கேரளாவில் மருத்துவர் பரிந்துரைத்தால் மதுபானம் கிடைக்கும்!

public

கேரளாவில் மது கிடைக்காத விரக்தியில் சிலர் தற்கொலை செய்துகொண்டதைத் தொடர்ந்து, மருத்துவரின் பரிந்துரை சீட்டுடன் வருபவர்களுக்கு மதுபானம் வழங்கப்படும் என்று கேரள முதல்வர் அறிவித்துள்ளார்.

கொரோனா வைரஸ் பரவுதலைத் தடுக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அத்தியாவசிய பொருட்களின் விற்பனை தவிர மற்ற அனைத்து விதமான தொழில்களும் முடக்கப்பட்டுள்ளது. மக்கள் வெளியே வருவதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ள சூழலில் இந்தியா முழுவதும் அனைத்து மதுபான கடைகளும் மூடப்பட்டுள்ளது.

தொடர்ந்து பல நாட்களாக மதுபானங்கள் கிடைக்காமல் இருந்ததால் மதுவுக்கு அடிமையானவர்களில் சிலர் மன அழுத்தத்திற்கு ஆளாகியுள்ளனர். அதனால் ஏற்பட்ட விரக்தியின் காரணமாக சிலர் தற்கொலை முடிவுகளுக்கும் தள்ளப்பட்டுள்ளனர். கேரளாவின் திருச்சூரைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் மது பானம் கிடைக்காத விரக்தியில் கடந்த சனிக்கிழமை ஆற்றில் விழுந்து தற்கொலை செய்துகொண்டார். அதே போன்று காயம்குளத்தில் முடிதிருத்தம் செய்யும் வேலை செய்துவந்த 38 வயதாகும் தொழிலாளி ஒருவர் மதுபானம் கிடைக்காததால் ஷேவிங் லோஷனைப் பருகி தற்கொலை செய்துகொண்டார். மதுபானங்கள் கிடைக்காததால் மன அழுத்தத்திற்கு ஆளாகி கேரளாவில் மட்டும் இதுவரை 7 பேர் தற்கொலை செய்துகொண்டுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. இதனைத் தொடர்ந்து கேரள அரசு முக்கிய முடிவு ஒன்றை எடுத்துள்ளது.

அதன்படி இத்தகைய காரணங்களால் மன அழுத்தத்திற்கு ஆளாகியுள்ளவர்களுக்கு இலவச சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்ய வேண்டும் என்று கேரள முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார். அத்துடன் மருத்துவரின் பரிந்துரை சீட்டுடன் வருபவர்களுக்கு மதுபானம் வழங்கலாம் என்றும் அவர் அறிவித்துள்ளார்.

மேலும் இத்தகைய பிரச்னைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக ஆன்லைன் மது விற்பனை குறித்து பரிசீலித்து வருவதாகவும் அம்மாநில அரசு தெரிவித்துள்ளது.

**-இரா.பி.சுமி கிருஷ்ணா**�,

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *