட்டிற்கு நெருக்கடியை மறைமுகமாக உருவாக்குவார்கள் என கூறப்பட்டாலும் 11 கோடி ரூபாய்க்கு வாங்கப்பட்ட தமிழ்நாடு ஏரியா உரிமைகளை 17 கோடி ரூபாய்க்கு அவுட்ரேட் முறையில் வியாபாரம் செய்திருக்கிறார் லலித்குமார்.

படத்திற்கு பிரம்மாண்டமான முறையில் விளம்பரங்களை செய்யும் வேலைகளை செய்ய தொடங்கியிருக்கிறது செவன் ஸ்கீரீன் நிறுவனம். தமிழ்நாட்டில் ரெட் ஜெயண்ட் மூவீஸ் தயவு இல்லாமல் அல்லது அவர்களது அதிகார பலத்திற்கு எதிராக ஒரு படத்தை சக விநியோகஸ்தர்கள் துணையுடன் வெளியிட்டு வெற்றிபெற முடியும் என்பதை நிரூபிக்கும் முயற்சியில் லலித்குமார் வெற்றிபெறுவாரா என்பதை கோடம்பாக்க தமிழ் சினிமா எதிர்நோக்கியுள்ளது.

இராமானுஜம்

முதல் படத்திலேயே அதிர்ச்சி கொடுத்த குட்டி நயன்

புகைப்பட கண்காட்சியை திறந்து வைத்த முதல்வர்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel

Leave a Comment