கிளாசிக் படம் பார்த்த திருப்தி!
ஏதேனும் ஒரு விளையாட்டை மையமாகக் கொண்ட திரைப்படத்தை ஆக்குவதிலும், அதனை ரசிப்பதிலும் இருக்கும் ஒரே தடை, அவ்விளையாட்டைத் தெரியாதவர்களும் விரும்பாதவர்களும் எப்படி அப்படத்தை ரசிப்பார்கள் என்பதே. வீரர்களின் எளிமையான பின்னணியும், வாழ்வு சார்ந்த போராட்டங்களும் அக்குறையை எளிதாகச் சீர் செய்யும். போலவே, திரைக்கதையில் பெரும்பங்கினை அவ்விளையாட்டு எடுத்துக்கொள்ளவும் வழி வகுக்கும்.
அதனைச் சரியாகப் புரிந்துகொண்டு வெற்றியை ஈட்டிய திரைப்படங்களில் முதன்மையானது ‘லகான்’. ஒரு நூற்றாண்டுக்கு முன்பு ஆங்கிலேயர் அணியுடன் ஒரு சாதாரண கிராமத்து வீரர்கள் கிரிக்கெட் ஆடுவதாகக் காட்டியது அமீர்கான் நடித்த அப்படம்.
அந்த வரிசையில், அறுபதாண்டுகளுக்கு முன்னால் சர்வதேசக் கால்பந்து அரங்கில் இந்திய அணியினர் நிகழ்த்திய சாதனைகளையும் ஆச்சர்யங்களையும் சொல்கிறது ‘மைதான்’ . போனி கபூர் தயாரித்துள்ள இப்படத்தினை அமித் சர்மா இயக்கியுள்ளார். ஏ.ஆர்.ரஹ்மான் இதற்கு இசையமைத்துள்ளார். அஜய் தேவ்கன், பிரியா மணி, கஜராஜ் ராவ் உட்படப் பலர் இதில் நடித்துள்ளனர்.
’மைதான்’ திரையில் நமக்கு எப்படிப்பட்ட அனுபவத்தைப் பரிசளிக்கிறது?
ரஹீமின் வாழ்வு!
ஐம்பதுகளில் இந்தியக் கால்பந்து அணி சர்வதேச அரங்கில் எழுச்சி பெறக் காரணமாக இருந்தவர் பயிற்சியாளர் சையத் அப்துல் ரஹீம். பயிற்சியாளர் பொறுப்பை அவர் ஏற்றபிறகு, 1952ஆம் ஆண்டு ஹெல்சிங்கியில் நடைபெற்ற ஒலிம்பிக் கால்பந்து லீக் போட்டியில் யுகோஸ்லோவிய அணியிடம் 10 – 1 என்ற கோல் கணக்கில் இந்தியா தோல்வியைச் சந்தித்தது. அதனால், அவரது பயிற்சியாளர் பதவி ஆட்டம் கண்டது. அதன்பிறகும் சுமார் 9 ஆண்டுகள் அவர் இந்தியக் கால்பந்து அணியை வழிநடத்தினார்.
அந்தக் காலகட்டத்தில், இந்தியா முழுக்கப் பயணித்து பல ஊர்களில் சிறப்பாக ஆடிவந்த கால்பந்து வீரர்களை அடையாளம் கண்டார் ரஹீம், அவர்களைத் தேசிய அணியில் இடம்பெறச் செய்வதற்கான பயிற்சியைப் பெறச் செய்தார். அவர்களது திறமைகளை மைதானத்தில் மிளிரச் செய்தார்.
ரஹீம் வழிகாட்டுதலுடன் 1956 ஒலிம்பிக் போட்டியில் அரையிறுதி வரை சென்றது இந்தியக் கால்பந்து அணி. ஆனால், 1960 ஒலிம்பிக்கில் முதல் சுற்றிலேயே வெளியேறியது. அதனால், அவரைப் பயிற்சியாளர் பதவியில் இருந்து நீக்க முடிவெடுக்கிறது இந்தியக் கால்பந்து கூட்டமைப்பு சம்மேளனம். அதன்பிறகு நடைபெற்ற போட்டிகளில் வெற்றி பெற இயலாமல் இந்திய அணி தடுமாறிகிறது.
அந்த காலகட்டத்தில், ரஹீம் நுரையீரல் புற்றுநோயால் பாதிக்கப்படுகிறார். அதிலிருந்து மீள முடியாது என்று அறிந்தபிறகு குடும்பத்தினருடன் பொழுதைக் கழிக்க முடிவு செய்கிறார். ஆனால், அவரால் அதனை நிகழ்த்த முடிவதில்லை. ஏனென்றால், குடும்பத்தைவிடக் கால்பந்து மைதானத்தில் தான் அவரது பெரும்பகுதி ஆயுள் கழிந்திருக்கிறது.
அதனை உணர்ந்த அவரது மனைவி சாயிரா, ‘மீண்டும் மைதானத்திற்கே செல்லுங்கள்’ என்கிறார். அதன் தொடர்ச்சியாக, மீண்டும் பயிற்சியாளர் வாய்ப்பு கேட்டு சம்மேளனத்தை அணுகுகிறார் ரஹீம்.
பிறகு என்னவானது? ரஹீம் மீண்டும் பயிற்சியாளர் ஆனாரா? இந்தியக் கால்பந்து அணி மீண்டும் எழுச்சியைச் சந்தித்ததா என்பதைச் சொல்வதோடு படம் முடிவடைகிறது.
ரஹீம் என்ற மனிதர் தனது வாழ்நாளின் பெரும்பகுதியை இந்தியக் கால்பந்து அணியை வழிநடத்துவதில் அர்ப்பணித்ததை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது ‘மைதான்’. ‘இது ஒரு உண்மைக் கதை’ என்பது பலரை ஆச்சர்யப்பட வைக்கும். ஏனென்றால், ஐம்பதுகளிலும் அறுபதுகளிலும் இந்தியக் கால்பந்து அணி உலக அரங்கில் குறிப்பிடத்தக்க இடத்தைப் பிடித்திருந்தது என்பதே நம்மில் பலர் அறியாத ஒரு தகவல் தான்.
நேர்த்திமிக்க காட்சியாக்கம்!
ரஹீம் பாத்திரத்தில் அற்புதமாகத் தோன்றியுள்ளார் அஜய் தேவ்கன். எவ்வித ஆர்ப்பாட்டமும் இன்றி அவர் நடித்திருப்பது, ரஹீம் என்ற மனிதரைத் திரையில் உயிர்ப்பித்திருக்கிறது. தேசிய அளவிலும், உலக அளவிலும் இப்படம் அவருக்குப் பல விருதுகளைத் தேடித் தரலாம்.
ரஹீம் மனைவி சாயிராவாக பிரியா மணி நடித்துள்ளார். அப்பாத்திரம் குறித்து எவரும் குறை கூறாத வகையில் அவரது நடிப்பு அமைந்துள்ளது.
ஈகோ மோதல் காரணமாக ரஹீமைச் சீண்டுபவராக, ராய் சவுத்ரி பாத்திரத்தில் கஜராஜ் ராவ் நடித்துள்ளார். முன்வழுக்கைத் தலையைக் காட்டும் ஒப்பனை செயற்கையாகத் தெரிந்தபோதும், அவரது நடிப்பு அதனை மறக்கடிக்கிறது.
ஜால்ரா போடும் உறுப்பினராக இருந்து, கால்பந்து சம்மேளனத் தலைவராகும் சுபாங்கர் ஆக ருத்ரனில் கோஷ் நடித்துள்ளார். ரசிகர்களை எரிச்சலடையச் செய்யும் அளவுக்குப் படத்தில் அவரது நடிப்பு வெளிப்பட்டுள்ளது.
ரஹீமுக்கு ஆதரவு தரும் முன்னாள் சம்மேளனத் தலைவராக பஹருல் இஸ்லாம் தோன்றியுள்ளார்.
பி.கே.பானர்ஜி, சுனி கோஸ்வாமி, துளசிதாஸ் பலராம், பிராங்கோ, பீட்டர் தங்கராஜ், ஜர்னைல் சிங் போன்றவர்களை ரஹீம் நேரில் சென்று காண்பதும், அணிக்காகத் தேர்ந்தெடுப்பதும் கமர்ஷியல் சினிமாவுக்கே உரிய துடிப்புமிக்க காட்சிகளாக விளங்குகின்றன. அதில் நடித்த கலைஞர்களும் சிறப்பான பங்களிப்பைத் தந்துள்ளனர்.
இன்னும் இந்திய அணி வீரர்கள், வெளிநாட்டு அணிகளைச் சேர்ந்தவர்கள், பத்திரிகையாளர்கள் உட்பட சுமார் ஐம்பது பேராவது தங்களது முகங்களைத் திரையில் காட்டியிருப்பது நிச்சயம்.
’மைதான்’ காணும் எவரும் ‘கிளாசிக்’ திரைப்படம் பார்த்த திருப்தியைப் பெறுவது நிச்சயம். காரணம், அந்த அளவுக்கு மிகச்சிறப்பான தொழில்நுட்ப ஒருங்கிணைப்பு இதில் நிகழ்ந்துள்ளது.
ரஹீம் என்ற மனிதரின் வாழ்வைத் திரையில் செறிவுடன் பதிவு செய்வதில் வெற்றியைச் சுவைத்திருக்கிறார் ஒளிப்பதிவாளர் துஷார் காந்தி ரே. கியாதி மோகன் காஞ்சனின் தயாரிப்பு வடிவமைப்பு மட்டுமல்லாமல் சிறப்பான விஎஃப்எக்ஸும் அதனுடன் ஒன்றிணைந்துள்ளது.
கால்பந்து மைதானத்தைக் காட்டும் காட்சிகளில் பியோதர் லீயோஸின் ஒளிப்பதிவுத் தரம் நம்மை வியப்பில் ஆழ்த்துகிறது. கால்பந்தின் வேகத்துக்கு இணையாகப் பயணித்து, வீரர்களின் கால்களை நோக்கி நகர்கையில் எது ரியல், எது விஎஃப்எக்ஸ் என்ற எண்ணம் மறைந்து நாம் மெய் சிலிர்ப்பது தானாக நிகழ்கிறது.
ஒளிப்பதிவில் இருக்கும் அந்த வேறுபாட்டினை நாம் கொஞ்சமும் உணராத வகையில், சாதாரணமான காட்சிகளை தேவ் ராவ் ஜாதவ்வும், மைதானம் சம்பந்தமான காட்சிகளை ஷாஅவாஸ் மோசனியும் தொகுத்துள்ளனர்.
ஏ.ஆர்.ரஹ்மானின் இசையில் பாடல்கள் வழக்கமான ‘மேஜிக்’கை நிகழ்த்தியிருக்கின்றன. பின்னணி இசையோ, அவரது முந்தைய படங்களை மறக்கடிக்கும்விதமான அனுபவத்தைத் தருகிறது. குறிப்பாக, இந்திய அணிக்கான வீரர்களைத் தேடித் தேடி நாயகன் தேர்வு செய்யும் காட்சித் தொகுப்பில் பின்னணி இசை ‘வாவ்’ ரகத்தில் அமைந்துள்ளது.
இப்படத்தின் கதையை சைவின் குவாத்ரஸ், ஆகாஷ் சாவ்லா, அருணவ ஜாய் சென்குப்தா இணைந்து உருவாக்கியுள்ளனர். அதற்கு அமன் ராய், அதுல் சஹி, அமித் சர்மா உடன் இணைந்து சைவின் குவாத்ரஸ் திரைக்கதை அமைத்துள்ளார்.
வசனத்தை ரிதேஷ் ஷா அமைக்க, சித்தாந்த் மாகோ அவருக்கு உதவியிருக்கிறார்.
எழுத்தாக்கத்தில் இதர கலைஞர்களுடன் இணைந்து பணியாற்றிய அமித் ரவிந்திரநாத் சர்மா, காட்சியாக்கத்தில் நேர்த்தியான அனுபவத்தை நாம் பெற வழி வகுத்திருக்கிறார்.
முக்கியமாக ஆடை வடிவமைப்பு, ஒப்பனை, டிஐ உள்ளிட்ட நுட்பங்களையும், கால்பந்து போட்டிகள் தொடர்பான காட்சிப் பதிவுகளையும் அவர் பயன்படுத்தியிருக்கும் விதம், இப்படத்திற்கு ‘கிளாசிக்’ அந்தஸ்தை எளிதில் தந்துவிடுகிறது.
பெருமளவு உழைப்பு!
2019ஆம் ஆண்டுக்கு முன்பே ‘மைதான்’ பட உருவாக்கம் தொடங்கிவிட்டது. இடைப்பட்ட காலத்தில் கோவிட் -19 பாதிப்பு படப்பிடிப்பினைத் தாமதப்படுத்தியிருக்கிறது. அது போக விஎஃப்எக்ஸ் உள்ளிட்ட பின்தயாரிப்புப் பணிகளுக்காக அதிக காலத்தைச் செலவழித்துள்ளது ‘மைதான்’. அது போதாதென்று வெளியீட்டுக்கு உகந்த நேரத்தை எதிர்பார்த்து, தற்போது திரையை எட்டியிருக்கிறது.
அந்த பேருழைப்புக்குத் திரையில் பயன் கிடைக்கும் விதமாக அமைந்துள்ளது ‘மைதான்’. சுமார் மூன்று மணி நேரம் ஓடும் இத்திரைப்படம் நம்மை வேறொரு உலகத்திற்கு அழைத்துச் செல்கிறது. அது மட்டுமல்லாமல், இந்தியக் கால்பந்து அணியின் எழுச்சிமிகு சாதனைகளைக் காட்டிய விதம் நம்மை வியப்பில் ஆழ்த்துகிறது.
இந்தக் கதையில் ரஹீமின் தனிப்பட்ட வாழ்க்கை குறித்தோ, அவரது குடும்ப உறுப்பினர்கள் குறித்தோ, அதிகம் விளக்கங்கள் இல்லை. ஆனால், சின்னச்சின்ன தகவல்கள் மூலமாக ஒரு சித்திரத்தை நாமே உருவாக்கிக்கொள்ள அனுமதிக்கிறது திரைக்கதை.
போலவே, ரஹீமின் நாற்பது முதல் ஐம்பத்து நான்கு வயது வரையிலான காலகட்டத்தையே மையப்படுத்துகிறது இதன் கதை. அதற்கு முந்தைய அனுபவங்கள் இப்படைப்புக்குத் தேவையில்லை என்று புறக்கணித்திருக்கிறார் இயக்குனர். அதுவே, எவ்விதச் சந்தேகங்களும் கேள்விகளும் இன்றி ஒரு செறிவான திரைப்படம் பார்த்த அனுபவத்தைப் பெற வகை செய்கிறது.
திரைப்பட விழாக்களில் விருதுகளைக் குவிப்பதற்கான அத்தனை தகுதிகளும் ‘மைதான்’ படத்திற்கு உண்டு.
நிச்சயமாக, வழக்கமான பொழுதுபோக்கு திரைப்படத்தை ரசிக்க விரும்புபவர்களை இப்படம் எந்த வகையிலும் திருப்திப்படுத்தாது. ஆனால், அது தேவையில்லை என்று தியேட்டருக்கு வருபவர்களை ‘மைதான்’ உற்சாகத்தில் ஆழ்த்தும்; குதூகலிக்கச் செய்யும்; அவர்களிடத்தில் கொண்டாட்ட மனநிலையை உருவாக்கும்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
உதய் பாடகலிங்கம்
”அதிமுகவை மிரட்டி பார்க்கும் வேலை வேண்டாம்” : சிதம்பரத்தில் சீறிய எடப்பாடி
பாஜக தேர்தல் அறிக்கை நாளை வெளியாகிறது!