Wபூத் கமிட்டிகள் அமைக்கும் விஜய்

public

கமல் கட்சி ஆரம்பித்துவிட்டார்; ரஜினி கட்சி ஆரம்பிக்கப் போகிறார் என்ற நிலையில், நேற்று (மே 5) சென்னையில் நடிகர் விஜய் நடத்திய மக்கள் இயக்க நிர்வாகிகளின் ஆலோசனைக் கூட்டம் அடுத்த கட்ட பரபரப்பைக் கூட்டியிருக்கிறது. இதுபற்றி விஜய் ரசிகர்கள் வட்டாரத்தில் விசாரித்தபோது… சத்தம் போடாமல் விஜய் பூத் கமிட்டிகள் அமைத்து வரும் தகவல் நமக்குக் கிடைத்தது.

சில நாள்களுக்கு முன் விஜய் மக்கள் இயக்கத் தலைவர் புஸ்ஸி ஆனந்தனிடம் இருந்து காஞ்சிபுரம், விருதுநகர், கடலூர் உள்ளிட்ட ஆறு மாவட்ட விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகளுக்கு ஒரு தகவல் சென்றுள்ளது. மே 5ஆம் தேதி காலை சென்னை கிழக்குக் கடற்கரை சாலையில் இருக்கும் பனையூரில் உள்ள விஜய் மக்கள் இயக்கத் தலைமை அலுவலகத்துக்கு வர வேண்டும், விஜய் முக்கியமான சந்திப்பு நடத்துகிறார் என்பதுதான் அந்தத் தகவல்.

இதையடுத்து ஆறு மாவட்டங்களைச் சேர்ந்த முக்கிய நிர்வாகிகள் நூற்றுக்கணக்கானோர் நேற்று காலை பனையூர் அலுவலகத்தில் திரண்டனர். காலை 11 மணியளவில் அங்கே வந்தார் விஜய். கேரளாவில் இருந்து வந்த சில ரசிகர்களோடு படம் எடுத்துக் கொண்டவர், வரவழைக்கப்பட்ட ஆறு மாவட்ட விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகளைச் சந்தித்தார்.

ஏற்கெனவே உத்தரவிட்டபடி இந்த ஆறு மாவட்டத்திலும் விஜய் மக்கள் இயக்கத்தினர், தங்கள் மாவட்டங்களில் உள்ள ஒவ்வொரு பூத்துக்கும் ஐந்து உறுப்பினர்களைக் கொண்ட பூத் கமிட்டி அமைத்திருப்பதற்கான ஆவணங்களைக் கொடுத்திருக்கிறார்கள். இதையடுத்து அவர்களைப் பாராட்டிய விஜய்,

“பூத் கமிட்டி அமைச்சிட்டோம்னு சும்மா இருந்திடாதீங்க. மக்களோட தொடர்ந்து தொடர்புல இருங்க. கோடைக்காலத்துல அனைத்து இடங்கள்லயும் தண்ணீர் பந்தல் அமைக்கணும்” என்று சில நிமிடங்கள் பேசியிருக்கிறார் விஜய். பின், அனைவருக்கும் மட்டன் பிரியாணியுடனான விருந்து கொடுத்திருக்கிறார் விஜய்.

இப்போது முதல் கட்டமாக ஆறு மாவட்டங்களில் பூத் கமிட்டி அமைத்திருக்கிறார்கள் விஜய் மக்கள் இயக்கத்தினர். அடுத்து நாகை உள்ளிட்ட இன்னும் சில மாவட்ட நிர்வாகிகளை அடுத்த வாரம் சந்திக்கிறார் விஜய். அதற்குள் அந்த மாவட்டங்களிலும் பூத் கமிட்டி அமைக்கும் பணிகளை முடுக்கிவிட்டிருக்கிறார்கள் நிர்வாகிகள்.

வரும் ஜூன் மாதம் 22ஆம் தேதி தனது 44ஆவது பிறந்த நாளைக் கொண்டாடுகிறார் விஜய். அதற்குள் தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் தனது மக்கள் இயக்கத்துக்கான பூத் கமிட்டிகள் அமைக்கப்பட்டாக வேண்டும் என்று உத்தரவிட்டிருக்கிறார் விஜய். மேலும் தனது ரசிகர்கள் வீட்டு விசேஷங்களுக்கும் துக்க நிகழ்ச்சிகளுக்கும் மாநிலத் தலைவரான புஸ்ஸி ஆனந்தனைத் தன் சார்பாக அனுப்பி வருகிறார்.

கடந்த ஏப்ரல் 9ஆம் தேதி சிதம்பரம் அருகே உள்ள புவனகிரியில் சொத்துப் பிரச்சினையில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இருவர் வெட்டிக் கொல்லப்பட்டனர். அதில் ஒருவரான அபினாஷ் என்ற இருபது வயது வாலிபர் தீவிரமான விஜய் ரசிகர். இந்தத் தகவல் விஜய் மக்கள் இயக்க மாவட்ட நிர்வாகிகள் மூலமாக விஜய்க்குத் தெரிவிக்கப்பட்டது. உடனடியாக மக்கள் இயக்க மாநிலத் தலைவர் புஸ்ஸி ஆனந்தனை அழைத்த விஜய், தன் சார்பில் புவனகிரி சென்று அபினாஷ் குடும்பத்தினருக்கு ஆறுதல் சொல்லுமாறு கேட்டுக்கொண்டுள்ளார். இதையடுத்து கடந்த வாரம் அபினாஷ் வீட்டுக்குச் சென்ற புஸ்ஸி ஆனந்தன் அவருடைய குடும்பத்தினருக்கு ஆறுதல் சொன்னதோடு, அங்கிருந்து விஜய்க்கு போன் செய்து கொடுத்து குடும்பத்தினரிடம் பேசச் செய்துள்ளார். அதன்பின் மக்கள் இயக்க நிகழ்ச்சிகள் சிலவற்றில் கலந்துகொண்டுவிட்டு புதுச்சேரி வழியாகச் சென்னை திரும்பினார் புஸ்ஸி ஆனந்தன்.

இவ்வாறு சமீப காலமாக விஜய் தனது ரசிகர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினரோடு தொடர்புகளை வலுப்படுத்தி வருகிறார். சென்டிமென்ட்டான இந்தத் தொடர்பு ஒருபக்கம் என்றால் பூத் கமிட்டிகளை அமைத்துக் கட்டமைப்பு ரீதியாகவும் விஜய் மக்கள் இயக்கத்தை வலிமைப்படுத்தி வருகிறார் விஜய்.

ஜூன் 22 விஜய்யின் பிறந்த நாளுக்குள் தமிழகத்தில் எத்தனை வாக்குச் சாவடிகள் இருக்கின்றனவோ அத்தனை பூத் கமிட்டிகளை விஜய் மக்கள் நல இயக்கத்தினர் அமைக்கத் தீவிரமாகியுள்ளனர்.

சத்தமில்லாமல் விஜய் செய்துவரும் இந்தச் செயல்கள் அவரது அரசியல் அறிவிப்புக்கு முன்னோட்டமாகவே பார்க்கப்படுகிறது.

**ஆரா**

�,”

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *