pமாவோயிஸ்டுகளை ஆதரிக்கும் காங்கிரஸ்: மோடி

public

சத்தீஸ்கரில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற இன்னும் இரு தினங்களே உள்ள நிலையில் பிரதமர் மோடியும். காங்கிரஸ் கட்சித் தலைவர் ராகுல் காந்தியும் தீவிர பிரச்சாரத்தில் இன்று (நவம்பர் 9) ஈடுபட்டனர்.

நவம்பர் 12ஆம் தேதி முதல்கட்டமாகத் தேர்தல் நடைபெறவுள்ள பாஸ்ட்டர் மாவட்டத்தில் ஜதல்பூர் என்ற இடத்தில் பிரதமர் மோடி பிரச்சாரத்தில் ஈடுபட்டார். பாஜக. வேட்பாளர்களை ஆதரித்துப் பேசிய மோடி, வாஜ்பாயின் கனவான வளமையான சத்தீஸ்கர் மாநிலத்தை உருவாக்கும் வரை நாங்கள் ஓயமாட்டோம் என்று குறிப்பிட்டார்.

தொடர்ந்து பேசிய அவர்,” நகர்ப்புறத்தில் வாழும் மாவோயிஸ்டுகள் குளிர்சாதன அறையில் வசிக்கின்றனர். வெளிநாடுகளில் கல்வி கற்கின்றனர். சொகுசு கார்களில் வலம் வருகிறார்கள். ஆதிவாசி இளைஞர்களை ரிமோர்ட் கண்ட்ரோல் மூலம் இயக்கி அவர்களது வாழ்க்கையைச் சீர்குலைப்பவர்கள் நகர்ப்புற மாவோயிஸ்டுகள். அவ்வாறான மாவோயிஸ்டுகளை காங்கிரஸ் கட்சி ஆதரித்து வருகிறது. மாவோயிஸ்டுகளை காங்கிரஸ் ஆதரிப்பது குறித்து மக்களுக்கு விளக்கமளிக்க வேண்டும்.

தூர்தர்ஷன் ஒளிப்பதிவாளர் அச்சுயானந்த் சாஹூ, பாதுகாப்புப்படை வீரர்கள் ஆகியோர் மாவோயிஸ்டுகளால் கொல்லப்பட்டனர். ஆனால், இப்படிப்பட்ட கொடூர மாவோயிஸ்டுகளை, காங்கிரஸ் கட்சி போராளிகள் எனக் கூறுவதை என்னவென்று சொல்வது. ஒருபக்கம் மாவோயிஸ்டுகளை மறைத்து வைத்துக்கொண்டு, மறுபக்கம் மாவோயிஸ்டுகள் பிடியில் இருந்து மக்களைக் காப்பாற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்று காங்கிரஸ் ஏமாற்றுவதாக மோடி குற்றம்சாட்டினார்.

காங்கிரஸ் கட்சிக்கு எந்த எதிர்காலமும் இல்லை. பொய்களால் ஆன கட்சிக்கு பூமியில் இடம் இல்லை. பாஜகவின் ஒரே மந்திரம் வளர்ச்சி மட்டுமே. தூப்பாக்கிகளை எடுப்பதனால் மட்டும் பிரச்சனைகள் தீர்ந்து விடப்போவதில்லை. பாஜக ஆட்சிக்கு வந்தால் புதிய சத்தீஸ்கர் உருவாகும் என்றார்.

**விவசாய கடன் தள்ளுபடி**

இவ்வாறு ஒருபக்கம் மோடி பிரச்சாரத்தில் ஈடுபட்ட நிலையில், மறுபக்கம் கன்கீர் மாவட்டத்தில், பகன்கோரே என்ற இடத்தில் காங்கிரஸ் கட்சித் தலைவர் ராகுல் காந்தி பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது பேசிய அவர், முதல்வர் ராமன் சிங் தலைமையிலான பாஜக அரசு இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பும், விவசாயிகளுக்குப் பாதுகாப்பும் வழங்கப்படும் என்று உறுதி அளித்தது. ஆனால் எந்த வாக்குறுதிகளும் நிறைவேற்றப்படவில்லை. மாறாக 60,000 ஆசிரியர் பணியிடங்கள் , 13,000 விரிவுரையாளர்கள் பணியிடங்கள் காலியாகவுள்ளன, 3000 ஆதிவாசி பள்ளிகள் மூடப்பட்டுள்ளன” என்று குற்றம்சாட்டியுள்ளார்.

பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்குப் பிறகு மக்கள் அனைவரும் கையில் இருந்த பணத்தை வைத்துக் கொண்டு வங்கி வாசல்களில் நீண்ட வரிசையில் காத்திருந்த போது, அங்கே கருப்புப் பணத்தை பதுக்கி வைத்திருந்தவர்கள் யாரையுமே பார்க்க முடியவில்லை என்று குறிப்பிட்ட ராகுல், ”அதே சமயத்தில் நீரவ் மோடி, விஜய் மல்லையா, லலித் மோடி, மெகுல் சோக்ஸி ஆகியோர் மக்கள் பணத்தை வங்கிகளிடம் இருந்து கடனாக வங்கிக் கொண்டு வெளிநாட்டுக்குத் தப்பியோடினர்” என்று மத்திய அரசைக் கடுமையாக சாடினார்.

”ஜிஎஸ்டி, பணமதிப்பழிப்பு ஆகிய நடவடிக்கைகளால் பிரதமர் மோடியைப் போன்று வேறு எந்தப் பிரதமரும் பொருளாதாரத்தைச் சேதப்படுத்தவில்லை என்று குற்றம்சாட்டினார். ஆதிவாசி மக்களின் நிலங்களைப் பாதுகாக்கவே, நிலம் கையகப்படுத்துதல் சட்டம் காங்கிரஸ் ஆட்சிக்காலத்தில் அமல்படுத்தப்பட்டதாகவும், ஆனால், அதனை பாஜக அரசு பாழ்படுத்திவிட்டது என்று தெரிவித்த ராகுல் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் விவசாயிகளின் கடன் பத்து நாட்களில் தள்ளுபடி செய்யப்படும் என்றார்.

தேர்தல் நடைபெற இரு தினங்களே உள்ள நிலையில் இரு அரசியல் கட்சிகளும் இன்று பிரச்சாரத்தில் ஈடுபட்டது முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.�,”

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *