பாஜகவின் 200 கோடி நெட்வொர்க்…நயினாரின் 4 கோடி விவகாரம்…அம்பலமாகும் வாக்குமூலம்!

அரசியல்

நயினார் நாகேந்திரனுக்கு எடுத்துச் செல்லப்பட்ட பணம் பிடிக்கப்பட்ட வழக்கில் பல முடிச்சுகளை சிபிசிஐடி போலீசார் அவிழ்த்துள்ளனர். இந்த வழக்கில் பல மர்மங்கள் வெளிப்பட்டு வருகிறது.

ஏப்ரல் 6, 2024 அன்று சென்னையிலிருந்து திருநெல்வேலிக்குச் செல்லும் நெல்லை எக்ஸ்பிரசில் பணம் எடுத்துச் செல்கிறார்கள் என்ற தகவல் மாநகர உளவுத் துறைக்கும், மாநில உளவுத்துறைக்கும் கிடைத்ததன் அடிப்படையில், தேர்தல் பறக்கும் படையினர் சோதனை நடத்தி 4 கோடி ரூபாயை தாம்பரத்தில் டிரெய்னிலேயே வைத்து பிடித்தனர். பணத்தை திருநல்வேலிக்கு எடுத்துச் சென்று கொண்டிருந்த நயினார் நாகேந்திரனின் ஹோட்டல் ஊழியர்கள் சதீஷ், நவீன், பெருமாள் ஆகிய மூவரும் தாம்பரம் காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டனர்.

இதனையடுத்து தாம்பரம் காவல்துறையினர் மூவரிடமும், பணம் எங்கிருந்து உங்களுக்கு கொடுக்கப்பட்டது என்று விசாரணை நடத்தியதில், சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள பாஜக தொழிற்துறை தலைவர் கோவர்த்தனனுக்கு சொந்தமான அடுக்குமாடி கட்டிடத்தை அவர்கள் கை காட்டியது, விசாரணையில் பல மர்மங்களுக்கான கதவை திறந்து வைத்தது.

அதன்பிறகு இந்த வழக்கு சிபிசிஐடி-க்கு மாற்றப்பட்டத்தில் இருந்து விசாரணை இன்னும் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. முதலமைச்சர் இந்த வழக்கின் மீதான விசாரணையில் ஆர்வமாக இருப்பதால் சிபிசிஐடி போலீசார் வேகமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

பணம் எடுத்து வந்து சிக்கிய சதீஷ், நயினார் நாகேந்திரனின் ஓட்டல் மேனேஜர் ஆவார். இவர் சென்னையைச் சேர்ந்தவர். இதுவரை அவர் திருநெல்வேலிக்கு போனது கூட இல்லையாம். அவருக்கு நெல்லை எக்ஸ்பிரசில் டிக்கெட் போட்டுக் கொடுத்து இந்த பணத்தை கொடுத்தனுப்பியுள்ளனர். 4 கோடி ரூபாய் எங்கெங்கு இருந்து வந்தது என்ற விசாரணையைத் தான் தற்போது சிபிசிஐடி போலீசார் தீவிரப்படுத்தியுள்ளனர்.

அதில் ஒரு இடம் கிரீன்வேஸ் ரோட்டில் உள்ள கோவர்த்தனனுக்கு சொந்தமான கட்டிடம் என்பதால் கோவர்த்தனின் வாக்குமூலத்தைப் பெற காவல்துறையினர் முயற்சித்து வருகின்றனர். அந்த கட்டிடத்தின் மூன்று மாடிகளில் இயங்கும் கொரியன் ரெஸ்டாரண்ட்-க்குள் பார் ஒன்றும் செயல்பட்டு வருகிறது. அந்த பாரை மையப்படுத்தி வணிக வரித்துறையினர் ரெய்டும் நடத்தியுள்ளனர்.

அத்துடன் கடந்த சனிக்கிழமை (மே 4) காலை சிபிசிஐடி காவல்துறையின் டி.எஸ்.பி சசிதரன், இன்ஸ்பெக்டர் லோகநாதன் ஆகியோர் தலைமையிலான டீம் நீலாங்கரையிலுள்ள கோவர்த்தனனின் வீட்டிற்குச் சென்று காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை அவரிடம் விசாரணை நடத்தியுள்ளனர். மேலும் ஏற்கனவே இந்த விசாரணையில் கிடைத்த பல டாக்குமெண்ட்ஸ், சிசிடிவி ஃபூட்டேஜ் என பலவற்றையும் கையில் வைத்துக் கொண்டு கேள்விமேல் கேள்வி கேட்டு அழுத்தம் கொடுத்துள்ளனர்.

 

கோவர்த்தனன்

 

ஒரு கட்டத்தில் கோவர்த்தனனும் அவரது டிரைவரும் என்ன நடந்தது என்பது குறித்து வெளிப்படையாக காவல்துறையினரிடம் பேசியுள்ளார்.

பாஜக பொருளாளர் எஸ்.ஆர்.சேகர் பணத்தை பல இடங்களில் பார்க் செய்து வைத்து, ஒவ்வொரு இடமாக தகவல் சொல்லி ஒவ்வொரு வேட்பாளருக்கும் எவ்வளவு அனுப்ப வேண்டும் என்று instruction-களை கொடுத்துள்ளார்.

எஸ்.ஆர்.சேகர்

அதன் ஒரு பகுதியாகத்தான் கோவர்த்தனனின் டிரைவரிடம் எஸ்.ஆர்.சேகர் பேசியுள்ளார். மேலும் காவல்துறையிடம் பிடிபட்ட சதீஷும் கோவர்த்தனனின் டிரைவரிடம் பேசியுள்ளனர். கோவர்த்தனனின் டிரைவரிடம் யார் யார் எப்போதெல்லாம் பேசினார் என்பது குறித்த எல்லா டீட்டெய்ல்களையும் சிபிசிஐடி போலீசார் எடுத்துவிட்டனர்.

கோவர்த்தனனின் டிரைவரிடம் சிபிசிஐடி போலிசார் விசாரித்த போது ஆரம்பத்தில் அவர் சரியாக ஒத்துழைக்காமல், தனக்கு எதுவும் தெரியாது என்று சொல்லியிருக்கிறார். அவரது போன் எங்கே என்று கேட்டதற்கு தொலைந்து விட்டது என்று சொல்லியிருக்கிறார். இதனையடுத்து காவல்துறையினர் கொஞ்சம் கடுமையான முறையில் விசாரணையை நடத்திய பிறகு, என்ன நடந்தது என்பதை சொல்லியிருக்கிறார்.

”எனக்கு போன் பண்ணி புளியந்தோப்பில் உள்ள ஒரு அபார்ட்மெண்டின் அட்ரெஸ் கொடுத்தாங்க. அங்க போனால் பணம் கொடுப்பாங்க, அதை எடுத்துட்டு வரணும் என்று சொன்னாங்க. நான் டூவீலரை எடுத்துக் கொண்டு அங்கு போனேன். ஒருவர் என்னிடம் ஒரு பண்டலில் பணம் கொண்டுவந்து கொடுத்தார். அந்த பணத்தை ஸ்கூட்டியில் தான் நான் எடுத்து வந்தேன்.

அதுக்கப்புறமா பக்கத்துல எலிஃபேண்ட் கேட்ல இருந்து இன்னொரு பண்டல் பணம் கொடுத்தாங்க. மொத்தமா இதை எப்படி எடுத்துக் கொண்டு போறதுன்னு எனக்கு பயம் வந்துவிட்டது. நான் ஸ்கூட்டியில் காலுக்கு அருகில் ஒரு பண்டலையும், ஸ்கூட்டியின் சீட்டுக்கு கீழே உள்ள பெட்டியில் இன்னொரு பண்டலையும் வைத்து எடுத்துக் கொண்டு வந்தேன். அதை எடுத்துக் கொண்டு வரும்போதே எனக்கு பயமாக இருந்தது.

இதனால் எனக்கு தெரிஞ்சு பரத்னு ஒரு மார்வாடி இருக்கார். அவரிடம் ஒரு பண்டலைக் கொடுத்து வைத்திருக்கச் சொல்லிவிட்டு, ஒரு பண்டலை மட்டும் எடுத்து வந்தேன். இங்க சதீஷ் வந்து ஒரு பண்டலை வாங்கிட்டுப் போனார்” என்று கோவர்த்தனனின் டிரைவர் சிபிசிஐடி போலீசாரிடம் சொல்லியிருக்கிறார்.

மேலும் அந்த இன்னொரு பண்டல் மார்வாடியிடம் இருக்கிறது என்பதை எஸ்.ஆர்.சேகரிடம் சொல்லி விட்டேன். ஆனால் அதில் எவ்வளவு பணம் இருந்தது என்பது எனக்குத் தெரியாது என்றும் சொல்லியிருக்கிறார்.

தொடர்ந்து போலீஸ் பலரிடம் விசாரணை நடத்தியதில், ஒரு பண்டலில் 65 லட்சம் ரூபாயும், இன்னொரு பண்டலில் 35 லட்சம் ரூபாயும் என மொத்தம் 1 கோடி ரூபாய் இருந்தது தெரிய வந்துள்ளது. மேலும் புளியோந்தோப்பு அபார்ட்மெண்டின் சிசிடிவி விவரங்களையும் சிபிசிஐடி போலீசார் எடுத்துள்ளனர்.

1 கோடி ரூபாய்க்கான விபரங்கள் தெரிய வந்துள்ளதால், மேலும் 3 கோடி ரூபாய் எங்கெங்கு இருந்து வந்தது என்ற விசாரணையை சிபிசிஐடி போலீசார் தொடர்ந்து மேற்கொண்டு வருகிறார்கள்.

பாஜக தொழிற்துறைத் தலைவர் கோவர்த்தனனிடம் விசாரணை நடத்திய போது, ”நான் பாஜகவில் தான் இருக்கேன். ஆனால் என்னால் பெரிதாக வேலைகள் எதுவும் செய்ய முடியவில்லை. உடல்நிலை முடியாமல் நான் ஆக்டிவாக இல்லை. அந்த பில்டிங் என்னோட பசங்க பேர்ல இருக்கு. அந்த பில்டிங்கிற்கு கீழ பணம் வாங்குனா, அதற்கு நான் எப்படி பொறுப்பாக முடியும்?” என்று சொல்லியிருக்கிறார்.

மேலும், “நீங்க வேணும்னா என் அக்கெளண்ட்ட பாருங்க. அதுல என் பெயரில் எந்த பணமும் வரவில்லை. அந்த பணத்தை நானோ என் குடும்பத்தைச் சேர்ந்தவர்களோ Withdraw பண்ணவும் இல்லை. டிரைவர் சொன்னதுதான் நடந்த விசயங்கள். இதைத் தவிர எனக்கு இதில் எந்த தொடர்பும் இல்லை” என்று கூறியுள்ளார்.

தொடர்ந்து போலீஸ் வேறு இடங்களில் நடத்திய விசாரணையில் பல விசயங்கள் தெரிய வந்துள்ளன. பாஜக பொருளாளர் எஸ்.ஆர்.சேகர் கோவையில் இருந்துகொண்டு எங்கெங்கு பணம் போக வேண்டும் என்ற instruction-களை கொடுத்துக் கொண்டிருந்திருக்கிறார். அந்த டீடெய்ல்கள் முழுவதையும் போலீசார் எடுத்துள்ளனர். இப்போது போலீசார் இந்த விசாரணையை அடுத்தகட்டத்திற்கு எடுத்துச் சென்றிருக்கிறார்கள்.

நயினார் நாகேந்திரன் இந்த விவகாரம் தொடர்பாக கமலாலயத்தில் கோபமாக பேசியிருக்கிறார். ”200 கோடி ரூபாய் எல்லா வேட்பாளருக்கும் போயிருக்கு. ஆனா அதுல என் பணம் மட்டும் எப்படி மாட்டிச்சி? கூட இருந்தே தான் யாரோ மாட்டி விட்டிருக்காங்க” என்று கடுமையாக சொல்லியிருக்கிறார்.

அதற்கு பாஜக முக்கிய நிர்வாகிகள் சிலர், “நீங்க இது உங்களோட பணம்னே சொல்லியிருக்கலாம். எதுக்கு இல்லனு மறுக்கறீங்க? எனக்கு நிறைய பிசினஸ் இருக்கு. தொழில் நிமித்தமா போனது. டேக்ஸ் கட்டனும் அவ்ளோதான் என்று நீங்க சொல்லியிருக்கலாம்” என்று சொல்லியிருக்கிறார்கள்.

ஆனால் நயினார் நாகேந்திரன் அதில் உடன்பாடில்லாமல் முதலமைச்சர் ஸ்டாலினுக்கு வேண்டப்பட்ட சிலரை அணுகி சமரசத்திற்கு முயற்சித்திருக்கிறார். மேலும் ஓய்வுபெற்ற சில அதிகாரிகள் மூலமாகவும் இந்த வழக்கை விசாரிக்கும் அதிகாரிகளுக்கு தூதுக்களை அனுப்பியிருக்கிறார். இதைப்பற்றி ஏற்கனவே ’4 கோடி விவகாரம்…நயினார் விட்ட தூது!என்ற தலைப்பில் மின்னம்பலத்தில் வெளியிட்டிருந்தோம்.

நயினார் நாகேந்திரன் பாஜக சட்டமன்றக் குழு தலைவராக இருந்தும், இப்போது காங்கிரஸ் கட்சியின் நெல்லை கிழக்கு மாவட்டத் தலைவர் ஜெயகுமார் தன்சிங் மரணம் குறித்த விவகாரத்தில் அரசை நோக்கி எந்த கேள்வியையும் எழுப்பாமல் அமைதியாக இருந்து வருகிறார். இந்த சிபிசிஐடி விசாரணை முடியும் வரை அரசை பகைத்துக் கொள்ளும் வகையில் எந்த செயலிலும் இறங்க வேண்டாம் என்று பதுங்கி இருக்கிறாராம் நயினார்.

சிபிசிஐடி போலீசார் அடுத்ததாக பாஜக பொருளாளர் எஸ்.ஆர்.சேகரிடம் விசாரணை நடத்த உள்ளனர். அதற்கடுத்து நயினார் நாகேந்திரனும் விசாரணைக்கு அழைக்கப்பட இருக்கிறார்.

பல மர்மங்கள் இந்த விசாரணையில் ஒவ்வொன்றாக வெளிவந்து கொண்டிருக்கின்றன.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

4 கோடி விவகாரம்… நயினார் விட்ட தூது!

நயினார் நாகேந்திரனின் உறவினர் உட்பட 2 பேர் சிபிசிஐடி முன் ஆஜர்!

உதயநிதி வீட்டிற்கு எதிரே…பாஜக வேட்பாளர்களுக்குப் போன 65 கோடி…சிக்கிய சிசிடிவி காட்சிகள்…சிக்குகிறாரா கேசவ விநாயகம்?

ஹெச்.டி. ரேவண்ணாவுக்கு 3 நாட்கள் எஸ்ஐடி காவல்!

+1
0
+1
1
+1
0
+1
11
+1
1
+1
0
+1
1

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *