இனிமேல் நடிப்பதற்கு வாய்ப்பில்லை என்று இன்று (ஜூன் 29) திரையரங்கில் மாமன்னன் திரைப்படம் பார்த்த உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
மாரி செல்வராஜ் இயக்கத்தில் நடிகரும், அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் நடித்துள்ள மாமன்னன் திரைப்படம் பக்ரீத் பெருநாளை முன்னிட்டு இன்று(ஜூன் 29) வெளியாகியுள்ளது.
பட்டியலினத்தவர்கள் அரசியலில் அதிகாரம் பெற்றாலும் நிலவும் சாதிக் கொடுமைகள் குறித்து பேசும் இத்திரைப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்று வருகிறது.
படத்தில் நடிகர்கள் வடிவேலு, பகத் பாசில், உதயநிதி ஸ்டாலின், கீர்த்தி சுரேஷ் ஆகியோரின் நடிப்பு பலராலும் பாராட்டப்பட்டு வருகிறது.
இந்நிலையில் சென்னை ராயப்பேட்டையில் உள்ள பிரபல திரையரங்கில் இயக்குநர் மாரி செல்வராஜ், கீர்த்தி சுரேஷ் ஆகியோருடன் உதயநிதி ஸ்டாலின் இன்று மாமன்னன் திரைப்படம் பார்த்தார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்து அவர் பேசுகையில், “அனைவருக்கும் பக்ரீத் தின வாழ்த்துகள். மாமன்னன் படத்தின் முழுவெற்றியும் இயக்குநர் மாரி செல்வராஜ் சார் மற்றும் அவரது படக்குழுவுக்கே சாரும்.
எங்களின் 7 மாத உழைப்பை இப்போது திரையில் பார்த்து மக்கள் அதனை கொண்டாடும்போது மகிழ்ச்சியளிக்கிறது. அதற்கு நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.” என்றார்.
தொடர்ந்து அவரிடம், ”படத்தை பார்த்த பலரும், உதயநிதி தொடர்ந்து நடிக்க வேண்டும் என்று கூறி வருகின்றனர். அதற்கு உங்கள் பதில் என்ன?” என்று கேட்டனர்.
அதற்கு “இந்த படமே எனது ஆசைகளை பூர்த்தி செய்துவிட்டது. இதுவே போதும். இனிமேல் படத்தில் நடிக்க வாய்ப்பில்ல ராஜா” என்று சிரித்தபடி பதில் அளித்துள்ளார் உதயநிதி ஸ்டாலின்.
கிறிஸ்டோபர் ஜெமா
உலகக்கோப்பை: ஹர்திக் பாண்டியா குறித்து கபில் தேவ் கவலை!
மணிப்பூரில் தடுத்து நிறுத்தப்பட்ட ராகுல்: தலைவர்கள் கண்டனம்!