பெரியார் சிலை அவமதிப்பு: இருவர் மீது குண்டாஸ்!

public

கோவையில் பெரியார் சிலை அவமதிக்கப்பட்ட வழக்கில் கைதான இந்து முன்னணி அமைப்பை சேர்ந்த இருவர் மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

சமீப காலமாக பெரியார் சிலை மீது காவிசாயம் பூசுவது, செருப்பு மாலை அணிவிப்பது, தீ வைப்பது, குல்லா அணிவிப்பது உள்ளிட்ட அவமதிப்பு செயல்கள் அதிகரித்து வருகின்றன.

கோவை வெள்ளலூரில் திராவிடர் கழகத்துக்கு சொந்தமான தந்தை பெரியார் பகுத்தறிவு படிப்பகம் ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்தப் படிப்பகத்தின் நுழைவுவாயிலில் தந்தை பெரியாரின் உருவச் சிலை உள்ளது. கடந்த 8ஆம் தேதி இரவு மர்ம நபர்கள் சிலர் பெரியார் சிலைக்கு செருப்பு மாலை அணிவித்து, தலை பகுதியில் குங்குமத்தை தூவிவிட்டும் அவமரியாதை செய்திருந்தனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த சம்பவத்திற்கு திமுக, திராவிடர் கழகத்தினர் உள்ளிட்ட பல்வேறு கட்சியினர் கண்டனம் தெரிவித்தனர். இதுதொடர்பாக அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில், போத்தனூர் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து அந்தப் பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்து விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணையில், கோவை வெள்ளளூரைச் சேர்ந்த இந்து முன்னணி ஆதரவாளரான ஆட்டோ டிரைவர் அருண் கார்த்திக் (26), மற்றும் அவரது நண்பர் மோகன் ராஜ் (28) ஆகிய இருவரும் அவமதிப்பு செயலில் ஈடுபட்டது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து கடந்த 10ஆம் தேதி இருவரும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

இதனிடையே கைது செய்யப்பட்ட இருவருக்கும் கடுமையான தண்டனை வழங்க வேண்டும் என்று தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் வலியுறுத்தி வந்தனர்.

இதையடுத்து, கைது செய்யப்பட்ட இருவரது செயல்களும் பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் இருந்ததால், அவர்களை குண்டர் தடுப்புச் சட்டத்தில் சிறையில் அடைக்க கோவை காவல் ஆணையர் பிரதீப் குமார் உத்தரவிட்டார். அந்த உத்தரவின்படி, இருவர் மீதும் குண்டர் தடுப்புச் சட்டம் பதிவு செய்யப்பட்டு, கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.

**-வினிதா**

�,

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published.