தடா பெரியசாமி வீடு தாக்குதல் வழக்கு: திருமாவளவனின் பெயர் சேர்ப்பு?

அரசியல்

தமிழக பாஜக பட்டியலினப் பிரிவுத் தலைவர் தடா பெரியசாமியின் வீடு, கார் தாக்கப்பட்ட வழக்கில், வி.சி.க. தலைவர் திருமாவளவனையும் சேர்க்கவேண்டும் என பா.ஜ.க. தரப்பில் வலியுறுத்துகின்றனர்.

வடதமிழ்நாட்டின் முந்திரிக்காட்டுப் பகுதியில் தீவிரமாகச் செயல்பட்ட தமிழ்நாடு விடுதலைப் படையில், தன் அரசியல் பயணத்தை ஆரம்பித்தவர், தடா பெரியசாமி. அந்த அமைப்பின் முன்னணித் தலைவர்களான தமிழரசன் ஜெகநாதனுடன் இணைந்து பயணித்த பெரியசாமி, 1986 இல் அரியலூர் மாவட்டம் மருதையாற்றுப் பால குண்டுவெடிப்பு வழக்கில் சிறைக்குச் சென்றவர்.

காலப்போக்கில் தீவிரப் போக்கிலிருந்து மாறி, விடுதலைச்சிறுத்தைகள் இயக்கமாக இருந்தபோது, திருமாவளவனுடன் சேர்ந்து பணியாற்றியவர். அந்த இயக்கத்தின் முக்கிய பிரமுகராகவும் இருந்தவர், ஒரு கட்டத்தில், கருத்துமாறுபாட்டால் அந்த இயக்கத்திலிருந்து விலகினார்.

அத்துடன், அதுவரை அவரின் எதிர்நிலையாக இருந்துவந்த காஞ்சி சங்கர மடத்துடன் பெரியசாமி கைகோர்த்தார்.

அதைத் தொடர்ந்து, காஞ்சி மடாதிபதியாக இருந்த மறைந்த ஜெயேந்திரரின் ஆலோசனைப்படி அவர் நடந்து வந்தார். பா.ஜ.க.வில் சேர்ந்த அவருக்கு, அக்கட்சியின் தமிழக பட்டியலினப் பிரிவுத் தலைவர் பதவியும் அளிக்கப்பட்டது.

பாஜக நிர்வாகியான பிறகு தடா பெரியசாமி, தொடர்ந்து வி.சி.க.வைக் கடுமையாக விமர்சனம் செய்து வருகிறார். அடுத்த ஆண்டு நடைபெறும் மக்களவைத் தேர்தலில் சிதம்பரம் தொகுதியில் திருமாவளவனை எதிர்த்து போட்டியிடுவேன் என்றும் பெரியசாமி பேசிவருகிறார். இதையொட்டி, இரு தரப்பினருக்கும் கடுமையான வாதப் பிரதிவாதங்கள் நீடித்துவருகின்றன.

இந்த நிலையில், தடா பெரியசாமியின் வீடு, கார் மீது காதலர் தினமான பிப்ரவரி 14ஆம் தேதி தாக்குதல் நடத்தப்பட்டது. பெரம்பலூர் மாவட்டம் திருமாந்துறை நோவா நகரில் நிகழ்ந்த இந்தத் தாக்குதல் குறித்து, மாநிலப் புலனாய்வுத் துறை மட்டுமின்றி, மத்தியப் புலனாய்வுத் துறையும் விசாரணையை முடுக்கிவிட்டது.

அதில், தாக்குதல் நடத்தியவர்களையும் அவர்கள் கண்டுபிடித்துள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. தாக்குதலில் ஈடுபட்டதாகக் குற்றம்சாட்டப்படும் நபர், சென்னை அசோக் நகரில் அமைந்துள்ள விசிக அலுவலகம் அருகில், ஒரு வழக்கறிஞரின் பாதுகாப்பில் இருக்கிறார் என்றும் காவல்துறையில் தெரிவிக்கின்றனர்.

இந்நிலையில், ஈரோடு பிரச்சாரத்திற்குச் சென்று திரும்பிய வி.சி.க. தலைவர் திருமாவளவனை, சென்னை விமான நிலையத்தில் அக்கட்சியினர் திரளாக வரவேற்றனர்.

அப்போது திருமாவளவனுக்கு அருகில் தேடப்படும் நபரான நிரபு இருந்தது, விமான நிலைய சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. அதை ஆதாரமாக எடுத்துள்ள தமிழக பாஜகவினர், கட்சித் தலைமைக்கு அனுப்பியுள்ளனர். சமூக ஊடகங்களிலும் இதைப் பரப்பிவருகின்றனர்.

தடா பெரியசாமியின் வீடு, காரை தாக்கியதாகக் குற்றம்சாட்டப்படும் நிரபு, திருமாவளவன் பாதுகாப்பில் இருந்துவருகிறார் என்றும், அதனால் திருமாவளவன் மீது 120 பி சதி வழக்கு பதிவுசெய்து, அவரைக் கைதுசெய்யவும் வேண்டும் என்றும், காவல்துறை தலைமையிடத்தில் பாஜக தரப்பு வலியுறுத்திவருகிறது.

அதிகாரபூர்வமாக டிஜிபி சைலேந்திரபாபுவைச் சந்தித்து புகார் அளிக்கவும் பாஜக நிர்வாகிகள் முடிவுசெய்துள்ளனர்.

thada periyasami home attack case thirumavalavan name joined

யார் இந்த கு. ரா. நிரபு?

கடலூர் மாவட்டம், ஆலப்பாக்கம் ஊராட்சி, குரவன்மேடு கிராமத்தைச் சேர்ந்தவர் நிரபு. காவல்துறையால் என்கவுண்டர் செய்யப்பட்ட மணல்மேடு சங்கருடன் ஆரம்பத்தில் இருந்தவர் எனக் கூறப்படுகிறது.

இவர் மீது கடலூர், புதுச்சத்திரம், மயிலாடுதுறை, கும்பகோணம் ஆகிய பகுதிகளில் 15-க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளன.

கடலூர் மாவட்டம், புதுச்சத்திரம் காவல்நிலையத்தில் பெட்ரோல் குண்டு வீசிய வழக்கு (குற்ற எண் 308/2022), கொலை முயற்சி வழக்கு (குற்ற எண் 699/2022) நிலுவையில் உள்ளன.

தடா பெரியசாமியின் வீட்டைத் தாக்கிய வழக்கில், நிரபுவையும் மேலும் சிலரையும், காவல்துறையினர் தீவிரமாகத் தேடிவருகின்றனர் என்றும், விரைவில் குற்றவாளிகள் கைது செய்யப்படுவார்கள் என்றும் கூறுகின்றனர் போலீஸ் உயர் அதிகாரிகள்

வணங்காமுடி

வாரிசு ஓடிடி ரிலீஸ் தேதி வெளியானது!

Data Story : ஈரோடு கிழக்கு – புள்ளி விவரங்கள் சொல்வது என்ன?

+1
2
+1
0
+1
0
+1
4
+1
2
+1
1
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *