hவெடிக்க கட்டுப்பாடு: குடிக்க டார்கெட்!

public

தீபாவளியன்று பட்டாசுகளை வெடிக்க இரண்டு மணி நேரமே அனுமதியளித்து சில கட்டுப்பாடுகளை அரசு விதித்துள்ளது. ஆனால், அதே அரசு இந்தப் பண்டிகையையொட்டி மதுபான கடைகளில் ரூ.350 கோடிக்கு மது விற்க விற்பனை இலக்கு நிர்ணயித்துள்ளது. இதற்குப் பல்வேறு தரப்பினரும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

தீபாவளி, பொங்கல் போன்ற பண்டிகை காலங்களில் மது விற்பனை இலக்கை நிர்ணயம் செய்வதை வழக்கமாக வைத்துள்ளது டாஸ்மாக் நிர்வாகம். அதேபோல தீபாவளி பண்டிகையையொட்டி இந்த ஆண்டு ரூ.350 கோடி மது விற்பனை செய்ய திட்டமிட்டுள்ளது.

இதற்காக அனைத்து மதுபானக் கடைகளிலும் போதுமான அளவு மது பாட்டில்கள் இருப்பு வைத்துள்ளது. தீபாவளி நாளன்று மட்டும் ரூ.150 கோடி மது விற்பனையாகும் என்று டாஸ்மாக் நிர்வாகம் தெரிவித்துள்ளது. மக்கள் நலன் மீது அக்கறையின்றி மது விற்பனை இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதாக அரசுக்குப் பல்வேறு தரப்பினர் கண்டனம் தெரிவித்துள்ளனர். தீபாவளி பண்டிகையை ஒட்டி நான்கு நாட்கள் தொடர் விடுமுறை விடப்பட்டதால் டாஸ்மாக் கடைகளில் மது அருந்துபவர்களின் கூட்டம் அலைமோதுகிறது.

இதுகுறித்து, மின்னம்பலம் சார்பாக பொதுமக்களிடம் கருத்து கேட்டதற்கு அவர்கள் தெரிவித்த பதில்கள் பின்வருமாறு:

விளம்பரம் செய்யாமலே அதிகளவு விற்பனையைக் குவித்துவரும் ஒரே வியாபாரம் மதுபானம். அரசு இலக்கு செய்ததற்குப் பல தரப்பினர் கண்டனம் தெரிவித்துவரும் நிலையில், இதற்கு இந்தச் சமுதாய மக்களும்தான் காரணம் என்கிறார் தனியார் நிறுவனத்தில் வேலைபார்க்கும் ஜெயரஞ்சன்.

“அரசு இலக்கு நிர்ணயம் செய்யாமல் இருந்தால், அரசு இலக்கை நிர்ணயம் செய்யவில்லை எனக் குடிக்காமல் இருக்கும் ஆண்கள் எத்தனைப் பேர் உள்ளனர்? மதுபானக் கடையை அரசே நடத்துகிறது என்றால்? அதைத் தனியாரிடம் ஒப்படைப்பதற்கு நிறைய சிக்கல்கள் உள்ளன. அதில் மக்களின் உடல்நலமும் ஒன்று. அதன் காரணமாகத்தான் அரசே இந்த மதுபானக் கடைகளை நடத்துகிறது. அரசு இலக்கு நிர்ணயித்தது என்பதும் அதற்கு எதிர்ப்பு தெரிவிப்பதும் என்பதும் ஒன்றுமில்லாத ஒரு விஷயம்தான். தங்கள் மீது தவற்றை வைத்துக்கொண்டு, அரசை மட்டுமே குறை கூறுவது தவறு” என்றார் ஜெயரஞ்சன்.

பட்டாசு வெடிக்கத் தடை போடுகிற இந்த அரசு குடிக்கத் தடை போடாமல், இலக்கு நிர்ணயித்திருக்கிறது வேடிக்கையாக இருக்கிறது என்கிறார் தனியார் பள்ளியில் ஆசிரியராகப் பணிபுரியும் முத்து.

தமிழக அரசு பொருளாதாரத்தில் முன்னேறுவதற்கு இலக்கு நிர்ணயிக்கவில்லை. பரவி வரும் டெங்கு மற்றும் பன்றிக் காய்ச்சலைத் தடுப்பதற்கு இலக்கு நிர்ணயிக்கவில்லை. ஆனால், குடிப்பதற்கு மட்டும் அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது என்றார் கடை எண் 315இல் குடித்துக்கொண்டிருந்த இந்நாட்டின் குடிமகன் ஒருவர்.

**-ர.ரஞ்சிதா**�,”

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *