Fசர்வம் தாளமயம்: விமர்சனம்!

public

கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் படத்திற்குப் பிறகு ராஜீவ் மேனன் தயாரித்து இயக்கியுள்ள படம் சர்வம் தாளமயம். ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் உருவாகியுள்ள இப்படத்தில் ஜி.வி.பிரகாஷ், அபர்ணா முரளி இணைந்து நடித்துள்ளனர். நெடுமுடி வேணு, வினித், குமரவேல் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

பீட்டர் (ஜி.வி.பிரகாஷ்) தீவிர விஜய் ரசிகர். மிருதங்கம் செய்யும் அவனது அப்பாவின் வருமானம் போதுமானதாக இல்லை. அம்மாவின் சூப்பு கடையால் தான் குடும்பம் நடக்கிறது. அரியர் எக்ஸாம் எழுதாமல் முதல் நாள் முதல் காட்சி பார்க்கக்கூடியவன். அவன் டிரம்ஸ் அடித்து காட்சிகளைத் துவங்கி வைக்கிறான்.

பீட்டரின் கை எப்போதும் தாளம் போட்டபடியே இருந்தாலும் முறைப்படி எந்த இசையையும் கற்றவனில்லை. யதேச்சையாக வேம்பு அய்யர் (நெடுமுடி வேணு) கச்சேரியில் மிருதங்கம் வாசிப்பதையும் அதற்குக் கிடைக்கும் வரவேற்பையும் அருகிலிருந்து பார்க்க நேர்கிறது. அன்றிலிருந்து அவரைப் பின் தொடர்ந்து தன்னை சீடராக சேர்த்துக்கொள்ள கேட்கிறான். மிருதங்கம் வாசிப்பதில் நம்பர் ஒன் இடத்தில் இருக்கும் அவர் பீட்டரை சீடராக ஏற்றுக்கொண்டாரா, ஒடுக்கப்பட்ட சமூகத்தின் பின்னணியில் இருந்து வரும் பீட்டருக்கு கர்நாடக இசை வராது என ஓரங்கட்டப்படும் நிலையில் அதை எவ்வாறு முறியடிக்கிறார் என்பதாகத் திரைக்கதை நகர்கிறது.

தொடர்ந்து முன்னணி இயக்குநர்களின் படங்களில் ஒப்பந்தமாகி நடித்துவரும் ஜி.வி.பிரகாஷ் இந்தப் படத்தில் விஜய் ரசிகராக, காதலியைத் துரத்தி காதலிப்பவராக, இசை மேல் பைத்தியமாக சுற்றிவருபவராக நடிப்பில் வித்தியாசம் காட்டியுள்ளார்.

தன் திறமையில் தனக்கு இருக்கும் பெருமிதம், புதிய மாற்றங்களை ஏற்றுக்கொள்வதில் உள்ள தயக்கம், திறமையை அங்கீகரிப்பதில் உள்ள பெருந்தன்மை எனப் பல விதமான உணர்வுநிலைகளைத் தனது நடிப்பால் நெடுமுடி வேணு கொண்டுவந்துள்ளார். ஒரு காட்சியில் மாணவர்களுக்கு வாசிக்கக் கற்றுக்கொடுக்கும் போது மெய்மறந்து இசைக்குள் மூழ்கி பின் தான் எங்கு இருக்கிறோம் என்பதை உணர்ந்து லேசாகப் புன்னகைக்கிறார் . இவையெல்லாம் சில நொடிகளில் நடந்து முடிகின்றன.

வினித் பல கதாபாத்திரங்களில் நடித்திருந்தாலும் இது அவற்றில் முக்கியமான படமாக அமையும். உடல்மொழியால் தனது கதாபாத்திரத்தை மெருகேற்றுகிறார். இந்த இரு கதாபாத்திர வார்ப்பும், அதற்கான நடிகர்கள் தேர்வும் படத்திற்குப் பெரிய பலமாக அமைந்துள்ளன.

வழக்கமான தமிழ் சினிமா கதாநாயகி போல் அவ்வப்போது வந்து சென்றாலும் அபர்ணா தனது பங்களிப்பைச் சிறப்பாக செய்துள்ளார். குமரவேல் தன் கதாபாத்திரத்திற்கு நியாயம் செய்துள்ளார்.

தொலைக்காட்சி ரியாலிட்டி ஷோக்களின் பின்னால் உள்ள அரசியல், அதற்கு இருக்கும் முக்கியத்துவம் ஆகியவையும் சரியாகக் காட்சிகளில் பிரதிபலிக்கப்பட்டுள்ளது.

இடைவேளைக்குப் பிறகு இரு இடங்களில் வரும் பாடல்கள் வழியே பீட்டர் கதாபாத்திரத்தின் மாற்றத்திற்கு முக்கிய காரணிகளாக அமைகின்றன. முதலாவது தனது தந்தையுடன் சொந்த ஊருக்குப் போகும் காட்சி அதையொட்டி வரும் பாடல் சமூக நிலையை மாற்ற அவன் தயாராவதாகக் காட்டப்படுகிறது.

காதலியின் (அபர்ணா பால முரளி) அறிவுரை பேரில் கனவைத் துரத்த அவன் செல்லும் பயணம், இசையின் பல கதவுகளை அவனுக்குத் திறந்துவிடுகிறது. இரு பாடல்களிலும் ரஹ்மானின் இசை கவர்கிறது. இசையை மையமாகக் கொண்டு உருவாகும் படம் என்பதற்காக அதிகப்படியாக எதையும் முயலாமல் காட்சியோடு பொருந்திப்போகும் வகையில் பின்னணி இசையை அமைத்துள்ளார்.

அங்கங்கே வரும் இயற்கையான ஒலிப்பதிவு சினிமா சட்டகத்தை மறக்கச் செய்து அருகிலிருந்து கேட்பது போன்ற உணர்வைத் தருகிறது. ரவி யாதவின் ஒளிப்பதிவு, அந்தோணியின் படத்தொகுப்பு ஆகியவை ரசிக்கவைக்கிறது.

கதாநாயகியைத் துரத்திச் சென்று காதலிக்கும் நாயகன், அதனால் பெறும் அவமானங்களை காமெடியாக எடுத்துக்கொண்டு நகர்வது, எந்தெந்த இடங்களில் என்ன மாதிரியான பாடல்கள் வர வேண்டும், மையக் கதையில் என்ன மாதிரியான பிரச்சினைகள் வர வேண்டும் என தமிழ் சினிமாவின் வழக்கமான ஃபார்முலாவை அப்படியே பின்பற்றியுள்ளது சர்வம் தாளமயம். இருப்பினும் நடிகர்களின் மிகையற்ற நடிப்பால், இயற்கையான ஒலியால், அச்சுறுத்தாத இசையால் சிறப்பான சினிமா அனுபவத்தைப் பெற முடிகிறது.�,”

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *