sசிறப்புக் கட்டுரை: வைட்டமின் குறைபாடுகள்…

public

வைட்டமின்கள் நமது உடலின் எனர்ஜி பூஸ்டர்கள். நம் உடலின் செல்கள் தொடர்பான நடவடிக்கைகளுக்கு வைட்டமின்கள் மிக முக்கியமானதாகும். செல்கள் வளர்ச்சியிலும், அதில் ஏற்படும் பழுதை சரி செய்வதிலும் வைட்டமின்களுக்கு மிகப்பெரிய பங்கு உண்டு.

உடலின் வளர்ச்சிக்கு மற்றும் மாற்றங்களுக்கு வைட்டமின்கள் கட்டாயத் தேவையாகும். இந்த வைட்டமின்கள் உள்ள உணவு சரியாக எடுக்காமல் அலட்சியப்படுத்தி வந்தால் நமது உடலில் பல்வேறு நோய்களுக்கு வெல்கம் கேட் திறந்து விடுவதற்கான வாய்ப்புகளை நாமே அதிகரிக்கிறோம்.

வைட்டமின்கள் வகைகள் என்ன?

வைட்டமின்களில் பொதுவாக கொழுப்பில் கரையும் வைட்டமின்கள் (வைட்டமின்கள் – ஏ, டி, ஈ, கே), தண்ணீரில் கரையும் வைட்டமின்கள் (வைட்டமின்கள் – பி1, பி6, பி7, பி12 பிரிவுகள், வைட்டமின் சி.) என இரு பிரிவுகள் உண்டு.

வைட்டமின் ஏ:

• வைட்டமின் ஏ நமது உடலில் ஒரு முக்கியமான வைட்டமின். அதிக வெளிச்சம், குறைந்த வெளிச்சம் ஆகியவற்றில் கண் தனது அமைப்பினை சரி செய்து கொள்ள இது உதவும்.

• நமது எலும்பு, பல், திசு வளர்ச்சி ஆகியவற்றிற்கும் நோய் எதிர்ப்பு சக்திக்கும் இந்த வைட்டமின்தான் பொறுப்பேற்கிறது.

• இந்த வைட்டமின் குறையும்போது மாலைக்கண் நோய், வறண்ட சொரசொரப்பான சருமம், எலும்பு வளர்ச்சி குறைபாடு, உடல் எளிதில் நோய் வாய்ப்படுதல் போன்ற பிரச்னைகள் எளிதாக எட்டிப்பார்க்கும்.

• சராசரியாக ஒரு நாளுக்கு 600 மைகி அளவு வைட்டமின் ஏ எடுத்துக் கொள்ளலாம். இதைவிட 10 மடங்கு அதிகம் எடுத்துக் கொள்ளும்போது வறண்ட அரிக்கும் சருமம், தலைவலி, வயிற்றுப் பிரட்டல், பசியின்மை, கண் எரிச்சல், தலைசுற்றல் போன்ற பிரச்னைகள் லைனில் நிற்கும்.

குறைபாட்டை சரி செய்ய என்ன செய்யலாம்?

• பால் பொருட்கள், மீன், முட்டையின் மஞ்சள் கரு, மாம்பழம், பப்பாளி போன்ற அன்றாடம் நாம் எடுத்துக்கொள்ளும் உணவில் எக்கச்சக்க வைட்டமின் ஏ அடங்கியுள்ளது.

• நல்ல அடர் பச்சை நிறம் கொண்ட காய்கறிகள், கீரைகள் குறிப்பாக முருங்கைக்கீரை, பசலை கீரை, கேரட் போன்றவைகளில் எல்லாம் வைட்டமின் ஏ அதிகளவு கொண்டவை.

• கிழங்கு வகைகளில் சக்கரை வள்ளி கிழங்கில் வைட்டமின் ஏ அதிகம் உள்ளது.

• மேற்குறிப்பிட்ட பொருட்களில் சிலவற்றை தினந்தோறும் நாம் உணவில் எடுத்துக் கொண்டாலே இந்த வைட்டமின் ஏ குறைபாட்டை எளிதாக களையலாம்.

வைட்டமின் டி:

• நம் உடலுக்கு தேவையான கால்ஷியம், பொட்டாசியம் ஆகியவை உற்பத்தி செய்வதற்கு வைட்டமின் டி அவசியமான ஒன்று.

• நமது சிறு குடலில் இருந்து நன்கு கால்சியம் உறிஞ்சப்பட்டு எலும்புகள் உருவாகவும், பாதுகாக்கப்படவும் இந்த வைட்டமின் ‘டி’யே காரணமாகின்றது.

• இது மட்டுமல்லாமல் திசுக்களின் வளர்ச்சிக்கும், நோய் எதிர்ப்பு சக்திக்கும் உதவுகின்றது.

• குழந்தைகள் வளரும் பருவத்தில் எலும்பு மற்றும் பற்களின் வளர்ச்சிக்கு வைட்டமின் டி அவசியமான ஒன்று.

• வைட்டமின் டி குறைபாடு ஏற்படும் போது குழந்தைகளுக்கு ரிக்கட்ஸ் எனப்படும் வளைந்த கால்கள், பெரியோர்களுக்கு எலும்பு அடர்த்தி குறைதல் ஆகியவை ஏற்படும்.

• இது மட்டுமல்லாமல் இரத்த கொதிப்பு, நோய் பாதிப்பு ஆகியவை ஈஸியாக ‘ஹாய்’ சொல்லும்.

குறைபாட்டை சரி செய்ய என்ன செய்யலாம்?

• பால், பால் பொருட்கள், மீன், மீன் எண்ணெய் போன்றவைகளில் வைட்டமின் டி எக்கச்சக்கமாக உள்ளது.

• வைட்டமின் டி-யை பொதுவாக ‘சூரிய ஒளி வைட்டமின்’ என சொல்லி கேள்வி பட்டிருப்பீர்கள். அதேதான், சூரிய ஒளியில் இந்த வைட்டமின் டி அதிகளவில் உள்ளது. .

• வைட்டமின் டி-யை சரியான அளவில் எடுத்துக்கொண்டு வந்தால் விபத்தினால் ஏற்படும் எலும்பு முறிவு, முதலாம் வகை சர்க்கரை நோயால் வரும் காயங்கள், உயர் ரத்த அழுத்தம் போன்றவற்றை தவிர்க்கலாம்.

வைட்டமின் ஈ:

• வைட்டமின் ஈ இரத்த சிகப்பு அணுக்கள், நல்ல அமினோ அமிலங்கள் இவற்றை காக்கின்றது.

• ஆண்டி ஆக்ஸிடெண்ட் எனப்படும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுகிறது. இதனால், நமது உடலில் நோயை உருவாக்கும் கிருமிகள் உள்ளே வராமல் தடுக்கலாம்.

• இது மட்டுமல்லாமல் வைட்டமின் ஈ நமது சருமத்திற்க்கு சிறந்தது. இந்த வகையான உணவுகளை சாப்பிடும்போது விரைவில் முதுமை தோற்றத்தை வருவதை தள்ளி போடலாம்.

• உடலில் இரத்தம் உறைதல், நுரையீரலில் மாசுக்கள் படிவது போன்றவை இந்த வைட்டமினால் பெருமளவு தடுக்கப்படும்.

குறைபாட்டை சரி செய்ய என்ன செய்யலாம்?

• பசலை கீரையில் வைட்டமின் ஈ உள்ளது. இதனை நம் அன்றாடம் எடுத்துக்கொள்ளலாம்.

• வேர்க்கடலையில் நிறைய நன்மைகள் அடங்கியுள்ளன. குறிப்பாக, இதில் கரையக்கூடிய வைட்டமின் ஈ ஆன்டி-ஆக்ஸிடன்ட் இருப்பதால், அவை சளி சுரப்பியில் இருக்கும் செல் சவ்வுகளை ஒழுங்குபடுத்தும். மேலும், இது சருமத்துளைகள் எளிதாக சுவாசிக்க உதவும்.

• பாதாம், கடுகு கீரை, பிஸ்தா இவற்றிலும் வைட்டமின் ஈ உண்டு.

வைட்டமின் கே:

• வைட்டமின் கே பாக்டீரியாவால் குடலில் இயற்கையாக உற்பத்தி செய்யப்படுகின்றது. எலும்பின் ஆரோக்கியம், ரத்தம், எலும்பு, சிறுநீரகம் இவற்றிக்கான புரதம் அளிப்பதில் இந்த வைட்டமினின் பங்கு அதிமுக்கியமானது.

• வைட்டமின் கே ஆஸ்டியோபொரோசிஸ் (Osteo-poresis) எனும் எலும்புச் சிதைவு வருவதைத் தடுக்கிறது.

• வைட்டமின் கே குறைபாடு ஏற்பட்டால், ஏதாவது சிறிய காயம் ஏற்பட்டாலும் ரத்தம் வெளியேறிக்கொண்டே இருக்கும். தேவையான நேரத்தில் ரத்தத்தை உறையவைப்பதற்கும் வைட்டமின் கே-தான் உதவுகிறது.

குறைபாட்டை சரி செய்ய என்ன செய்யலாம்?

• பால், உருளைக்கிழங்கு, கேரட், தக்காளி, ஆரஞ்சு போன்றவற்றில் எல்லாம் வைட்டமின் கே உள்ளது.

• முட்டை கோஸ், பச்சை முட்டைகோஸ், காலிப்ளவர், பச்சை நிற இலைகள், தாவர எண்ணெய் இவற்றிலிருந்து வைட்டமின் கே கிடைக்கின்றது.

வைட்டமின் பி12:

• வைட்டமின் பி குடும்பத்தில் இந்த வைட்டமின் முக்கியமான ஒன்று.

• இது ஒரு நீரில் கரையும் வைட்டமின் என்பதால் தினந்தோறும் உணவில் எடுத்துக்கொள்வது அவசியமான ஒன்று.

• உடல் எடை அதிகம் இருப்பவர்கள் எடையை குறைக்கிறேன் பேர்வழி என மருத்துவரின் வழிகாட்டுதல் இல்லாமல் தவறான டயட் முறையை மேற்கொள்வதால் இவர்களுக்கு இந்த வைட்டமின் குறைபாடு ஏற்படுகிறது.

• நாம் அன்றாடம் உணவின் மூலம் பெறும் புரதச்சத்தை உடலுக்கு ஏற்ற வகையில் மாற்றும் நடைமுறைக்கு அவசியம்.

• உடலுக்கு தேவையான ஆற்றலைத் தருவதில் இந்த வைட்டமின் முக்கியப்பங்கு வகிக்கிறது.

• நரம்பு மண்டலங்களின் இயக்கத்துக்கும் பயன்படுகிறது. நல்ல நினைவுத்திறன் இருக்க இந்த வைட்டமின் தேவை.

• மரபணு தொகுப்புகள் ஆரோக்கியத்துக்கு (DNA Synthesis) சயனோகோபாலமின் (வைட்டமின் பி12) பயன்படுகிறது.

• குறைபாடு ஏற்படுமாயின் தலைமுடி வலுவிழத்தல், தோல் தடித்து அரிப்பு, சூடான அல்லது குளிர்ந்த பொருட்களைச் சாப்பிட்டால் வாயில் கூச்சஉணர்வு (Sensitivity) முதலிய பிரச்னைகளை சந்திக்க நேரிடும்.

குறைபாட்டை சரி செய்ய என்ன செய்யலாம்?

• வைட்டமின் பி12 அசைவ உணவுகளிலும், பால் பொருட்களிலும் மட்டுமே இருக்கிறது. இந்த இரண்டையும் அறவே தவிர்ப்பதால்தான் வைட்டமின் பி12 குறைபாடு ஏற்படுகிறது.

• மீன், கோழி இறைச்சி, ஈரல், முட்டையின் மஞ்சட் கரு, பால் பொருட்கள் போன்றவற்றை தவிர்காது சரியான அளவில் எடுத்து வந்தால் வைட்டமின் பி12 குறைபாட்டை சரி செய்யலாம்.

வைட்டமின் சி:

• நமக்கு அன்றாடம் தேவைப்படக்கூடிய வைட்டமின்களில் வைட்டமின் சி முக்கியப்பங்கு வகிக்கிறது.

• இதனை நம் உடல் தானாகவே உற்பத்தி செய்து கொள்ள முடியாது என்பதால் உணவின் மூலமாக பெற வேண்டும். மிக அவசியம் என்றால் மட்டுமே மருத்துவரின் பரிந்துரைப்படி மாத்திரைகள் எடுக்க வேண்டும்.

• உடலின் நோய் தடுப்பு சக்தியை அதிகரிக்கிறது. உடலின் நச்சுப்பொருட்களை வெளியேற்ற உதவுகிறது. பாக்டீரியா, வைரஸ் கிருமிகளில் உண்டாகும் தொற்று நோய்களை தடுக்கிறது.

• அடிபட்டதால் ஏற்படும் காயங்கள், தீப்புண்களை விரைவாக குணமாக்குகிறது.

• தசை நார்கள், எலும்புகள், செல், திசுக்கள், பற்கள், ஈறுகள் இவற்றையெல்லாம் இணைக்கும் முக்கியமான பொருள் ‘கொல்லாஜென்’ (Collagen). இதை தயாரிப்பது வைட்டமின் சி.

• உணவிலிருந்து இரும்புச்சத்தை உடல் கிரகிக்க வைட்டமின் சி உதவுகிறது. அதே போல் கால்சியத்தை உடல் ஏற்றுக் கொள்ளவும் உதவுகிறது.

குறைபாட்டை சரி செய்ய என்ன செய்யலாம்?

• வைட்டமின் சி குறைபாட்டால் ஈறுகளில் இரத்தம் வடியும் ஸ்கர்வி எனும் நோய் ஏற்படும். அதுமட்டுமல்லாமல் வைட்டமின் சி நிறைந்த உணவுகளைத் தொடர்ந்து தவிர்த்து வந்தால் நோய் எதிர்ப்பு சக்தி குறைதல், அடிக்கடி தோல் உலர்தல், ரத்த சோகை முதலியவை ஏற்படும்.

• சிட்ரஸ் பழங்கள் எனப்படும் ஆரஞ்சு, லெமன், நெல்லிக்காய் போன்றவற்றில் வைட்டமின் சி அதிகளவு உள்ளது. இந்த வகை பழங்களை எந்த வடிவிலும் எடுத்துக்கொள்ளலாம்.

• முளைக்கட்டிய பயிறு வகைகளிலும் இதனைப் பெறலாம்.

மீண்டும் சந்திப்போம் இன்னொரு தொகுப்பில்…..

தொகுப்பு: ச. ஆனந்தப்பிரியா

படங்கள் : கூகுள் இமேஜ்�,”

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *