ராகவா லாரன்ஸ் நடிப்பில் உருவாகியுள்ள ‘சந்திரமுகி 2’ படத்தின் ரிலீஸ் தேதி பல்வேறு காரணங்களுக்காக தள்ளிவைக்கப்படுவதாகவும், படம் செப்டம்பர் 28ஆம் தேதி வெளியாகும் எனவும் தயாரிப்பு நிறுவனமான லைகா அறிவித்துள்ளது.
பி.வாசு இயக்கத்தில், 2005ஆம் ஆண்டு வெளியாகி வெற்றி பெற்ற படம், ‘சந்திரமுகி’. ரஜினிகாந்த், ஜோதிகா, நயன்தாரா, பிரபு, வடிவேலு உட்பட பலர் நடித்திருந்தனர். இதன் இரண்டாம் பாகம் ‘சந்திரமுகி 2’ என்ற பெயரில் தயாரிக்கப்பட்டுள்ளது.இதில் ராகவா லாரன்ஸ், கங்கனா ரனாவத், வடிவேலு, ராதிகா உட்பட பலர் நடித்துள்ளனர். கீரவாணி இசையமைத்துள்ளார்.
தென்னிந்திய மொழிகளில் வெளியாகும் இப்படம் வரும் செப்டம்பர் 15ஆம் தேதி வெளியாகும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் நேற்று திரையரங்குகளில் வெளியான ஷாருக்கான், நயன்தாரா, தீபிகா படுகோனே, விஜய்சேதுபதி நடிப்பில், அட்லி இயக்கியுள்ள ‘ஜவான்’ எதிர்பார்த்ததை காட்டிலும் முதல் நாள் அதிகபட்ச வசூலை செய்துள்ளது. இதனால் அடுத்த இருவாரங்களுக்கு ஜவான் திரையிடப்பட்டுள்ள திரையரங்குகள் புதிய படங்கள் திரையிட கிடைக்காது.
சந்திரமுகி – 2 படத்தின் பிரதான வசூல் தமிழ்நாட்டில் கிடைக்க வேண்டும். ஜவான் படத்திற்கு தமிழ்நாட்டில் திரையரங்குகளை ஒப்பந்தம் செய்த ரெட் ஜெயண்ட் மூவீஸ் நிறுவனம்தான் சந்திரமுகி 2 படத்தை தமிழ்நாட்டில் வெளியிட உள்ளது. மேலும் விஷால் நடித்துள்ள ‘மார்க் ஆண்டனி’ செப்டம்பர் 15 வெளியாக உள்ளதால் திரையரங்குகளை ஒப்பந்தம் செய்வதில் கடுமையான நெருக்கடி ஏற்படும்.
இந்நிலையில் தற்போது படக்குழு தரப்பில் தொழில்நுட்ப காரணங்களுக்காக படத்தின் ரிலீஸ் தேதி மாற்றப்பட்டுள்ளதாகவும், படம் வரும் செப்டம்பர் 28ஆம் தேதி வெளியாகும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
செப்டம்பர் 28ஆம் தேதி அன்று விஜய் ஆண்டனியின் ‘ரத்தம்’, ஜெயம்ரவி நடித்துள்ள ‘இறைவன்’, ஹரீஷ் கல்யாண் நடித்துள்ள ‘பார்கிங்’, உள்ளிட்ட நேரடி தமிழ் படங்களும் வெளியாக உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
இராமானுஜம்
வசூல் : தானை முறியடித்த ஜவான்!
ஜி20 விருந்து: மல்லிகார்ஜூன கார்கேவுக்கு அழைப்பு இல்லை!