எழுத்தாளர் ஜெயமோகன் கதை, வசனம் எழுதிய திரைப்படங்கள் வணிக ரீதியாக இதுவரை வெற்றிபெற்றது இல்லை.
அவரது கதை, வசனத்தில் வெளியான வெந்துதணிந்தது காடு நான்கு நாட்களில் 50 கோடியே 56 லட்சம் ரூபாய் உலகம் முழுவதும் வசூல் செய்துள்ளதாக தயாரிப்பு நிறுவனத்தின் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
சிலம்பரசன் கதாநாயகனாக நடித்துள்ள இந்தப் படத்தை கெளதம் மேனன் இயக்கத்தில் வேல்ஸ் பிலிம்ஸ் சார்பில், ஐசரி கணேஷ் தயாரித்துள்ளார்.
கடந்த ஞாயிற்றுக்கிழமை (செப்டம்பர் 18) சென்னையில் படம் வெற்றிபெற்றதை அறிவிக்கவும், நன்றி கூறவும் நடைபெற்ற விழாவில் கலந்துகொள்ளாத எழுத்தாளர் ஜெயமோகன் வீடியோ ஒன்றை வெளியிட்டு படக்குழுவினருக்கு பாராட்டுகளை தெரிவித்துள்ளார்.
அந்த வீடியோவில் ”சென்னையில் நடக்கும் ‘வெந்து தணிந்தது காடு’ படத்தின் வெற்றி விழா கொண்டாட்ட நிகழ்வில் என்னால் பங்கெடுக்க முடியவில்லை.
ஆனால், மானசீகமாக உங்கள் அனைவருடனும் நான் அங்குதான் இருந்துகொண்டிருக்கிறேன். இந்தப் படம் மிக யதார்த்தமாக எடுக்க வேண்டும் என்ற எண்ணத்துடன் தொடங்கிய ஒன்று.
எப்படி வாழ்க்கை இருக்கிறதோ அதற்கு மிக அணுக்கமாக இருக்க வேண்டும் என்று திரைக்கதை எழுதப்பட்டது.
இரண்டு மனிதர்களில் ஒருவர் தன்னுள்ளே இருக்க கூடிய தீ காரணமாக ஓரிடத்தில் சென்று சேர்கிறார். மற்றொருவர் வேறொரு இடத்தில் சென்றடைகிறார். இருவரும் சந்திக்கும்போது ஒருவரையொருவர் அடையாளம் கண்டுகொள்கிறார்கள்.
ஆனால், ஒருவரையொருவர் நெருங்கவில்லை. இவ்வளவு தான் இந்தப் படம். இது நம் அனைவரின் வாழ்க்கையிலும் இருக்க கூடிய ஒன்று.
நம் பள்ளியில் படித்த மாணவன் ஒரு கட்டத்திற்கு பிறகு நமக்கு அந்நியராக தெரிவார். அந்த மாற்றத்தின் கதை இது. அதேதான் நிழலுலக பின்னணியில், பரபரப்பான சம்பவங்களுடன், தீவிரமான செயல்களுடன், உணர்ச்சி கொந்தளிப்புடன் வேகமாக திரைக்கதையுடன் சொல்லியிருக்கிறோம்.
அதை ரசிகர்கள் ஏற்றுக்கொண்டார்கள் என்பது மகிழ்ச்சி.
கௌதம் படத்திற்கு காட்சி அழகை ஏற்றியிருக்கிறார். ட்ராலியும், க்ரேனும் இந்தப் படத்தில் செயலிழந்து போயுள்ளன. ஒரே ஷாட் காட்சிகள் வந்துள்ளன.
புதிய மாணவரைப்போல கற்றுக்கொண்டு புதிய இயக்குநர் போல உள்ளே நுழைந்திருக்கிறார் கௌதம் வாசுதேவ் மேனன். அவ்வளவு பேரின் உழைப்பையும் சரியாக பயன்படுத்தியிருக்கிறார்.
இரண்டாவதாக இது சிலம்பரசனின் படம். கிராமத்து இளைஞனாக இருந்து அசுரத்தனமான ஒருவராக மாறி நுட்பமாக தன்னை செதுக்கி நடித்திருக்கிறார்.
அந்த நடிப்பு படத்தின் வெற்றிக்கு காரணமாகியிருக்கிறது. அவருக்கு வாழ்த்துகள்.
அதேபோல ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் மல்லிப்பூ பாடல் பெரிய பலம். ஒளிப்பதிவாளர், ஐசரி கணேசன் உள்ளிட்டோரால் வெற்றி சாத்தியமாகியிருக்கிறது.
அடுத்த பாகத்தை இன்னும் பிரமாண்டமாக, தீவிரமாக உருவாக்குவோம் என சூளுரைக்கிறோம்” என கூறியுள்ளார்.
ராமானுஜம்
மீண்டும் ஹீரோவாக… பான் இந்தியா படத்தில் ராமராஜன்
கிச்சன் கீர்த்தனா : சோளம் – ஜவ்வரிசி மசாலா புலாவ்