Greetings from Tamil Nadu political party leaders!

மே தினம் : தமிழக அரசியல் கட்சி தலைவர்கள் வாழ்த்து!

அரசியல்

உழைப்பின் மேன்மையையும், உழைப்பாளர்களின் உரிமைகளையும் எடுத்து சொல்லும் மே தினம் இன்று (மே 1) உலகம் முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது.

இதனையடுத்து அரசியல் கட்சி தலைவர்கள் பலரும் உழைப்பாளர் தின வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.

முதல்வர் மு.க.ஸ்டாலின்

குருதியை வியர்வையாக்கி உழைப்பால் உலகை உயர்த்தும் அனைத்து உழைப்பாளர்களையும் தொழிலாளர் தினத்தில் வாழ்த்திப் போற்றுவோம்! மேதினியில் வாழும் உழைப்பாளர்களின் உரிமைகளைப் பாதுகாக்க – ஒற்றுமையை உண்டாக்க மே நாளில் உறுதியேற்போம்! உழைக்கும் கைகள் ஒன்று சேர்ந்து புதிய உலகம் படைப்போம்!

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி

உழைக்கும் கரங்களின் ஒற்றுமையை உணர்த்தி, உழைப்பின் பெருமையை உலகிற்கு பறை சாற்றும் தொழிலாளர் தினமாகிய மே தின திருநாளில், தொழிலாளர் பெருமக்கள் அனைவருக்கும் எனது உளங்கனிந்த மே தின நல்வாழ்த்துகளை மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்கிறேன். உழைப்பு மட்டுமே நம்மை உயர்த்தும்; உழைப்பின் பயனால் கிடைக்கும் உயர்வே மனநிறைவு அளிக்கும். நம்பிக்கையோடு உழைத்தால் வாழ்வில் வெற்றி பெறுவது நிச்சயம்.

காங்கிரஸ் தலைவர் செல்வபெருந்தகை

நீண்டகாலமாக நடைமுறையில் இருந்த தொழிலாளர் நலச் சட்டங்களை அகற்றிவிட்டு, தொழிலாளர்கள் போராடிப் பெற்ற உரிமைகளை பறிக்கும் வகையில் புதிய தொழிலாளர் விரோத சட்டங்களை ஒன்றிய பாஜ அரசு நிறைவேற்றியுள்ளது. தொழிலாளர்கள் தங்களது உரிமைகளை பாதுகாக்கிற வகையில், உரிமைக்குரல் எழுப்பும் நாளாக மே 1ம் தேதி அமைய வேண்டும்.

விசிக தலைவர் திருமாவளவன்

மோடி தலைமையிலான சங்பரிவார் அரசு, தொழிலாளர்களின் அனைத்து உரிமைகளையும் பறிக்கும் வகையில் ஏற்கனவே நடைமுறையிலிருந்த 44 தொழிலாளர் சட்டங்களையும் மாற்றி 4 சட்டங்களாக தொகுத்துள்ளது. இது எட்டு மணி நேர வேலை என்னும் உரிமையைப் பறிக்கிறது. ஒட்டுமொத்தமாக கார்ப்பரேட் நிறுவனங்களின் நலன்களை முன்னிறுத்துகிறது. புரட்சியாளர் அம்பேத்கரின் சிந்தனைகளுக்கு நேரெதிராக மோடி அரசு பாசிசப் போக்கில் இச்சட்டத் தொகுப்புகளைக் கொண்டுவந்துள்ளது. இதற்கு எதிராக வெகுமக்களைத் திரட்டிக் களமாடுவோம். அம்பேத்கர் வகுத்தளித்த தொழிலாளர் உரிமைகளை மீட்டெடுக்க, தொழிலாளர் விரோத பாசிச மோடி அரசை வீழ்த்திட இந்நாளில் உறுதியேற்போம்.

பாமக நிறுவனர் ராமதாஸ்

உலகின் ஆக்கும் சக்தி பாட்டாளிகள் தான். தமிழ்நாடு அனைத்துத் துறைகளிலும் இந்த அளவுக்கு வளர்ச்சி அடைந்திருப்பதற்கும் அவர்கள் தான் காரணம். பாட்டாளிகள் இல்லாவிட்டால் இந்த உலகம் இயங்காது. மே நாளை கொண்டாடும் தொழிலாளர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்.

தமிழக வெற்றிக் கழகம் தலைவர் விஜய்

உழைப்பின் மேன்மையையும் உழைப்பாளர்களின் சிறப்பினையும் உலகிற்குப் பறைசாற்றும் இந்த மே தினத்தில், தொழிலாளர் சகோதர சகோதரிகள் அனைவருக்கும் எனது உளமார்ந்த “மே தின” நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன். உழைப்பாளர்களின் வளர்ச்சியே உண்மையான வளர்ச்சி என்பதை மனத்தில் கொண்டு, அவர்களுக்கான உரிமைகளை நிலைநாட்ட உறுதியேற்போம்.

மதிமுக பொதுச்செயலாளர் வைகோ

18வது மக்களவை தேர்தலில் தொழிலாளர் வர்க்கம் ஒன்றிய பாஜ அரசை ஆட்சி பீடத்திலிருந்து அகற்றுவதற்கு உறுதி கொண்டிருக்கிறது. பாட்டாளி வர்க்கத்தின் உரிமைப் பதாகையை உயர்த்திப் பிடிக்க மே நாளில் உறுதி ஏற்போம்.

சிபிஐ மாநில செயலாளர் முத்தரசன்

வகுப்புவாத, பாசிச சக்திகளை தோற்கடிப்போம். ஒருங்கிணைந்த மக்கள் நல்வாழ்வு கொள்கைகளை அதிகாரத்தில் அமர்த்துவோம் என உலக தொழிலாளர் தினத்தில் உறுதி ஏற்போம்.

மமக தலைவர் எம்.எச்.ஜவாஹிருல்லா

அனைத்து தொழிலாளிகளும் வறுமையை ஒழித்து எல்லோருக்கும் நல் வாழ்வு கிடைக்க வல்ல இறைவனிடம் இறைஞ்சுகிறேன். சுரண்டலற்ற, சாதிமத பேதமற்ற, புதியதோர் உலகம் செய்ய அனைவரும் உறுதி ஏற்போம்.

மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன்

உழைப்பவரின் உரிமை மறுக்கப்படக்கூடாது; உழைப்பாளரின் உதிரம் உறிஞ்சப்படக்கூடாது; உழைக்கும் கரங்களுக்கு உயர்வு வேண்டும் என்கிற பதாகை உயர்ந்த நாள் இன்று. உழைப்பாளர் இல்லையேல் உருவாக்கம் இல்லை. அவர்தம் உழைப்பைப் போற்றி, உரிமைகளைக் காக்க மே தினத்தில் உறுதியேற்போம்.

தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை

தேசத்தின் வளர்ச்சியில் முக்கிய பங்காற்றும் தொழிலாளர்கள் அனைவருக்கும், தமிழக பாஜக சார்பாக உழைப்பாளர் தின வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். தொழிலாளர்களின் உன்னதத்தையும், உரிமையையும், தியாகத்தையும் குறிக்கும் இந்தச் சிறப்பு மிக்க தினத்தில், அனைவரின் கடும் உழைப்புக்கான பலன்கள் நிறைவாகக் கிடைக்க வேண்டிக் கொள்கிறேன்.

பாமக தலைவர் அன்புமணி

உழைப்பாளர்கள் இல்லை என்றால் உலகம் இல்லை என்பது தான் உண்மை. அவர்கள் அனைத்து உரிமைகளுடனும் வாழ வேண்டும் என்பதே எனது நோக்கம்.

தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா

வறுமையை ஒழித்து, எல்லாருக்கும் எல்லா நலமும், வளமும் கிடைத்திட இந்த மே தின நன்னாளில் சூளுரை மேற்கொள்வோம். ரத்தத்தை வியர்வையாக்கி உழைக்கும் தொழிலாளர் அனைவருக்கும் தேமுதிக சார்பில் மே தின வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன்.

தமாகா தலைவர் ஜி.கே.வாசன்

ஒன்றிய, மாநில அரசுகள் மே தினத்தை கொண்டாடும் வேளையில் தொழிலாளர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும். மே தினத்தின் உரிமையே தொழிலாளர்களை வாழ வைத்து, அதன் மூலம் தொழில்கள் பெருகி, மாநிலமும், நாடும் முன்னேற வேண்டும் என்பது தான்.

அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன்

உழைப்பே உயர்வை தரும், உழைப்பால் கிடைக்கும் பயனே மனநிறைவை தரும் என்ற நம்பிக்கையோடு கடினமாக உழைத்துக் கொண்டிருக்கும் தொழிலாளர்கள் அனைவருக்கும் வெற்றி நிச்சயம்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

கிறிஸ்டோபர் ஜெமா

Gold Rate : தங்கம் விலை வீழ்ச்சி… பெண்கள் மகிழ்ச்சி!

ரஜினியின் கூலி டீசரில் வந்த இசை… நோட்டீஸ் அனுப்பிய இளையராஜா

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *