உழைப்பாளர் தினத்தன்று வீட்டில் உள்ள அனைவருக்கும் பெஸ்ட்டாக என்ன செய்து கொடுக்கலாம் என்று நினைப்பவர்கள் சுவையான இந்த தஹி பிரெட் டிக்கி செய்து கொடுத்து அசத்தலாம். வெயிலுக்கேற்ற விருந்தாகவும் இந்த தஹி பிரெட் டிக்கி அமையும்.
என்ன தேவை?
பிரெட் ஸ்லைஸ் – 8
தண்ணீர் – 2 கப்
புளிப்பில்லாத கெட்டித் தயிர் – 5 கப்
சர்க்கரை – 6 டேபிள்ஸ்பூன்
நறுக்கிய கொத்தமல்லித்தழை – சிறிதளவு
பூரணம் செய்ய:
வேகவைத்து, தோல் உரித்த உருளைக்கிழங்கு – 2
மிளகாய்த்தூள் – அரை டீஸ்பூன்
முளைகட்டி வேகவைத்த
பச்சைப்பயறு – 2 டேபிள்ஸ்பூன்
உப்பு – கால் டீஸ்பூன்
இனிப்புச் சட்னி செய்ய:
பேரீச்சம் பழம் – 8 (கொட்டை நீக்கி, நறுக்கவும்)
வெல்லம் – ஒரு டேபிள்ஸ்பூன்
கறுப்பு உப்பு – கால் டீஸ்பூன்
கெட்டியான புளிக்கரைசல் – 2 டேபிள்ஸ்பூன்
மிளகாய்த்தூள் – ஒரு டீஸ்பூன்
சீரகத்தூள் – அரை டீஸ்பூன்
உப்பு – தேவைக்கேற்ப
பச்சை சட்னி செய்ய:
பச்சை மிளகாய் – 10
கொத்தமல்லித்தழை – அரை கப்
புதினா இலை – கால் கப்
சீரகத்தூள் – அரை டீஸ்பூன்
சாட் மசாலாத்தூள் – கால் டீஸ்பூன்
எலுமிச்சைப் பழம் – அரை மூடி
உப்பு – தேவைக்கேற்ப
எப்படிச் செய்வது?
பூரணம் செய்யக் கொடுத்துள்ள பொருள்கள் அனைத்தையும் சேர்த்து, உப்பு, காரம் சரிபார்த்துப் பிசையவும். பிசைந்த மாவை எலுமிச்சை அளவு உருண்டைகளாக உருட்டவும். தண்ணீரில் உப்பு சேர்த்துக் கலக்கவும். ஒரு பிரெட் துண்டை 5 விநாடிகள் தண்ணீரில் முக்கி எடுத்து உள்ளங்கையில் வைத்துத் தண்ணீரை வடிக்கவும். நனைந்த பிரெட்டின் மேல் உருளைக்கிழங்கு பூரணத்தை நடுவில் வைத்து உருண்டை பிடித்து கட்லெட் போன்று தட்டி எடுக்கவும். இதேபோல அனைத்து பிரெட் துண்டுகளையும் உருட்டி, தட்டி ஃப்ரிட்ஜில் வைக்கவும். அடுப்பில் வாணலி வைத்து, இனிப்புச் சட்னி செய்யக் கொடுத்துள்ள பொருள்கள் அனைத்தையும் சேர்த்து, சிறிது தண்ணீர் ஊற்றி 8 நிமிடங்கள் வேகவிடவும். பின்னர் நன்றாக ஆறவைத்து உப்பு, காரம், இனிப்பு, புளிப்பு சரிபார்க்கவும்.
பச்சை சட்னி செய்யக் கொடுத்துள்ள பொருள்களில் எலுமிச்சைச் சாறு தவிர மற்ற அனைத்தையும் மிக்ஸியில் ஒன்றாகச் சேர்த்து அரைக்கவும். அடுப்பில் வாணலியை வைத்து சட்னியைச் சேர்த்துச் சிறிதளவு தண்ணீர்விட்டு கொதிக்கவைத்து இறக்கவும். பச்சை வாசனை நீங்கியதும், அதனுடன் எலுமிச்சைச் சாறு சேர்த்துக் கலக்கி உப்பு, காரம் சரிபார்க்கவும்.
தயிர் மற்றும் சர்க்கரையை ஒன்றாகச் சேர்த்து நன்றாக அடித்து வாய் அகன்ற பாத்திரத்தில் ஊற்றவும். பரிமாறுவதற்குச் சற்று முன்பு பிரெட் உருண்டைகளைத் தயிரில் போட்டு பின்னர் அதன் மேல் இனிப்புச் சட்னி, பச்சை சட்னி சேர்த்து, நறுக்கிய கொத்தமல்லித்தழை தூவிப் பரிமாறவும்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
மோடி சுட்ட வடையை விட டிமாண்டா? – அப்டேட் குமாரு
இளையராஜா குறித்து விமர்சனம்: வைரமுத்துவுக்கு கங்கை அமரன் எச்சரிக்கை!