Iநமது ஊரில் இவ்வளவு சாவுகளா?

public

 

தற்கொலைகள் மனநோயா? தடுப்பது எப்படி? விளக்குகிறார் மனநல உளவியல் நிபுணர் டாக்டர். சுனில்

 

உலக அளவில் 40 நொடிக்கு ஒரு தற்கொலை ஏதோ ஒரு மூலையில் நடந்து கொண்டிருக்கிறது. இந்தியாவில் 5 நிமிடத்திற்கு ஒருவர் தற்கொலை செய்துகொள்கிறார்.

*ஏனிந்த தற்கொலைகள்?*

*இது ஒருவகையான மனநோயா?*

*இதற்கு யார் காரணம்?*

*இதனைத் தடுக்க என்ன செய்யமுடியும்?*

 

என்று அடுக்கடுக்காக நமக்குள் எழும் பல்வேறு கேள்விகளுக்கு பதிலளிக்கிறார், மனநல உளவியல் நிபுணர் டாக்டர் சுனில் அவர்கள். மைண்ட்-சோன் என்ற நிறுவனத்தை தொடங்கி நடத்தி வரும் இவர் தற்கொலை தடுப்பு நடவடிக்கைக்காக 24 மணிநேர இலவச உதவி மையத்தையும் வெற்றிகரமாக நடத்தி வருகிறார்.

**இதோ நமக்கான விடை அவரது வார்த்தைகளில்:**

இந்தியாவில் தற்கொலையை ஒரு குற்றமாக பார்த்த நிலைமாறியுள்ளது. ஆனால், அது ஒரு நோயாக பார்க்கப்படுகிறது. ஆனால், தற்கொலையை ஒரு நோயாக பார்க்கக்கூடாது. அது ஒரு பொது சுகாதார பிரச்சினையாக அணுக வேண்டும். **தற்கொலை எண்ணம் வருவதற்கு நம்முடைய மரபணு, மூளையில் உள்ள ரசாயன மாற்றங்கள், உடல் ரீதியான காரணங்கள், உளவியல் ரீதியான காரணங்கள், சமூக கட்டமைப்பு காரணங்கள், பொருளாதார காரணங்கள், அரசியல் கட்டமைப்பு காரணங்கள்** என பல காரணங்கள் உள்ளன, இவ்வாறு பலப்பிரச்சனைகளுடைய கூட்டுக் கலவையின் வெளிப்பாடே தற்கொலை செய்துகொள்வதற்கு ஒருவரைத் தூண்டுகிறது.

**தற்கொலைக்கான காரணங்கள்**

பெரும்பாலான தற்கொலைகள், குடும்ப பிரச்சினை, உடல்நலக்குறைவு, திருமணம் சம்பந்தப்பட்ட பிரச்சினைகள், போதைப்பொருள் பழக்கம், கடன் மற்றும் வங்கி பிரச்சினை, தேர்வில் தோல்வி, வேலையில்லா திண்டாட்டம், சுய தொழில் மற்றும் வேலையில் பிரச்சினை, சொத்து தகராறு, ஏழ்மை, நெருங்கிய உறவினர்களின் மரணம், சமூகத்தில் மரியாதை குறைவு, குழந்தையின்மை மற்றும் பிற காரணங்களுக்காக நடைபெறுகின்றன.

பெண்களைப் பொறுத்தவரை, உறவுச்சிக்கல்கள், குழந்தைத் திருமணம், தகாத உறவு பிரச்சினை, சிறுவயதில் தாய்மையடைதல், தாழ்ந்த சமூக நிலை, வன்முறைக்கு உள்ளாதல், குடும்ப வன்முறை மற்றும் பொருளாதார விடுதலையின்மை ஆகியவை தற்கொலைக்கான காரணங்களாக அமைகின்றன. **இந்தியாவில் 15 முதல் 35 வயதுக்குட்பட்ட பெண்கள், அதிலும் திருமணமான பெண்களே அதிக அளவில் தற்கொலை செய்திருக்கிறார்கள் என்று ஆய்வுகள் கூறுகின்றன.**

பெண்கள் இயல்பிலேயே தங்களது உணர்வுகளை வெளிப்படுத்தி விடுவார்கள். அழுகை, கோபம், சத்தம் போட்டு பேசுவது என்று ஏதாவது ஒருவகையில் அவர்கள் தங்களது மன அழுத்தத்தை குறைத்துக் கொள்வார்கள். அதனால் அவர்களுக்கு தற்கொலை எண்ணம் வருவது குறைவு என்ற தவறான  எண்ணம் பரவலாக உள்ளது.

சொல்றவன் செய்யமாட்டான் என்பது வழக்குமொழி. தற்கொலையை பொறுத்தவரை இது முற்றிலும் தவறு. சொல்றவனும் செய்வான். சொல்லாதவனும் செய்வான். என்பதுதான் இதற்கு பொருந்தும். அதேபோல், தற்கொலைக்கு முயலும் எவருக்கும், அவர்களது முதல் தற்கொலை முயற்சி பெரும்பாலும் வெற்றிபெறுவது இல்லை. குறிப்பாக, ஆண்களைவிட பெண்கள் அதிகமாக தற்கொலை முயற்சியில் ஈடுபடுவதாகவும், ஆண்களின் தற்கொலை முயற்சிகள்  பெரும்பாலும் மரணத்தில் முடிவதாகவும் ஆய்வுகள் கூறுகின்றன.

**நகர்புறங்களில் அதிகம்**

சமூக காரணிகள் என எடுத்துக்கொண்டால், கிராமப்புறங்களைவிட, நகர்புறங்களில் தற்கொலைகள் அதிகமாக உள்ளன. நகரமயமாக்கலினால் சிறிய குடும்ப அமைப்பு முறை மற்றும் அதன் கூடுதல் செலவுகள், வேலைச்சுமை ஆகியவை இதற்கான அடிப்படை காரணங்களாக கூறப்படுகின்றன. அதேபோல், பிரபலங்களின் தற்கொலைகளையோ அல்லது வேறுசில தொடர் தற்கொலை மரணங்களையோ ஊடகங்கள் அதீதமாக வெளிக்காட்டும் போது ஏற்படும் எதிர் விளைவுகள் சராசரி மனிதர்களையும் தற்கொலைக்கு தூண்டுகிறது.

இந்தியாவில் தற்கொலை செய்பவர்களில் அதிகபட்சமாக, விஷம்  அருந்தியும்,  அடுத்ததாக, தூக்குபோட்டு தற்கொலை செய்துகொள்வதும் அதிகமாக உள்ளது. கிராமப்புறங்களில் பூச்சிமருந்து என்பது யாருக்கும் எளிதில் கிடைத்து விடுகிறது. நகர்புறங்களிலும் சிலமருந்துகள் மருத்துவ சீட்டுகள் இல்லாமலே சிலகடைகளில் அளிக்கப்படுகின்றன. **இவற்றை தடுக்க அரசு சில கொள்கை வரையறைகள் கொண்டுவர வேண்டும். சொல்லப்போனால், கயிறுகள் வாங்கும்போது கூட எத்தனை முழம் எதற்கு அளிப்பது, அதை எதற்காக உபயோகிக்கிறார்கள் என்ற சாட்சியத்திற்கான சரிபார்க்கும் தரவுகள் பெற்று அளிப்பது என்ற அளவிற்கு வரையறைகளை அரசு கொண்டு வரவேண்டும்.**

**கல்வி மூலம் விழிப்புணர்வு**

நமது கல்விதிட்டத்தில் ஆறாம் வகுப்பு மற்றும் அதற்கு மேற்பட்ட மாணவர்களுக்கு தற்கொலைகள் தடுப்பு குறித்த நேர்மறை எண்ணங்களை அளித்தல், அதனை பாடத்திட்டமாக மாற்றுதல் அவசியம். ஏற்கனவே கூறியபடி, ஊடகம் செய்தியை செய்தியாக மட்டுமே வெளிப்படுத்த வேண்டும். இவ்வாறு, பல்வேறு மட்டங்களிலும் மாற்றங்களை நிகழ்த்துவதன்மூலம் நாம் இந்த தற்கொலைகளை தடுக்க முடியும்.

**உலக சுகாதரா மையம் – 2003 செப்டம்பர் 10 அன்று தற்கொலைத் தடுப்பு தினம் என பிரகனப்படுத்தியுள்ளது. அதற்குப் பின்னர்தான் தற்கொலையை குற்றமாக பார்ப்பது என்பது குறைந்துள்ளது. ஆனால், இந்த செயலை தடுக்க நாம் இன்னமும் நீண்டதூரம் பயணிக்க வேண்டியுள்ளது.**

**அறிவுரையின் பேரில் மன உளைச்சல் வேண்டாம்**

எல்லோருடைய மனதிலும் ஏதோ ஒரு முறை தற்கொலை எண்ணம் வருமென்பது உண்மை. **அவர்களுக்கு அறிவுரை வழங்குகிறேன் என்ற பெயரில் அவர்களின் மன உளைச்சலை அதிகப்படுத்தி விடக்கூடாது.** மாறாக, சிநேகா, மைண்ட்-சோன் போன்ற இருபத்திநான்கு மணிநேரமும் இவர்களுக்கெனவே சேவைபுரியும் அமைப்புகள் உள்ளன. அவர்களின் மன ஆறுதல் மற்றும் அந்த உணர்விலிருந்து மீள்வதற்கு இத்தகைய அமைப்புகளை அணுகலாம். மருத்துவர்களும் தற்கொலை முயற்சியின் காரணமாக அவர்களது மருத்துவமனைக்கு வருபவர்களுக்கு சிகிச்சை முடிந்தவுடன், ஒரு மனநல உளவியல் நிபுணரை அணுக பரிந்துரைக்க வேண்டும். நம்மை சுற்றியுள்ளவர்கள் மரணம் குறித்து அதிகம் பேசும்போதோ, அவர்களது வழக்கமான செயலிலிருந்து சற்றே மாறுபட்டு எதிர்மறையாக இருப்பார்கள் என்றால், அவர்களை மனிதநேயத்துடன் அணுகுதல், அவர்களை அதிலிருந்து மீட்டெடுக்கும் முயற்சியில் இதுவரை கூறிய ஏதாவது ஒரு வழிமுறையை கையாள்வது என்பது சிறப்பானதாக இருக்கும்.

**பிறக்கின்ற ஒரு உயிர், நான் வாழ இந்த சமூகம் தகுதியில்லை என்று தன்னை மாய்த்துக்கொள்வது அதில் எதிர்நீச்சல் அடிக்கும் நம் ஒவ்வொருவருக்குமான இழுக்கு.** அவர்களின் அந்த எண்ணத்தை மாற்ற நாம் அனைவரும் ஒருசேர மனிதநேயத்துடன் கரம்கோர்ப்போம். மாறுதலே மாறாதது என்ற இயங்கியல் விதியை அவர்களும் உணர, அவர்களின் வாழ்விலும் நம்பிக்கை துளிர்விட தன்னம்பிக்கை விதைப்போம்.

**வீடியோ வடிவில்**

**உஷா பாரதி**�,”

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *