fஃபுட் கோர்ட்: மணமணக்கும் கேரள உணவுகள்!

public

கேரளா, புவியியல் ரீதியாக இந்தியாவிலேயே தனித்துவம் மிக்க மாநிலம். தண்ணீரும் அதனால் உருவாகும் பசுமையும் எனச் செழிப்புடன் காணப்படும் இடம். இங்குள்ள மக்களின் வாழ்வில் அவர்களது பிரத்யேக உணவு பெரும்பங்கு வகிக்கிறது. அதுமட்டுமல்லாமல், ‘மசாலாப் பொருள்களின் உலகம்’ என்று கேரளாவுக்குச் சிறப்புப் பெயரும் உண்டு. கேரள உணவுகள் அதன் சுவைக்கும் ஆவி பறக்கும் சூட்டுக்கும் பெயர் பெற்றவை. மற்றொரு சிறப்பு என்னவென்றால், தலைவாழை இலையில் உணவுகளைப் பரிமாறுகின்றனர். உணவுக்குக் கூடுதல் சுவை சேர்க்கும் விதமாக வாழை இலையில் உணவருந்துவது, அங்கு செல்லும் சுற்றுலா பயணிகளுக்கு மனநிறைவைத் தருகிறது.

அதே போன்று, உணவில் பிரதானமாக தேங்காய் எண்ணெயைப் பயன்படுத்துகின்றனர். கேரள மக்கள் அதிகமாக மீன் மற்றும் அரிசி உணவு உண்பவர்கள். கடல் பகுதியில் வசிப்பவர்கள் பெரும்பாலும் கடல் உணவுகளையும், மலைவாழ் மக்கள் மற்றும் கேரளாவின் வடக்குப் பகுதியில் வசிப்பவர்கள் இறைச்சி உணவையும், மற்ற பகுதிகளில் வசிக்கும் மக்கள் காய்கறிகளையும் அதிகமாக உணவுகளில் சேர்த்துக்கொள்கின்றனர். தம் மண்ணில் விளையும் உணவுப் பொருள்களைக் கொண்டு இப்பகுதி மக்கள் அசாதாரண சுவையுடைய உணவுகளைத் தயாரிக்கின்றனர். நிலமும் உணவும் தேங்காய் இல்லாமல் முழுமை பெறாது எனலாம். மிளகாய், கறிவேப்பிலை, கடுகு, புளி மற்றும் பெருங்காயம் இவர்களின் உணவுகளில் பிரதானமானவை.

மிகவும் எளிய உணவான கஞ்சியில் இருந்து, ஓணம் பண்டிகையின்போது ஆடம்பரமாகச் சமைக்கப்படும் உணவான சத்யா வரை, கேரள உணவுகள் பரந்துபட்டவை. புளிக்குப் பதிலாக சில நேரங்களில் தக்காளி உபயோகிக்கின்றனர். ஆனால், கறிவேப்பிலைக்கு நிகர் இதுவரை ஏதுமில்லை. வெஜிடேரியன் உணவில் புட்டு, கடலைக் கறி கேரளாவின் டிரேட் மார்க் உணவு. அதுமட்டுமல்லாமல் ஆப்பம், கேரள ஸ்டைலில் தயாரிக்கப்படும் சாம்பாருடன் நெய் தோசை ஆகியவையும் இங்கு பிரபலம்.

அசைவத்தில் ஏராளமான உணவுகள் உள்ளன. இறைச்சி மற்றும் கடல் உணவுகள் என்று தனித்தனிப் பட்டியலே உண்டு. நாடான் கோழி வறுவல், நாடான் பீப் ஃப்ரை இறைச்சிகளிலும், கேரளா பிரான் ஃப்ரை, கேரளா ஸ்டைல் ஃபிஷ் மோலி கடல் உணவுகளிலும் சுவையுடனும் தனித்துவத்துடனும் தயார் செய்யப்படுகின்றன. அதேபோன்று அப்பளம், வாழை மற்றும் பலாவில் தயார் செய்யப்படும் சிப்ஸ்களும் இவர்களின் உணவு மெனுவில் முக்கிய இடம்பிடிக்கின்றன.

**புட்டு, கடலைக் கறி**

கேரளாவின் பிரபலமான காலை உணவு அரிசி, தேங்காயுடன் சேர்த்து வேக வைக்கப்படுகிறது. கேரளாவின் எல்லாப் பகுதிகளிலும் புகழ்பெற்ற உணவு இது. புட்டுவை உருளை வடிவில் வார்ப்பதற்கு என்று அச்சு தனியாக உள்ளது. புட்டு, கொண்டைக்கடலையுடன் சேர்த்துப் பரிமாறப்படுகிறது.

**அப்பம்**

தமிழ்நாட்டில் ஆப்பம் என்று அழைக்கப்படுவதே கேரளாவின் அப்பம். இதன் வடிவமே நாவூற வைக்கும். மெதுவாக வேக வைக்கப்படும் இந்த உணவின் மையப்பகுதி மிருதுவாகவும், அதனைச் சுற்றி முறுகலாகவும் இருக்கிறது. அசைவ கிரேவியுடன் சேர்த்துச் சாப்பிடும்போது, அப்பம் மிகவும் சுவையுடன் இருக்கும். தேங்காய்ப்பாலுடன் சேர்த்தும் சாப்பிடலாம்.

**அவியல்**

கேரளாவின் புகழ்பெற்ற வெஜிடேரியன் சைடு டிஷ் உணவு. உள்ளூரில் கிடைக்கும் காய்கறிகள் சேர்த்து இந்த உணவு தயார் செய்யப்படுகிறது. பறங்கிக்காய், முருங்கைக்காய், உருளைக்கிழங்கு, மிளகாய் என்று இன்னும் பல காய்கறிகளுடன் தேங்காய்ப்பால் சேர்த்துச் சமைக்கப்படுகிறது. மாங்காய், பலா மற்றும் முந்திரியும் இவற்றுடன் சேர்ப்பதுண்டு. கடைகளில் அவியல் செய்வதற்கு காய்கறிகள் வேண்டுமென்று கேட்டு மக்கள் வாங்கிச் செல்கின்றனர். அதனால் 40 அல்லது 50 ரூபாயில் அதற்கான காய்கறிகள் அனைத்தும் கிடைக்கின்றன.

**கேரளா பிரான் கறி**

எளிமையான மூலப்பொருள்களைக் கொண்டு தயாரிக்கப்படும் சுவையான உணவு. பாரம்பரியமிக்க இந்த உணவு மிளகாய், உப்பு, மிளகு சேர்த்து தயாரிக்கப்படுகிறது. கடைசியாக தேங்காய்ப்பால், சர்க்கரை மற்றும் கறிவேப்பிலை சேர்க்கப்படுகிறது.

**கேரளா ஸ்டைல் ஃபிஷ் மோலி**

கேரளாவின் மற்றொரு பிரபலமான கடல் உணவு. மீனுடன் தேங்காய்ப்பால் சேர்த்துத் தயாரிக்கப்படுகிறது. குறைந்த அளவு காரம் சேர்த்து இந்த உணவைச் சமைக்கின்றனர். ஏலக்காய், மிளகு சேர்த்து, குறைந்த வெப்பநிலையில், தேங்காய்ப்பாலில் மீன் வேகவைக்கப்படுகிறது. சாதத்துடன் சேர்த்து சாப்பிட மிகவும் சுவையாக இருக்கும்.

**நாடான் கோழி வறுவல்**

எல்லோரும் விரும்பி உண்ணும் சிக்கன் உணவு. இதன் சிறப்பு என்னவென்றால், குறைந்த எண்ணெயில் தயாரிக்கப்படுவதேயாகும். இதன் வெளிப்பகுதி மொறுமொறுவென கிரிஸ்பியாகவும், உட்பகுதி நீர்மமாக ஜூஸியாகவும் இருப்பதால், கேரளாவில் அனைவரும் விரும்பி உண்கின்றனர். இதை சாதம், ரொட்டி, கேரளா பரோட்டா இவற்றுடன் சேர்த்துச் சாப்பிடலாம்.

�,”

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *