Rதேர்வு கட்டண உயர்வு நிறுத்தம்!

Published On:

| By admin

மாணவர்களின் கோரிக்கையை ஏற்று உயர்த்தப்பட்ட தேர்வு கட்டணம் தற்காலிகமாக நிறுத்தி வைப்பதாகப் பாரதிதாசன் பல்கலைக்கழகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

திருச்சியில் செயல்பட்டு வரும் பாரதிதாசன் பல்கலைக் கழகத்தின் கட்டுப்பாட்டில் 140க்கும் மேற்பட்ட கல்லூரிகள் திருச்சி, தஞ்சை, மதுரை உள்ளிட்ட மாவட்டங்களில் செயல்பட்டு வருகின்றன. இந்த சூழலில் பாரதிதாசன் பல்கலைக்கழகம் மாணவர்களுக்கான தேர்வு கட்டணத்தைச் சமீபத்தில் உயர்த்தியது. 75 ரூபாயிலிருந்து 125 ரூபாய் வரை உயர்த்தப்பட்டது. தேர்வு கட்டணம் மட்டுமின்றி மதிப்பெண் சான்று உள்ளிட்ட 27 வகையான கட்டணங்கள் உயர்த்தப்பட்டது.

தற்காலிகமாகப் பட்ட சான்று வாங்க 200 ரூபாயிலிருந்து 600 ரூபாயாகவும், டிகிரி சான்றிதழ் வாங்க 800 ரூபாயிலிருந்து 1,500 ரூபாயாகவும், வருகை குறைவாக இருந்தால் செலுத்த வேண்டிய கட்டணம் 500 ரூபாயிலிருந்து 1,500 ரூபாயாகவும் உயர்த்தப்பட்டது

இதற்கு பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் கல்லூரிகளின் மாணவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். தஞ்சை மன்னர் சரபோஜி அரசு கலைக்கல்லூரி, , மன்னார்குடியில் உள்ள மன்னை ராஜகோபால சுவாமி அரசினர் கலைக் கல்லூரி மாணவர்கள் உள்ளிட்டோர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பாரதிதாசன் பல்கலைக்கழகம் தேர்வு கட்டணத்தை உயர்த்திய நிலையில் மற்ற பல்கலைக்கழகங்களும் தேர்வு கட்டணத்தை உயர்த்தலாம் என்ற அச்சமும் தமிழக மாணவர்களிடையே எழுந்தது.

இந்த நிலையில் எதிர்க்கட்சித் துணைத் தலைவர் ஓ பன்னீர்செல்வமும் தேர்வு கட்டணத்தைக் குறைக்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு வலியுறுத்தியிருந்தார்.

இந்த சூழலில் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் கோரிக்கையை ஏற்றுத் தேர்வு கட்டண உயர்வைத் தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளது பல்கலைக் கழகம்.

திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் உயர்த்தப்பட்ட தேர்வு கட்டணம் உள்ளிட்ட அனைத்து கட்டணங்களும் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்படுகிறது எனப் பல்கலைக்கழக துணைவேந்தர் செல்வம் அறிவித்துள்ளார்.

**-பிரியா**

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share