யோதா : விமர்சனம்!

சினிமா

இப்படியொரு ஆக்‌ஷன் படம் பார்த்து எவ்ளோ நாளாச்சு!

தியேட்டருக்குள் நுழைந்தபிறகு, பெரும்பாலான நிமிடங்கள் இருக்கை நுனியிலேயே நம்மை இருக்கச் செய்த படங்களை விரல் விட்டு எண்ணிவிடலாம். அவை பிரமாண்டமான படங்களாகத்தான் இருக்க வேண்டுமென்ற கட்டாயமில்லை. அதேநேரத்தில் கற்பனைக்கு அப்பாற்பட்ட கதையம்சம், எதிர்பாராத திருப்பங்களுடன் கூடிய உச்ச நட்சத்திரங்கள் இடம்பெறும் பெரிய பட்ஜெட் திரைப்படமொன்று அந்த மாயாஜாலத்தை நிகழ்த்தும்போது, அந்த அனுபவத்திற்காகவே ரசிகர்கள் ஒன்று திரள்வார்கள். சித்தார்த் மல்ஹோத்ரா, திஷா பதானி, ராஷி கன்னா உள்ளிட்ட பலர் நடிப்பில் சாகர் ஆம்ப்ரே மற்றும் புஷ்கர் ஓஜா இயக்கியுள்ள இந்திப்படமான ‘யோதா’ அந்த மாயாஜாலத்தை நிகழ்த்தியிருக்கிறது.

சரி, இந்த படத்தில் அப்படியென்ன இருக்கிறது?

யோதா என்றால்..!?

இந்தியாவிலுள்ள விஐபிக்களை பாதுகாப்பதற்காக ‘யோதா’ என்ற படை அமைக்கப்படுகிறது. யோதா என்றால் போர்வீரன் என்று அர்த்தம். அப்படையை உருவாக்கியவர் மேஜர் சுரேந்தர் கட்யால் (ரோனித் ராய்). அவரது மகன் அருண் (சித்தார்த் மல்ஹோத்ரா) ஒரு ராணுவ வீரர். அவரும் யோதா படையில் பணியாற்றும் வாய்ப்பினைப் பெறுகிறார்.

ஒருமுறை அணுசக்தி ஆராய்ச்சியில் ஈடுபடும் விஞ்ஞானி ஒருவருடன் அவர் பயணிக்கும் விமானம், ஒரு தீவிரவாத அமைப்பினரால் கடத்தப்படுகிறது. அமிர்தசரஸ் விமானநிலையத்தில் அது நிறுத்தப்படுகிறது.

பிரதமர் அலுவலகத்தில் முக்கியப் பொறுப்பில் இருக்கும் பிரியம்வதா (ராஷி கன்னா), டெல்லியில் இருந்து அந்த தீவிரவாத அமைப்பினருடன் தொலைபேசியில் பேச்சுவார்த்தையில் ஈடுபடுகிறார். அவரது கணவர் தான் அருண்.

விமான நிலைய வளாகத்தில் யோதா படையினர் தயார் நிலையில் இருக்கின்றனர். அவர்களது துணையுடன், பயணிகளுக்கு எந்தச் சேதமும் இல்லாமல் அந்த ‘ஹைஜாக்’கை முறியடிப்பதுதான் பிரியம்வதாவின் இலக்கு.

இந்த நிலையில், விமானத்திற்குள் இருக்கும் அருண் ’உடனடியாகப் படைகளை அனுப்புங்கள்’ என்று வெளியில் இருப்பவர்களுக்கு ‘சிக்னல்’ கொடுக்கிறார். அதற்காக, விமானத்தின் கீழ் பகுதியில் தீப்பற்ற வைக்கிறார். அப்படியிருந்தும், முடிவெடுக்கும் பொறுப்பில் உள்ள தலைவர்கள் அங்கில்லாத காரணத்தால் அருணின் இந்த ‘ஆபரேஷனுக்கு’ ஓகே சொல்ல முடியாமல் தவிக்கிறார் பிரியம்வதா.

அதற்குள், விமானப் பயணிகளிடம் பாஸ்போர்ட்டை பிடுங்க ஆரம்பிக்கின்றனர் தீவிரவாதிகள். அப்போது, விஞ்ஞானியிடம் விஐபி பாஸ்போர்ட் இருப்பது தெரிந்ததும் அவரைத் தனியே வைக்க முயற்சிக்கின்றனர். அதனைத் தடுத்து, விமானத்தின் கீழ்பகுதிக்குச் சில பயணிகளோடு அந்த விஞ்ஞானியைக் கூட்டிச் செல்கிறார் அருண்.

ஆனால், அங்கு தீவிரவாதிகளோடு நடக்கும் சண்டையில் விமானத்தில் இருந்து அவர் தூக்கி வீசப்படுகிறார். விமானம் அங்கிருந்து பாகிஸ்தானுக்குக் கிளம்புகிறது.

இரண்டு நாட்கள் கழித்து, பாகிஸ்தானில் இருந்து திரும்பும் விமானத்தில் அந்த விஞ்ஞானியின் சடலம் இருக்கிறது. யோதா படையைச் சேர்ந்த அருணின் பொறுப்பின்மைதான் நடந்த சம்பவத்திற்குக் காரணம் என்று அவர் மீது குற்றம்சாட்டப்படுகிறது. ’விஞ்ஞானிக்குத் தன்னால் பாதுகாப்பு தர முடியவில்லையே’ என்று தவிக்கும் அருணிடத்தில் இந்தக் குற்றச்சாட்டு கொதிப்பை உண்டுபண்ணுகிறது.

தந்தை உருவாக்கிய ‘யோதா’வைக் கலைக்கும் அரசின் முடிவை எதிர்த்து, அவர் கடுமையாகப் போராடுகிறார். அவருடன் பணியாற்றுபவர்கள் ஒவ்வொருவராக விலகத் தொடங்குகின்றனர். வெறுமையும் விரக்தியும் அருணிடம் பெருக, அது அவரது மண வாழ்க்கை சீர்குலைகிறது. பிரியம்வதா நீட்டும் ‘விவாகரத்து விண்ணப்பத்தில்’ கையெழுத்திட்டு விட்டுச் செல்கிறார் அருண்.

சில ஆண்டுகள் கழித்து, அருண் ஒரு விமானத்தில் பயணிப்பதற்காக டெல்லியில் இருந்து கிளம்புகிறார். அப்போது, அவர் விமானப் பயணிகளுக்குப் பாதுகாப்பு அளிக்கும் ‘கமாண்டோ’ ஆக இருக்கிறார். விமான நிலையத்தில் அவர் மீது ஒருவர் மோதுகிறார். அப்போது கீழே விழும் டிக்கெட்டில் அருண் பெயர் எழுதியிருக்கிறது.

அதே நேரத்தில், அவர் பயணிக்க வேண்டிய விமானத்திற்குப் பதிலாக வேறொன்றில் பயணிக்குமாறு ‘குறுஞ்செய்தி’ வருகிறது.

அதனைச் செய்யத் தொடங்கியபிறகு, எல்லாமே தலைகீழாகிறது. கடந்த கால அனுபவத்தைக் கொண்டு, அந்த விமானம் கடத்தப்படுவதாக உணர்கிறார் அருண். ஆனால், அவர்தான் அந்த விமானத்தைக் கடத்துகிறார் என்பது போன்ற தோற்றம் வெளியில் திட்டமிட்டு உருவாக்கப்படுகிறது. கிடைக்கும் ஆதாரங்கள் அவருக்கு எதிராக உள்ளன.

அருண் உடன் இணைந்து பணியாற்றிய சமீர்கானுக்கு (தனுஷ் விர்வானி) இது தர்மசங்கடமான நிலைமையை ஏற்படுத்துகிறது. உடனடியாக அவர் பிரியம்வதாவைத் தொடர்பு கொள்கிறார். அப்போது, பிரியம்வதா உள்ளிட்ட அதிகாரிகள் இந்தியா – பாகிஸ்தான் அமைதிப் பேச்சுவார்த்தைக்காக பிரதமருடன் இஸ்லாமாபாத்தில் இருக்கின்றனர்.

ஒரு விமானத்தை அருண் கடத்திவிட்டதாகத் தகவல் கிடைத்தவுடன் பதறுகிறார் பிரியம்வதா. என்ன முடிவெடுப்பது என்று தெரியாமல் தடுமாறுகிறார். அதேநேரத்தில், சில பாகிஸ்தான் ஊடகங்களில் இந்திய ராணுவ வீரர் ஒருவர் விமானத்தை ‘ஹைஜாக்’ செய்ததாகச் செய்திகள் வெளியாகின்றன. வெளியில் நடப்பது என்னவென்று தெரியாதபோதும், விமானத்தில் இருக்கும் அருணுக்குத் தன்னைச் சுற்றி ஏதோ சதிவலை பின்னப்படுவதாகத் தோன்றுகிறது.

இந்தச் சதிக்குப் பின்னிருப்பவர்கள் யார்? இதற்கும் அமிர்தசரஸில் நடந்த கடத்தல் சம்பவத்திற்கும் ஏதேனும் தொடர்பிருக்கிறதா? அந்த விமானத்தில் இருக்கும் பயணிகளை உயிருடன் மீட்க அருண் போராடினாரா என்று நகர்கிறது ‘யோதா’வின் மீதிப்பாதி.

’பரபர’ திரைக்கதை!

யோதாவைக் கலைக்கும் அரசின் முடிவை எதிர்த்து அருண் போராடுவது மற்றும் பிரியம்வதா உடனான அவரது பிரிவு ஆகியன மட்டுமே இத்திரைக்கதையில் ‘மெல்ல’ நகரும் பகுதிகள். மற்றபடி, விமானப் பயணத்தை திரையில் காட்டுவதற்கு ஈடாகத் திரைக்கதையும் ‘ஜெட்’ வேகத்தில் பறக்கிறது.

முதல் அரை மணி நேரக் காட்சிகளுக்குப் பிறகு, அந்த விமானத்தை அருண் தான் கடத்தியிருக்கிறாரோ என்ற எண்ணம் பார்வையாளர்களான நமக்கு எழும். ஆனால், அப்பாத்திரத்தின் பதைபதைப்பும் பதற்றமும் ‘அது வீணான சந்தேகம்’ என்றெண்ணச் செய்யும்.

அதற்குப் பதில் சொல்லும்விதமாக, ஒவ்வொரு முடிச்சாகத் திரைக்கதையில் விடுபடும்போது சுவாரஸ்யம் மேலோங்குவதுதான் இந்தப் படத்தின் யுஎஸ்பி.

உண்மையைச் சொன்னால், சமீபகாலமாக வந்த பிரமாண்டமான ஆக்‌ஷன் படங்களில் உயிர்ப்புமிக்க திரைக்கதை இல்லை. இதில் அந்தக் குறையை நிவர்த்தி செய்திருக்கிறார் எழுத்தாக்கத்தை மேற்கொண்டிருக்கும் சாகர் ஆம்ப்ரே.

விமானம் தலைகீழாகப் பயணிக்கும்போது நாயகன் வில்லன் ஒருவருடன் மோதுவதாகக் காட்சியொன்று வருகிறது. புரளும் விமானத்தில் பயணிகளுக்கு நடுவே அவர்கள் மோதுவதாகக் காட்டப்படும் காட்சியில், விஎஃப்எக்ஸ் ஜாலங்களை மீறி ஒளிப்பதிவாளர் ஜிஷ்ணு பட்டாச்சார்ஜீயின் உழைப்பு பிரமிக்க வைக்கிறது.

போலவே, சிவகுமார் பணிக்கரின் படத்தொகுப்பு கனகச்சிதமாக அமைந்து ‘அதற்குள் இந்தக் காட்சி முடிந்துவிட்டதா’ என்றெண்ணத் தூண்டுகிறது.

ஜான் ஸ்டீவர்ட் எடூரியின் பின்னணி இசை, பரபரவென்று நகரும் திரைக்கதைக்கு உயிரூட்டியிருக்கிறது. முன்பாதியில் தன்னைச் சுற்றி சூழ்ச்சி வலை பின்னப்படுவதாக நாயகன் உணரும் காட்சிகளில், அந்த உணர்வை நமக்கு முன்கூட்டியே கடத்திவிடுகிறது. தனிஷ்க் பக்சி, விஷால் மிஷ்ரா, பிராக், ஆதித்ய தேவ் ஆகியோர் தொலைக்காட்சிகளில் மீண்டும் மீண்டும் ஒளிபரப்பத்தக்க வலையில் பாடல்களைத் தந்திருக்கின்றனர்.

சுப்ரதா சக்ரவர்த்தி, அமித்ராயின் தயாரிப்பு வடிவமைப்பானது எல்லைப்புறக் காட்சிகள், கிளைமேக்ஸ் சண்டைக்காட்சி மட்டுமல்லாமல் விமானத்தின் உட்பகுதியில் நடைபெறும் காட்சிகளில் உச்சம் தொட்டிருக்கிறது.

போலவே சுனில் ரோட்ரிக்ஸ் மற்றும் க்ரெக் மாக்ரேவின் சண்டைக்காட்சி வடிவமைப்பு ஆக்‌ஷன் பிரியர்களுக்கு ‘அல்வா’ போல அமைந்துள்ளது.

நாயகனாக நடித்திருக்கும் சித்தார்த் மல்ஹோத்ரா ‘ஏக் வில்லன்’, ‘எ ஜெண்டில்மேன்’, ‘இட்டபாஹ்’, ‘ஷெர்ஷா’, ‘மிஷன் மஜ்னு’ போன்ற படங்களில் நம்மைத் தன்வசப்படுத்தும்விதமான நடிப்பைத் தந்தவர் தான். மீண்டுமொருமுறை அந்த மேஜிக்கை இதிலும் நிகழ்த்தியிருக்கிறார். ‘கான்’களின் தலைமுறைக்கு அடுத்த வரிசையில் இருப்பது அவர் தான் என்று நிரூபித்திருக்கிறது ‘யோதா’.

இமைக்கா நொடிகள், சங்கத்தமிழன், துக்ளக் தர்பார், திருச்சிற்றம்பலம், சர்தார் படங்களில் நடித்ததை விட, இதில் ராஷி கன்னாவுக்கு முக்கியத்துவம் அதிகமுள்ள பாத்திரம் கிடைத்துள்ளது. ஆனால், திரைக்கதையின் தொடக்கத்திலும் முடிவிலும் மட்டுமே அவர் இடம்பெற்றுள்ளார்.

இவர்கள் தவிர்த்து ரோனித் ராய், தனுஷ் விர்வானி, சன்னி இந்துஜா, எஸ்.எம்.ஜாகிர், சித்தரஞ்சன் திரிபாதி என்று பலர் இதில் நடித்துள்ளனர்.

அவர்களில் ‘ஏர் ஹோஸ்டஸ்’ ஆக வரும் திஷா பதானி நமக்கு ஆச்சர்யத்தைத் தருகிறார். முன்னணி நாயகியான இவர் ஏன் இப்படியொரு பாத்திரத்தில் நடித்திருக்கிறார் என்பதற்கான விடை அதில் அடங்கியிருக்கிறது.

இந்த படத்தை சாகர் ஆம்ப்ரே உடன் இணைந்து புஷ்கர் ஒஜா இயக்கியுள்ளார். நிச்சயமாக, திரைப்படம் முடிந்த பிறகு நமக்குள் ஏற்படும் திருப்தியில் இருந்து அவர்களது பங்களிப்பு எத்தகையது என்று தெரிய வருகிறது.

Karan Johar-Sidharth Malhotra launch Yodha trailer mid-air: An experience of a lifetime

சலிப்பு வருகிறதா?

சமீபத்தில் பெருவெற்றி பெற்ற இந்திப் படங்களான ‘ஜவான்’, ‘பதான்’, ’பைட்டர்’ போன்ற படங்களைப் போன்றே இதிலும் தேசபக்தி மையச் சரடாக விளங்குகிறது. ஆனால், அவற்றில் திரையில் தெரிந்த பிரமாண்டத்திற்கும் பாத்திரங்கள் வெளிப்படுத்தும் உணர்வுக்குமான இடைவெளி கொஞ்சம் அதிகமாக இருந்தது. அது குறித்த சிந்தனையே எழாமல் பார்த்துக் கொள்கிறது ‘யோதா’. அதனால் படத்தின் எந்த இடத்திலும் நமக்குச் சலிப்பு வரவே இல்லை.

தீவிரவாத அமைப்பினர் ஏன் இந்திய விஞ்ஞானியைக் கொல்ல வேண்டும்? அவர்களது நோக்கம் மற்றும் விருப்பங்கள் என்ன என்பது போன்ற கேள்விகளுக்குத் தெளிவான பதில்கள் இந்தக் கதையில் இல்லை. நிச்சயமாக, அவை பலவீனமான அம்சங்கள் தான்.

அதேபோல, நாயகன் எப்போது ‘யோதா’வில் இருந்து விலகும் முடிவை மேற்கொண்டார் என்பதும் வசனங்களில் மட்டுமே சொல்லப்பட்டுள்ளது. அது போன்ற குறைகளைத் தாண்டினால், இப்படம் பெருமளவு சுவாரஸ்யத்தைத் தரும்.

உண்மையைச் சொன்னால், தியேட்டருக்குள் இருக்கும்போது இப்படத்திலுள்ள லாஜிக் குறைபாடுகள் நம் கவனத்திற்கே வருவதில்லை. இப்படியொரு ஆக்‌ஷன் படம் பார்த்துதான் எத்தனை நாளாச்சு..?!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

உதய் பாடகலிங்கம்

இன்றே கடைசி நாள் : வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பது எப்படி?

IPL : கோலி vs தோனி vs ரோகித் … ஐபிஎல் தொடரின் சிறந்த கேப்டன் யார்?

+1
0
+1
4
+1
0
+1
10
+1
0
+1
1
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *