தமிழ் தொலைக்காட்சிகளில் ஒளிப்பரப்பாகும் நெடுந்தொடர்கள் வெற்றி பெற்ற அல்லது பிரபலமான திரைப்படங்கள் பெயராகவே இருக்கும்.
இதற்கு சம்பந்தபட்ட படத்தின் தயாரிப்பாளர்கள் எந்தவிதமான எதிர்ப்பும் தெரிவிக்காமல் இருப்பதால் இன்றுவரை திரைப்படங்களின் பெயரில் தொலைக்காட்சி தொடர் தயாரித்து ஒளிபரப்பாவது தொடர்கதையாக இருந்து வருகிறது.
இதற்கு முதல் முறையாக எதிர்ப்பு தெரிவித்து தனது தயாரிப்பில் வெளியான படத்தின் பெயரை வைக்கவிடாமல் தடுத்திருக்கிறார் தயாரிப்பாளர் சசிகாந்த்.
![vikram vedha modhalum kadhalum](https://storage.googleapis.com/minnambalam_bucket/wordpress-1398824-5190649.cloudwaysapps.com/wp-content/uploads/Screenshot-2023-04-23-151813.jpg)
ஸ்டார் விஜய் தொலைக்காட்சி, மோதலும் காதலும் விக்ரம் வேதாவின் காதல் கதை என்ற புத்தம் புதிய நெடுந்தொடரை 24 ஏப்ரல் 2023 திங்கள் – வெள்ளி வரை மாலை 6.30 மணிக்கு ஒளிபரப்பவுள்ளது.
இத்தொடரில் நளினி (கஜலட்சுமி), சமீர் (விக்ரம்), அஸ்வதி (வேதா), பேபிஆழியா (தன்வி), உமா (காவேரி), கிரீஷ் (சுப்ரமணி), வருண் உதய்(ஆதித்யா), சுனிதா (மிருணாளினி) மற்றும் பலர் நடிக்கிறார்கள்.
மோதலும் காதலும் விக்ரம் வேதாவின் காதல் கதை ஒரு சுவாரஸ்யமான காதல் நிறைந்த குடும்பக்கதை.
விக்ரமும் வேதாவும் அடுத்தடுத்த வீட்டில் வாழ்கிறார்கள். இவர்களைச் சுற்றி கதை நகர்கிறது.
வேதா ஒரு மருத்துவர், விக்ரம் ஒரு வெற்றிகரமான கட்டுமான நிறுவனத்தை நடத்தி வரும் தொழிலதிபர்.
விக்ரம் – வாழ்க்கையில் எல்லாவற்றுக்கும் மேலானது பணம்தான் என்றும், எல்லாப் பெண்களும் பணத்துக்காகத் திருமணம் செய்து கொள்கிறார்கள் என்ற தவறான கண்ணோட்டத்தில் இருப்பவர்.
தன் கசப்பான கடந்த காலத்தால் இப்படி மாறி இருப்பவர். தன் சொந்த மகள் மற்றும் பெற்றோரிடம் கூட அன்பை, அக்கறையை வெளிப்படுத்தும் திறனை இழந்துவிட்டவர்.
வேதா ஒரு மகிழ்ச்சியான,வெற்றிகரமான இளம் மருத்துவர். வாழ்க்கையில் மிகவும் நம்பிக்கையுடன் இருப்பவள். மேலும் தன்னைப் புரிந்துகொண்டு சமமாக நடத்தும் சரியான துணையை அவளால் கண்டுபிடிக்க முடியும் என்று உறுதியாக நம்புகிறாள்.
விக்ரம் மற்றும் வேதா இருவரும் இரு துருவங்கள். எப்போதும் உடன்பட முடியாத வலுவான கருத்துகள் அவர்களுக்குள் ஏற்படும். அவர்கள் எளிதில் சமரசம் செய்துகொள்ளமாட்டார்கள்.
வேதாவின் மூலம் விக்ரமிற்கு உலகத்தைப் பற்றிய பார்வை மாறுபடும் வேளையில் அவர்களது வாழ்க்கை எவ்வாறு மாறவிருக்கிறது என்பதுதான் மோதலும் காதலும் விக்ரம் வேதாவின் காதல் கதை.
![vikram vedha modhalum kadhalum](https://storage.googleapis.com/minnambalam_bucket/wordpress-1398824-5190649.cloudwaysapps.com/wp-content/uploads/Screenshot-2023-04-23-151950.jpg)
இது தொடரின் கதை என்றால் இத்தொடரின் பெயர் குறித்து ஒரு கதை உள்ளது. இத்தொடருக்கு முதலில் நாயகன் மற்றும் நாயகி பெயரைக் குறிக்கும் வகையில் விக்ரம் வேதா என்று பெயர் வைத்திருந்தார்கள்.
புகழ்பெற்ற திரைப்படங்களின் பெயரை இவ்வாறு பயன்படுத்துவது தொடர்கதை. அந்த அடிப்படையில் இவர்களும் இந்தப் பெயரை வைத்துவிட்டார்கள்.
ஆனால், இந்தத் தொடருக்கு இதுதான் பெயர் என்று தெரிந்ததும், விக்ரம் வேதா படத்தின் தயாரிப்பாளர் சசிகாந்த், இந்தப் பெயரை வைத்தால் சட்ட நடவடிக்கை எடுப்பேன் என நோட்டீசு அனுப்பிவிட்டார்.
இதனால் அதிர்ச்சி அடைந்த தொலைக்காட்சி நிறுவனம், தொடரின் பெயரை மோதலும் காதலும் என்று மாற்றிவிட்டார்கள்.
இராமானுஜம்
மைதானத்தில் ஜெர்சியை மாற்றிய பாண்டியா பிரதர்ஸ்!
மதுரை சித்திரைத் திருவிழா தொடக்கம்: அழகர் ஆற்றில் இறங்குவது எப்போது?