Tஇந்தியாவைக் கரைசேர்த்த ‘தோணி’!

public

இங்கிலாந்து அணிக்கு எதிரான முதலாவது டெஸ்ட்டில் மிக மோசமான நிலைக்குச் செல்லவிருந்த இந்திய அணியின் நிலை கோலியின் அபார சதத்தால் ஓரளவுக்குக் காப்பாற்றப்பட்டிருக்கிறது.

இந்திய, இங்கிலாந்து அணிகள் எட்ஜ்பாஸ்டனில் முதலாவது டெஸ்ட்டில் விளையாடி வருகின்றன. முதலில் விளையாடிய இங்கிலாந்து அதன் முதல் இன்னிங்ஸில் இந்தியாவின் சிறப்பான பந்து வீச்சால் 287 ரன்களை மட்டுமே சேர்த்தது.

அதையடுத்து இந்திய அணி தனது முதல் இன்னிங்ஸைத் தொடங்கியது. துவக்க ஜோடி 50 ரன்களை மட்டுமே குவித்த நிலையில் இங்கிலாந்து பந்து வீச்சாளர் சாம் கரனால் அந்த ஜோடி பிரிக்கப்பட்டது. முதல் விக்கெட்டாக 20 ரன்களை மட்டுமே எடுத்திருந்த முரளி விஜய் எல்பிடபுள்யூ முறையில் வீழ்ந்தார்.

பெரும் போராட்டத்துக்கு பிறகு இந்திய டெஸ்ட் லெவனில் 3ஆவது இடத்தை உறுதி செய்திருக்கும் ஐபிஎல் புகழ் அதிரடி வீரர் கே.எல்.ராகுல் அதன் பின்னர் களமிறங்கினார். ஐபிஎல்லைப் போலவே இந்தப் போட்டியிலும் முதல் பந்திலேயே பவுண்டரி அடித்து ஆட்டத்தைத் தொடங்கினார் ராகுல்.

ஆனால், அதுதான் இந்த இன்னிங்ஸில் தான் அடிக்கும் கடைசி பவுண்டரி என அவர் அறிந்திருக்க வாய்ப்பில்லை. நான்கு ரன்கள் மட்டுமே எடுத்த ராகுலும் சாம் கரன் பந்து வீச்சில் போல்டாகி வெளியேறினார். அதன்பின் கோலி உள்ளே வந்த அடுத்த சில நிமிடங்களிலேயே மற்றொரு தொடக்க வீரரான தவனும் 26 ரன்னில் சாம் கரன் பந்தில் டாவிட் மலனிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார்.

அவரைத் தொடர்ந்து களம் இறங்கியவர்கள் வருவதும் போவதுமாக இருக்க கோலி மட்டுமே மறுமுனையில் கவனமாக விளையாடிக்கொண்டிருந்தார். ஜேம்ஸ் ஆண்டர்சனுக்கும் கோலிக்கும் இடையிலான மோதலுக்காகவே இந்தத் தொடர் பெரிதும் எதிர்பார்க்கப்பட்டது. எதிர்பார்த்ததுபோலவே ஆண்டர்சன் சிறப்பாகப் பந்து வீசி கோலியை நெருக்கடிக்குள்ளாக்கினார். ஆஃப் ஸ்டெம்புக்கு வெளியே பல பந்துகள் கோலியின் மட்டை விளிம்பில் பட்டுச் சென்றன. ஆனால், அவை கேட்சாக உருமாறவில்லை. 21 ரன்கள் எடுத்திருந்தபோது இரண்டாவது ஸ்லிப்பில் கோலி கொடுத்த மிக எளிதான ஒரு கேட்சை டாவிட் மலன் பிடிக்கத் தவறினார். 51 ரன்கள் எடுத்திருக்கையில் ஸ்டோக்ஸ் பந்தில் கோலி கொடுத்த கேட்சும் தவறவிடப்பட்டது. இந்த முறையும் மலனே அதைத் தவறவிட்டார்.

மட்டை விளிம்புச் சோதனைகள், கேட்சுகள் என்று தடுமாறினாலும் கோலி அசரவில்லை. கிடைத்த வாய்ப்புகளைப் பயன்படுத்திக்கொண்டு தன் கவனத்தையும் ஆட்டத்தின் துல்லியத்தையும் கூட்டிக்கொண்டேபோனார். அடிக்க வேண்டிய பந்துகளை அடிக்கத் தவறவில்லை.

எனினும், மறு முனையில் கோலிக்குத் துணையாக நின்று யாரும் விளையாடாததால் இந்திய அணி 200 ரன்னைக் கடக்குமா என ஒரு கட்டத்தில் சந்தேகம் எழுந்தது. அவ்வப்போது கிடைத்த குறைந்த கால அளவுள்ள பார்ட்னர்ஷிப்புகளை நன்கு பயன்படுத்திக்கொண்டு கோலி மளமளவென ரன்களைச் சேர்க்க சேர்க்க, ஓரளவுக்கு நல்ல ஸ்கோரை நோக்கிப் பயணிக்கத் தொடங்கியது இந்தியா. மறுபுறம் கோலியின் ஸ்கோரும் அதிவேகத்தில் உயர்ந்துகொண்டிருந்தது.

மட்டையாளர்கள் கைவிட்டாலும், இஷாந்த் ஷர்மா, உமேஷ் யாதவ் ஆகிய பந்து வீச்சாளர்கள் கோலிக்கு உறுதுணையாக நிற்க, அற்புதமான சதம் அடித்தார் கோலி. இந்தத் தொடரின் முதலாவது டெஸ்ட் சதம், இங்கிலாந்து மண்ணில் முதல் டெஸ்ட் சதம் என்னும் பெருமையையும் பெற்றார்.

கடந்த முறை இங்கிலாந்துக்கு வந்திருந்தபோது கோலிக்கு அது மோசமான தொடராக அமைந்திருந்தது. அதை ஈடுகட்டும் விதமாகவே தற்போது முதல் போட்டியிலேயே சதம் கண்ட கோலியின் சாதனையானது பார்க்கப்படுகிறது. இறுதி நேரத்தில் தொடர்ச்சியாக விக்கெட்டுகள் விழ, அதிரடி ஆட்டத்தைக் கையாண்ட கோலி 149 ரன்களுக்குக் கடைசி விக்கெட்டாக வீழ்ந்தார். மறு முனையில் உமேஷ் யாதவ் 1 ரன்னுடன் களத்தில் நின்றார். இதன் மூலம் இந்தியாவின் முதல் இன்னிங்க்ஸ் 274 ரன்களில் முடிவுக்கு வந்தது. இங்கிலாந்தின் தரப்பில் சாம் கரன் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

இதையடுத்து இங்கிலாந்து அணி 2ஆவது இன்னிங்ஸைத் தொடங்கியது. அணியின் ஸ்கோர் 9 ரன்னாக இருந்தபோது அஸ்வின் பந்து வீச்சில் குக் ரன் எதுவுமின்றி அவுட் ஆனார். அத்துடன் 2ஆவது நாள் ஆட்டமும் முடிவு பெற்றது. இங்கிலாந்து அணி 2ஆம் நாள் ஆட்ட நேர முடிவில் 1 விக்கெட் இழப்புக்கு 9 ரன்கள் எடுத்திருக்கிறது. இன்னும் முழுமையாக மூன்று நாள் ஆட்டம் மிச்சமிருக்கும் நிலையில் இந்தப் போட்டி சம நிலையில் நிற்கிறது. ஒரு நாளில் கிட்டத்தட்ட 10 விக்கெட்கள் விழும் நிலையில் போட்டி நான்காவது நாளே முடிந்தாலும் வியப்பதற்கில்லை. யாருக்குச் சாதகமாக முடியும் என்பதுதான் இப்போதைய கேள்வி.�,”

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *