Zஊழல்வாதியா அர்விந்த் கெஜ்ரிவால்?

public

அர்விந்த் கெஜ்ரிவாலின் தலைமையிலான டெல்லி ஆட்சி மீது ஊழல் குற்றச்சாட்டு குண்டை வீசியிருக்கிறது ‘சுங்லு’ ரிப்போர்ட்.

2014இல் நாடு முழுவதும் நடந்த பொதுத்தேர்தலில் ஐக்கிய முற்போக்கு கூட்டணியை வீழ்த்தி ஆட்சிக் கட்டிலில் பிஜேபி அமர்ந்தது. இதற்கு காரணமாக பலரும் நினைப்பது போல மோடியின் குஜராத் ஆட்சி, அவரின் ஆளுமை… இல்லை, எவரையும் எளிதில் கவனிக்க வைக்கும் அவரது வசீகரமா… என்றால் இதில் எதுவுமில்லை என்று பதில் வரும் பிஜேபி-யினரிடமிருந்து. அப்படியென்றால் மோடியை ஆட்சியில் அமர வைத்தது எது?

வரலாற்றின் பக்கங்களை புரட்டினால் புரியும், ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசாங்கத்தை அன்பாப்புலர் ஆக்கியது அன்னா ஹசாரேவும் அவரது கூட்டாளிகளான அர்விந்த் கெஜ்ரிவால் போன்றவர்களும்தான்.

மன்மோகன்சிங் அரசின் ஊழல்களையும் முறைகேடுகளையும், அதன் கடைசி காலங்களில், மிகப்பெரிய அளவில் அம்பலப்படுத்தி, சாதாரண ஜனங்கள் வாய்களிலும்கூட ‛ஊழல்’, ‛ஊழல்’ என உச்சரிக்க வைத்த பெருமை இவர்களைத்தான் சாரும்.

இவர்களது உழைப்பைத்தான் கட்டமைப்பு பலம் கொண்ட பிஜேபி அறுவடை செய்தது. இதை பிஜேபி-யின் முக்கியத்தலைவர்கள் இப்போதும்கூட சத்தமில்லாமல் ஒப்புக்கொள்ளவே செய்கின்றனர். இப்போது அதுவல்ல விவகாரம்.

ஊழல் என்ற ஒரே ஓர் அஸ்திரத்தை வைத்துக்கொண்டு காங்கிரஸ் எனும் ஆலமரத்தை சாய்த்த பெருமைக்குரிய அரவிந்த் கெஜ்ரிவால் அண்ட் கோ, டெல்லியில் ஆட்சியை கைப்பற்றி, இரண்டு ஆண்டுகள் முடிந்துள்ள நிலையில், அதே ஊழல் அஸ்திரம் அவரை பதம்பார்க்க ஆரம்பித்துள்ளது. ஊழல் என்கிற வார்த்தை இப்போது அரவிந்த் கெஜ்ரிவாலுக்குப் பெருத்த தலைவலியை கொடுத்து வருகிறது.

பாண்டிச்சேரியில் கவர்னரிடம் சிக்கிக்கொண்டு படாதபாடு படும் நாராயணசாமியைப் போலவே, டெல்லியிலும் கவர்னரிடம் சிக்கி சிரமப்படும் முதல்வர்தான் அரவிந்த் கெஜ்ரிவால். டெல்லியில் கவர்னருக்குதான் அதிகாரம். தனது ஒப்புதல் இல்லாமல் முதல்வர் எடுக்கும் சாதாரண நிர்வாக முடிவுகளைக்கூட கவர்னர் குடைந்தெடுக்க முடியும்.

அப்படித்தான், நஜீப் ஜங் என்பவர் லெப்டினன்ட் கவர்னராக இருந்தபோது கெஜ்ரிவால் அரசுக்குக் கடும் குடைச்சலைத் தந்தார். தனது அனுமதியில்லாமல், அரசு எடுத்த பல்வேறு முடிவுகள் மீது, வி.கே.சுங்லு என்பவரது தலைமையில் கமிஷன் அமைத்து விசாரணை நடத்த உத்தரவிட்டு இருந்தார். கமிட்டியும் விசாரிக்க ஆரம்பித்து அதன் வேலையை முடித்து விட்டது.

சுங்லு கமிட்டி ரிப்போர்ட், இன்னும் அதிகாரபூர்வமாக வெளியாகவில்லை. ஆனாலும், அந்த ரிப்போர்ட்டின் பல முக்கிய ஷரத்துக்கள் தகவல் அறியும் உரிமைச் சட்டம் மூலம் அம்பலமாகி, கெஜ்ரிவாலின் தூக்கத்தை கெடுக்கத் தொடங்கியுள்ளன.

குறிப்பாக, டெல்லி காங்கிரஸ் கமிட்டி தலைவர் அஜய்மக்கான், இதில் தீவிரம் காட்ட, பிஜேபியோ ஒருபடி மேலே போய், சுங்லு அறிக்கையை அக்குவேறு ஆணிவேறாக பிய்த்து மேய்ந்து, கெஜ்ரிவாலை உண்டு இல்லை என ஆக்கிவருகிறது.

அப்படி என்னதான் சொல்லுகிறது சுங்லுவின் அறிக்கை?

‘ஆம் ஆத்மி அரசின் அமைச்சர்கள், தங்களுக்கு வேண்டிய செயலாளர்களை நியமிப்பது உள்பட, பல்வேறு முக்கிய நியமனங்களில் எல்லாம் இஷ்டபடி முறைகேடுகள் நடந்துள்ளன. அமைச்சர்கள் அதிகார மையங்களில் தங்களது உறவினர்களை அமர்த்தியுள்ளனர்.

எல்லாவற்றுக்கும் மேலாக, ஆம் ஆத்மி கட்சியின் அலுவலகத்துக்கு விதிகளுக்கு புறம்பாக, டெல்லியின் முக்கிய பகுதியில் நிலம் ஒதுக்கியிருக்கிறார்கள். இதனால் அரசுக்கு பல கோடி ரூபாய், நஷ்டம் ஏற்பட்டுள்ளது. இது பெரிய நஷ்டமாகும்.

கெஜ்ரிவாலின் உறவினராக உள்ள டெல்லி மகளிர் ஆணையத் தலைவருக்கு, அரசு பங்களா முறைகேடாக ஒதுக்கப்பட்டுள்ளது. அரசு வக்கீல்கள் நியமனம் அனைத்திலும் இஷ்டம்போல ஆம் ஆத்மியினர் புகுந்து விளையாடியுள்ளனர்.

அரசின் முக்கிய பதவிகளில், தகுதியே இல்லாத பலரும் அமர்த்தப்பட்டுள்ளனர். அமைச்சர்களின் வெளிநாட்டுப்பயணங்கள், பங்களாக்கள் ஒதுக்கீடு என பல விஷயங்களிலும் விதிமுறைகள் காற்றில் பறக்கவிடப்பட்டுள்ளன.

சுகாதாரத்துறை அமைச்சரின், தனிச்செயலாளராக, நிகுஜ் அகர்வால் என்பவர், கெஜ்ரிவாலின் உறவினர் என்ற ஒரே காரணத்துக்காக மட்டுமே நியமிக்கப்பட்டுள்ளார்.

அதைவிட, ரோஷன் சங்கர் என்பவர் மாநில சுற்றுலாத்துறையின் அரசு ஆலோசகர் ஆக்கப்பட்டுள்ளார். இவர் வெறும் ப்ளஸ் டூ மட்டுமே படித்தவர். அதுமட்டுமல்ல, இவரும் கெஜ்ரிவாலின் உறவினரே’.

குடும்ப அரசியலும், ஊழலும் கொடி கட்டிப்பறப்பதாக கெஜ்ரிவாலுக்கு எதிராக அடுக்கிக் கொண்டே போகிறது சுங்லுவின் அறிக்கை.

இந்த அறிக்கைகள்தான் தலைநகர் டெல்லியில் இப்போது ஹாட் மேட்டர். இதற்கு கடுமையான எதிர்ப்பைத் தெரிவிக்கும் கெஜ்ரிவால், இது வேண்டுமென்றே அதிகாரிகளை நிர்ப்பந்தப்படுத்தி இந்த அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளதாக தனக்கு நெருக்கமான ஊடகவியலாளர்களிடம் சொல்லி வருகிறார்.

இந்தச் சந்தர்ப்பத்தை சரியாகப் பயன்படுத்த நினைக்கும் பிஜேபி, கெஜ்ரிவாலை கடுமையாக விமர்சனம் செய்ய மத்திய அமைச்சர்கள் வெங்கையாநாயுடு, நிர்மலா சீத்தாராமன் போன்ற சீனியர்களை களம் இறக்கியுள்ளது.

தங்களது சாம்ராஜ்யத்தைக் கவிழ்த்த கெஜ்ரிவால் மீது மற்றவர்களைக் காட்டிலும் காங்கிரஸும் எப்போதும் அதிக கோபத்துடன் இருந்து வருகிறது. ஹாட்டிரிக் சாதனையாக ஷீலா தீட்சித் ஆட்சி டெல்லியில் நடந்தபோது, காமன் வெல்த் போட்டிகள் குறித்த ஊழல் குற்றச்சாட்டுகள் கிளம்பின.

அதற்காக, இதே சுங்லு கமிட்டிதான் ஆராய்ந்து அறிக்கை தந்தது. அதில் ஷீலா தீட்சித் மீது ஏகப்பட்ட குற்றச்சாட்டுகள் அடுக்கப்பட்டன. அந்த அறிக்கையின் கோப்புகளை வைத்துக் கொண்டுதான் ஊடகங்கள் முன் அறிக்கையை ஆட்டி ஆட்டி அரவிந்த் கெஜ்ரிவால் கேள்விகளை எழுப்பினார்.

அதே சுங்லு கமிட்டி அறிக்கை இப்போது அரவிந்த் கெஜ்ரிவாலையும் மக்கள் முன் ஊழல்வாதியாக அம்பலப்படுத்துகிறது. டெல்லியில் உள்ளாட்சித் தேர்தல்கள் நடக்கவுள்ள நிலையில், இந்த முறைகேடுகளை முன்வைத்து, அரவிந்த் கெஜ்ரிவாலைப் பார்த்து அஜய் மக்கான் கேட்கிறார், ‘மானம், வெட்கம், ரோஷம் இருக்கிறதோ இல்லையோ… குறைந்தபட்சம் மனச்சாட்சியாவது இருக்குமேயானால், அரவிந்த் கெஜ்ரிவால் ராஜினாமா செய்வாரா’ என்று.

எல்லா அரசியல் கட்சிகளின் தலைவர்களையும் அயோக்கியர்கள் என்று பேசிய பேசியே ஆட்சிக்கு வந்து அதிசயத்தை ஏற்படுத்திய அர்விந்த் கெஜ்ரிவாலின் உண்மையான முகம் இதுதான் என டெல்லி மக்களின் முன்பு சுங்லுவின் அறிக்கையை வீசிவிட்டு செல்கிறார்கள் பிஜேபியும், காங்கிரஸ் கட்சியினரும். ஆனால், இதற்கெல்லாம் பதில்கள்தான் கெஜ்ரிவாலிடம் இல்லை.

ஆம் ஆத்மி மீது வைக்கப்படும் குற்றச்சாட்டுகள் உண்மையானதாக இருந்தால் டெல்லி மக்கள் இனி யாரையும் நம்பமாட்டார்கள்.

ஆம் ஆத்மி மீது விழுந்த ஊழல் கறையை எந்தத் துடைப்பத்தைக் கொண்டு சுத்தம் செய்யப் போகிறார் கெஜ்ரிவால்?

– சண்.சரவணக்குமார்

�,”

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *