Zதிலீப்புக்கு நான்கு நிபந்தனைகள்!

public

85 நாட்கள் சிறையிலிருந்த திலீப்புக்கு நான்கு முறை தோல்வியைக் கொடுத்த ஜாமீன் மனு, ஐந்தாவது முறையில் வெற்றியடைந்து அவர் வெளியே வருவதற்கான வாய்ப்பைக் கொடுத்திருக்கிறது.

கடந்த பிப்ரவரி 17ஆம் தேதி காரில் நடிகை கடத்தப்பட்ட சம்பவத்தில் ஜூலை 10ஆம் தேதி திலீப் கைது செய்யப்பட்டு அலுவா சிறையில் அடைக்கப்பட்டார். மிகவும் பரபரப்பான சூழலில் திலீப் கைது செய்யப்பட அவர் சார்ந்த திரையுலகம் இரண்டாகப் பிரிந்து பல சர்ச்சைகளைக் கிளப்பியது. வழக்கிலிருந்து வெளியேற திலீப்புக்கு பல வழிகள் இருந்தாலும், சிறையிலிருந்து வெளியே வருவதைத் தலையாயக் கடமையாகக் கொண்டிருந்தது திலீப் தரப்பு. காரணம், திலீப் மற்றும் அவருடன் தொடர்புடையவர்களை சந்தேகத்தின் பேரில் தொடர்ந்து கேரள போலீஸ் துருவிக்கொண்டிருந்தது. திலீப்புக்கு உதவத் தயாராக இருந்த பலரும் அவருடன் ஃபோன் மூலம் பேசுவதைக்கூட ஆபத்தாகக் கருதி பின்வாங்கியதால் ஜாமீன் வாங்குவதில் குறியாக இருந்து நான்கு முறை ஜாமீனுக்கு முயற்சி செய்தனர். அங்கமல்லி மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் இரண்டு முறையும், கேரள உயர்நீதிமன்றத்தில் இரண்டு முறையும் திலீப்பின் ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டது.

நான்கு முறையும் இந்தக் குற்றத்தின் சாட்சியங்களை திலீப் கலைத்துவிடுவார் என்பதன் அடிப்படையிலேயே அரசு தரப்பு வாதம் நடத்தியது. ஆனால், அனைத்து சமயத்திலும் இது கைகொடுக்காதல்லவா? எனவே, புதிய காரணங்களையும், ஆதாரங்களையும் கேரள போலீஸ் தயார் செய்து சார்ஜ் ஷீட்டைப் பதிவு செய்யவிருந்த சமயத்தில் திலீப்புக்கு ஜாமீன் கொடுப்பதாக அறிவித்திருக்கிறது அங்கமல்லி நீதிமன்றம். அதுவும் பல கடுமையான நிபந்தனைகளுடன். அவையாவன…

திலீப்பின் பாஸ்போர்ட்டை போலீஸிடம் சமர்ப்பிக்க வேண்டும்.

இரண்டு லட்ச ரூபாயைப் பிணையத் தொகையாக நீதிமன்றத்தில் செலுத்த வேண்டும்.

பத்திரிகைகளுடன் தொடர்புகொள்ளக் கூடாது.

சாட்சிகளை மாற்ற முயற்சி செய்வதாக நிரூபிக்கப்பட்டால் ஜாமீன் நிராகரிக்கப்படும்.

மேற்கண்ட நிபந்தனைகளின் அடிப்படையில் ஜாமீன் வழங்கப்பட்டிருக்கும் திலீப் 85 நாட்களுக்குப் பிறகு இன்று (03.10.17) சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டார். திலீப் இன்று அவரது ஜாமீன் மனுவின் மீதான விசாரணையைவிட, போலீஸ் தாக்கல் செய்யவிருந்த ஆவணங்களைப் பற்றியே அதிக யோசனையுடன் இருந்ததால் இந்த ஜாமீன் அவரை அவ்வளவாக

மகிழ்ச்சியடைய வைக்கவில்லை. சிறை அதிகாரி ஜாமீன் கிடைத்துவிட்ட தகவலை திலீப்பிடம் கூறியபோது **“ஓ! அப்படியா?”** என்பதைத் தவிர வேறு மாதிரியாக திலீப் ரியாக்ட் செய்யவில்லை என மனோரமா ஆன்லைன் பத்திரிகைக்குப் பேசிய சிறை அதிகாரி தெரிவித்ததாக [பதிவு](http://english.manoramaonline.com/news/kerala/2017/10/03/dileep-first-reaction-kerala-hc-verdict.html) செய்யப்பட்டிருக்கிறது.

�,”

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *