ஆப்பிரிக்கா உள்நாட்டுப் போரில் 100 பேர் கொலை!

Published On:

| By admin

வடகிழக்கு ஆப்பிரிக்காவில் சூடான் பழங்குடியினருக்கும் அரேபியர்களுக்கும் நடந்த மோதலில் 100 பேர் கொல்லப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. வடகிழக்கு ஆப்பிரிக்காவில் உள்ள சூடான் நாட்டில் பல ஆண்டுகளாக உள்நாட்டு போர் நிலவி வருகிறது. குறிப்பாக தெற்கு பகுதியில் உள்ள டார்ஃபுர் மாகாணத்தில் அவ்வப்போது மோதல்கள் நடைபெற்று வந்ததால், அங்குள்ள மக்கள் வெவ்வேறு ஊர்களுக்குச் சென்று தஞ்சமடைந்தனர்.
சில மாதங்களுக்கு முன்பு தான் போர் சூழல் சற்று தணிந்திருந்த நிலையில் மக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்குத் திரும்பி வருகின்றனர். அங்கு ஏற்கனவே பழங்குடியினரால் கைவிடப்பட்ட நிலங்களை அரேபியர்கள் கைப்பற்றியுள்ளனர். மேலும் அங்கு விவசாயம் போன்றவற்றில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் சொந்த ஊர்களுக்குத் திரும்பிய மக்கள் தங்கள் நிலங்களுக்கு வருகையில், அரேபியர்களுடன் வாக்குவாதம் ஏற்பட்டது. பின்னர் அவ்வப்போது நிலங்களுக்கான உரிமை சண்டைகள் தொடங்கின.
இந்த மோதல்களில் சிலர் உயிரிழந்தால் அங்கங்கே கிளர்ச்சி படைகள் உருவாக ஆரம்பித்தது. இதனால் டார்ஃபுர் மாகாணத்தில் மீண்டும் பரபரப்பான சூழல் நிலவ ஆரம்பித்தது. இந்த நிலையில், டார்ஃபுர் மாகாணத்தின் மேற்கு பகுதியில் உள்ள அரேபியர்கள் கிளர்ச்சியாளர்கள், குல்பஸ் நகரில் உள்ள 20க்கும் மேற்பட்ட பழங்குடியினரின் கிராமங்களில் உள்ள வீடுகளை தீ வைத்து கொளுத்தினர்.
இதனால் கோபமடைந்த பழங்குடியின மக்களுக்கும் அரேபியர்களுக்கும் இடையே கடுமையான மோதல் ஏற்பட்டது. இந்த மோதலில் இதுவரை 100 பேர் வரை கொல்லப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பலர் படுகாயமடைந்துள்ளனர். இந்த நிலையில் பாதுகாப்புக்காக அந்தப் பகுதியில் ராணுவம் களமிறங்கியுள்ளது. இதனால் மறுபடியும் தங்கள் ஊர்களை விட்டு வெளியூர்களில் பழங்குடியின மக்கள் தஞ்சம் அடைந்து வருகின்றனர்.

.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share