மறைந்த நடிகர் டேனியல் பாலாஜி உடலுக்கு இயக்குநர்கள் கெளதம் வாசுதேவ் மேனன், வெற்றி மாறன், அமீர் உள்ளிட்ட திரைபிரபலங்கள் அஞ்சலி செலுத்தினர்.
சின்னத்திரையில் தனது கேரியரை தொடங்கிய டேனியல் பாலாஜி சித்தி தொலைக்காட்சி தொடரில் நடித்து பிரபலமானார்.
தொடர்ந்து வெள்ளித்திரைக்கு எண்ட்ரி கொடுத்த அவர், காக்க காக்க, பொல்லாதவன், வட சென்னை, என்னை அறிந்தால், வை ராஜா வை உள்ளிட்ட திரைப்படங்களில் வில்லன் மற்றும் குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்து தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை பிடித்தார்.
இந்தநிலையில் நேற்று (மார்ச் 30) இரவு டேனியல் பாலாஜிக்கு மாரடைப்பு ஏற்பட்டதால் சென்னை கொட்டிவாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இந்த தகவல் அறிந்ததும் இயக்குனர்கள் கெளதம் வாசுதேவ் மேனன், வெற்றி மாறன், அமீர், இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் உள்ளிட்ட திரைபிரபலங்கள் பலரும் மருத்துவமனைக்கு சென்று அஞ்சலி செலுத்தினர்.
பின்னர் ஆம்புலன்ஸ் மூலம் டேனியல் பாலாஜி உடல் புரசைவாக்கத்தில் உள்ள அவரது இல்லத்திற்கு எடுத்து செல்லப்பட்டது. தொடர்ந்து அவரது இல்லத்தில் திரை பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இன்று மாலை அவரது உடல் சென்னை ஓட்டேரியில் உள்ள மின் மயானத்தில் தகனம் செய்யப்படுகிறது. டேனியல் பாலாஜி மறைவு திரையுலகில் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
செல்வம்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…