கடலுக்கடியில் 1.31 லட்சம் கோடி மதிப்புள்ள புதையல் கண்டுபிடிப்பு

Published On:

| By admin

1708ஆம் ஆண்டு ஜூன் மாதம் 8ஆம் தேதி ஸ்பெயின் நாட்டு கடற்படைக்கு சொந்தமான சான் ஜோஸ் கப்பல், கொலம்பியா நாட்டு கடல் பகுதியில் பிரிட்டன் கப்பலுடன் போரிட்டு கொண்டிருந்த போது தீப்பிடித்து எரிந்து கரீபியன் கடல் பகுதிக்குள் மூழ்கியது. சுமார் 300 ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போன இந்த கப்பலில் 1 லட்சத்து 30 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான தங்கம் புதைந்து இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

இந்த கப்பலை தேடும் பணி பல ஆண்டுகளாக நடந்து வந்த நிலையில், கப்பலின் உடைந்துபோன பாகங்கள் கடந்த 2015ஆம் ஆண்டு கண்டுபிடிக்கப்பட்டது. இந்நிலையில் அந்த கப்பலில் தங்கம் புதைந்திருக்கும் தகவல் தற்பொழுது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இந்நிலையில், சான் ஜோஸ் கப்பலுக்கு அருகே மேலும் இரண்டு கப்பல்கள் மூழ்கி இருக்கும் வீடியோவை ஸ்பெயின் அரசு வெளியிட்டுள்ளது. ரிமோட் கண்ட்ரோல் கேமரா பொருத்தப்பட்டு 3 ஆயிரத்து 100 அடி ஆழத்தில் எடுக்கப்பட்ட இந்த வீடியோவில் தங்கம், வெள்ளி, விலை மதிப்பற்ற எமரால்டு கற்கள், பீரங்கிகள் ஆகியவை கடலின் அடிப்பகுதியில் சிதறிக் கிடக்கின்றன.

தற்போது இந்த தங்கம் மற்றும் புதையல்கள் யாருக்கு சொந்தம் என்ற சர்ச்சை வெடித்துள்ளது. இந்த கப்பலை கண்டுபிடித்ததாகக் கூறும் அமெரிக்கா, கொலம்பியா மற்றும் ஸ்பெயின் ஆகிய மூன்று நாடுகளும் இந்த புதையலுக்காக சண்டையிட்டு வருகின்றன. இதுகுறித்து கொலம்பிய நாட்டு சார்பில், கப்பலில் உள்ள பொக்கிஷங்கள் கொலம்பியா நாட்டின் பூர்வீக பொக்கிஷம் என்ற வாதம் முன்வைக்கப்பட்டு வருகிறது.

.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share