zசிறப்புக் கட்டுரை: காட்டுவாசிகளிடம் கற்றவை – 8

public

நரேஷ்

ஒரு நம்பமுடியாத நிகழ்ச்சியைக் கதையாக நமக்குக் கூறினார் தன்ராஜ். பழங்குடிகளுக்கு சட்டரீதியான உதவிகள் செய்துவருபவர் இவர். வன விலங்குகள் மற்றும் காட்டில் வாழும் மனிதர்களுக்கு இடையேயான உறவு மற்றும் உரையாடல்கள் குறித்து அறிந்தபோது வியப்பாக இருந்தது. அந்த உண்மை சம்பவத்தை நம்பவும் முடியவில்லை; ஆதாரங்களைப் பார்க்கும்போது மறுக்கவும் முடியவில்லை.

“பழங்குடி மக்களுக்கும் விலங்குகளுக்கும் உள்ள உறவு உணர்வுகளால் மட்டுமே புரிந்துகொள்ளக்கூடியது. அவங்களுக்கு அவை விலங்குகள் அல்ல; சக உயிர்கள். இன்னும் சொல்லப்போனா, அந்த விலங்குகள் இந்த மக்களுக்கு தெய்வங்கள்” என்று வன விலங்குகளுடனான உறவை உரைத்தார்.

“இவங்க யானை என்கிற வார்த்தையை பயன்படுத்த மாட்டாங்க. ‘பெரியசாமி’ன்னுதான் சொல்லுவாங்க. யானை அட்டகாசம்னு செய்திகள்ல பார்க்குறோம்ல? அது அயோக்கிய வார்த்தை. இந்த மக்களோட வீடுகளையே யானைகள் சூறையாடிட்டுப் போனாலும், யானை ‘விளையாண்டுட்டு’ப் போயிடுச்சுன்னுதான் சொல்லுவாங்க. இவங்களோட குடும்பத்துல, வன விலங்குகளும் தூரத்து சொந்தம்” என்றவரிடம், “அந்தக் கதையைச் சொல்லுங்களேன்…” என்றோம்.

“வரேன் வரேன்… அந்தப் பையன் (APW – Anti Poaching Watcher) வேட்டைத்தடுப்புக் காவலராக வேலை செய்யறான். அவனுக்கு ஒரு தாத்தா இருக்காரு. அவருக்குக் கண்ணு தெரியாது. ஊர்லேயே பெரிய மனுஷன். நல்ல புத்திசாலி. மொத்த ஊரையும் அவர்தான் வழிநடத்துவாரு. ஆனாலும் எல்லா இடத்துக்கும் நடந்தே போயிட்டு வந்துடுவாரு. வன விலங்குகளோட வாடையையும் சத்தத்தையும் வெச்சு விலகி போயிடுவாரு. அன்னிக்கு அப்படித்தான் வெளியே போயிட்டுத் திரும்பி வந்தபோது யானை நின்னிருக்கு. என்ன நினைப்புல இருந்தாரோ, அதை கவனிக்காம வந்திட்டாரு. அந்த யானை அவரை தூக்கிப்போட்டு கொன்னுடுச்சி. அதை அந்த பையனால தாங்கிக்க முடியல” எனும்போது நம்மாலும் அந்தத் தகவலைத் தாங்க முடியவில்லை.

“அந்த பையன் நேரா அந்த யானை கிட்ட போயி சண்டை போட்டிருக்கான். சண்டை போடுறதுன்னா அடிச்சிக்கிறது இல்ல. போயி பேசுறது. அவங்க தாத்தாவைக் கொன்ன யானைக்கிட்ட போயி, ‘எங்க தாத்தா எவ்ளோ பெரிய மனுஷர் தெரியுமா? உனக்கு ஏதாச்சும் பாவம் பண்ணாரா? அவரை போயி கொன்னுட்டேயே… உங்க கூட்டத்தையே அவரு எவ்ளோ கவனமா பார்த்துக்கிட்டாரு தெரியுமா?’ன்னு கன்னா பின்னானு கத்தியிருக்கான். அதை ஊரே வேடிக்கை பார்த்துச்சு. இது நடந்து நாலு நாள் கழிச்சு அந்த யானை செத்துப்போச்சு. அந்த பையன்தான் விஷம் வெச்சிட்டான்னு அவனை வனத் துறையினர் கைது செஞ்சிட்டாங்க” என்றவர் சில நிமிடம் மௌனம் காத்தார்.

“எல்லாரும் அந்த பையன்தான் கோபத்துல ஏதோ செஞ்சிட்டான்னு நினைச்சாங்க. மூணு நாள்ல போஸ்ட் மார்டம் ரிப்போர்ட் வந்துச்சு. அதை படிச்சு பார்த்தப்போ, அந்த மருத்துவர்களால கூட நம்ப முடியல. இந்த மூன்று நாட்களும் அந்த யானை உணவு உட்கொள்ளாம வெறும் கல்லை உண்டிருக்கு. அதிகமான கற்கள் சேர்ந்ததால ஜீரணமாகாமல் அந்த யானை இறந்திருக்கு. மன அழுத்தத்துல இருக்கும்போது யானைகள் இப்படி பண்ணும்னு அந்த மருத்துவர் சொன்னாரு. எங்களால அந்த நிகழ்ச்சியை நம்ப முடியலை. ஒரு யானை, மனிதர்களோட உணர்வுகளுக்கு இவ்வளவு மதிப்பு கொடுக்குதுன்னு நினைச்சப்போ, அந்த விலங்குகளுக்கு ஐந்தறிவுதான்னு சொல்றதை ஏத்துக்க முடியல. அவற்றை மிருகமா பாக்குறவங்களை நாகரிகவாதிகள்னு சொல்றோம். அதையும் ஓர் உயிரா மதிக்கிறவங்களைக் காட்டுமிராண்டிகள்னு சொல்லுறோம்” என்று கூறிவிட்டு ஓர் எள்ளல் சிரிப்பைச் சிந்தினார்.

காடு என்பது எல்லா உயிரினங்களுக்குமானது. காட்டுக்கு மனிதன் – மிருகம் என்ற பாகுபாடு தெரியாது. ஐந்தறிவு – ஆறறிவு என்று பகுப்பாய்வு புரியாது. காடுகள் எல்லோருக்கும் எல்லா வாய்ப்புகளையும் சமமாக வழங்கும் தன்மை கொண்டவை. அவற்றைச் சுரண்டுவதும், சீரழிப்பதும் நவீனப் பொருளாதாரச் சிந்தனை கொண்ட மனிதக்கூட்டத்தின் செயல். காடுகளின் இயல்பைப் புரிந்துகொண்டு, உயிரினங்களோட ஒத்திசைந்து வாழ்வது இந்த காட்டுவாசிகளின் இயல்பு.

இயல்புடன் இருப்பவை மட்டுமே உயிருடன் இருக்கும். இயற்கைக்கு எதிரான செயல்கள் புரிந்து, இயல்பைத் திரித்து வாழும் உயிர்கள் துடைத்தழிக்கப்படும். அப்படி அழிந்த உயிர்களின் எண்ணிக்கை வரலாற்றின் பக்கங்களில் பல கோடி இருக்கின்றன. அந்த வரலாற்றுப் புத்தகத்தில் நவீன மனிதர்களுக்கும் ஒருபக்கம் ஒதுக்கப்பட்டுவிடக் கூடாது என்பதே எம் விருப்பம்!

[சிறப்புக் கட்டுரை: காட்டுவாசிகளிடம் கற்றவை – 7](https://www.minnambalam.com/k/2019/09/20/15)

�,”

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *