bசிறப்புக் கட்டுரை: அதென்னங்க “சார்”?

public

ஆர்.அபிலாஷ்

எந்த விளிப் பெயருக்கும் ஒரு தாக்கம் உள்ளது. நீங்கள் ஒருவரை எப்படி அழைக்கிறீர்களோ அதைப் பொறுத்து அவருடனான உறவின் எல்லைகள் விரிகின்றன, சுருங்குகின்றன. இன்று பெண்கள் பரஸ்பரம் “மச்சான்”, “ப்ரோ” என்றெல்லாம் அழைத்துக்கொள்கிறார்கள். “டேடி” என்றுகூடத் தோழியை அழைக்கிறார்கள். ஒவ்வொரு விளிப் பெயரும் உறவை ஒருவிதத்தில் கட்டமைக்கிறது.

கவிஞர் மனுஷ்யபுத்திரன் ஒருமுறை, மதுரைக்காரர்கள் “அண்ணே” எனப் பிரியம் ஒழுக அழைக்கும்போது எப்படியான ஒரு கனிவான நெகிழ்வான உணர்வு ஏற்படுகிறது, இதுவே சென்னையில் யாராவது தோளைத் தொட்டு “சார்” என்றால் ஏற்படுவதில்லை என்றார்.

நான் முன்பு வேலை செய்த கல்லூரியில் தமிழாசிரியர்கள் உங்களிடம் கொலைவெறி கொண்டிருந்தாலும் எந்த உரையாடலையும் “வணக்கம் ஐயா” என்று தான்

ஆரம்பிப்பார்கள். ஓரளவு புரட்சிக் கருத்துகள் கொண்ட, பெண்ணியவாதியான தோழி என்றால் “தோழர்” என்ற சொல் போதுமான பாதுகாப்பை உங்களுக்கு அளிக்கும். “இல்லை தோழர் நீங்க சொல்வதோடு எனக்கு உடன்பாடில்லை” என்றால் உங்களைப் பேச அனுமதிப்பார்கள். ஆனால், அந்த ஒரு சொல் இல்லையென்றால் அடிதடிதான். இடதுசாரிகளைப் பொறுத்தமட்டில் இப்போதெல்லாம் “தோழர்” என்று ஆரம்பித்தாலே சற்று சந்தேகத்துடன்தான் பார்க்கிறார்கள். நவீன இலக்கியக் கூட்டங்களில் “சாரும்”, சற்றே பழைய செவ்வியல் கவிஞர்களுக்கு “ஐயாவும்” குழு அடையாளப் பெயர்கள். கழகக் கண்மணிகள், அம்மாவின் தொண்டர்களுக்குப் பொதுவான மரியாதை விளிப்பெயர் “அண்ணன்”.

எனக்குத் தெரிந்த எல்ஐசி முகவர் ஒருவர் என்னை ஸ்வாமி என்றுதான் அடிக்கடி அழைப்பார். ஆனால், அவர் அப்படி அழைக்கையில் அவர் என்னை அல்ல தன்னையே “ஸ்வாமி” என்பதாய் எனக்குத் தோன்றும்.

இப்போது நம் சமூகம் மொத்தத்துக்குமான ஒரு பொது விளிப்பெயராய் “சார்” மாறிவிட்டது.

**சகலம் ‘சார்’மயம்**

இந்தியர்கள் தடுக்கி விழுந்தாலே “சார்” என்பதற்கு இப்போது கடும் எதிர்ப்பு உருவாகிவருகிறது. குறிப்பாக ஐடி துறையில் பணி செய்யும் இளம் தலைமுறையினர் அலுவலகத்தில் வயது வித்தியாசம் பாராமல் அனைவரையும் பெயர் சொல்லி அழைக்கவே பயிற்றுவிக்கப்படுகிறார்கள். இருபது வயதுப் பையன் அறுபது வயதுக்காரரை நோக்கி “என்ன ஸ்ரீனிவாசன், வாட்ஸ் அப்?” என்கிறான். ஆனால் அதே பையன் தன் வீட்டிற்கு இதே ஸ்ரீனிவாசன் வயதில் ஒரு தாத்தா வந்தால் “வாங்க தாத்தா, அப்பாவைக் கூப்டட்டுமா?” என மரியாதை காட்டுவான்.

நான் முன்பு பணி செய்த தனியார் நிறுவனத்தில் மேலாளரை நான் “மேடம்” என அழைக்கையில் அவர் உடனே என்னைத் திருத்துவார். பெயர் சொல்லி அழைக்கும்படி சொல்லுவார். எங்கள் அணியில் இருபது வயதுப் பெண்கூடத் தன்னைவிடப் பதினைந்து வயது மூத்தவரான அந்த மேலாளரைச் சாதாரணமாய் பெயர் குறிப்பிட்டே அழைப்பார். எனக்கு இது ஜீரணிக்க முடியாததாய் இருந்தது. சிறுபத்திரிகை வட்டாரத்தில் என்னை விட நாற்பது வயது மூத்தவரைக்கூடப் பெயரிட்டு அழைத்து சகஜமாய் உரையாடும் எனக்கு வெளியே அந்த பழக்கம் வெகு உறுத்தலாய் இருந்தது. நான் கடைசி வரை மேலாளரைப் பெயரிட்டு அழைக்க மறுத்தேன் (அவர் மேலாளர் என்பதால் அல்ல; அவரது வயதைக் கருதி).

**விரியும் குடும்ப உணர்வு**

இன்று தனியார் நிறுவனங்களில் பணியாற்றும் முப்பது, நாற்பது வயதினர் பலருக்கும் இந்தத் தடுமாற்றம் உள்ளதை அறிவேன். அடிப்படையில் இது நம் பண்பாடு அல்ல. வயதுக்கு இளையோரை மட்டுமே நாம் பெயர் சொல்லி அழைப்போம். ஓர் ஆட்டோக்காரர், கடையில் பொட்டலம் மடிப்பவர், நாம் உதவி நாடும் அந்நியர் எவருமே நமக்கு “அண்ணே” அல்லது “மாமா”. நகரத்திற்கும் கிராமத்திற்கும் இப்பழக்கம் சின்னதாய் மாறுபடுகிறது. கிராமத்தில் நான் மாமா, தாத்தா என அழைக்காத மூத்தோர் இல்லை. ஆனால் நகரத்திலோ “அண்ணா”தான் பொருத்தமான பொது விளிப்பெயராய்க் கருதப்படுகிறது. ஒரு பதினாறு வயதுப் பையன் அதிகம் பரிச்சயம் இல்லாத ஒரு நாற்பது வயதுக்காரரை (கடைக்காரர், எலெக்டிரீஷியன், ஆட்டோக்காரர்) “மாமா” என்றல்ல “அண்ணா” என்றே அழைப்பான். ஏனென்றால் “மாமா” விளி மிக அணுக்கமான உணர்வை அளிக்கிறது; ஆனால் “அண்ணா” சற்றே விலகலான, நெருக்கத்தை உணர்த்தாத விளி.

ஆனால் “மாமா”, “அத்தை”, “அக்கா”, “அண்ணே” ஆகிய விளிகள் ஊரிலுள்ளோர் அனைவரையும் மறைமுகமாய் உங்கள் குடும்பத்து உறுப்பினர்களாய்க் கருதச் செய்கிறது. இப்படி விளித்துப் பரிச்சயப்படும்போது ஒரு சமூகமே உங்களுக்கு நீடித்த குடும்பமாய் உருமாறும். ஆனால், நாம் நகரவயப்படப்பட இந்தப் பழக்கம் இன்று காலாவதி ஆகிவிட்டது.

**காலனியக் காலத்து எச்சமா?**

“சார்” விளி என்பது காலனியக் காலகட்டத்து எச்சம் என விமர்சிப்போர் உண்டு. இந்தியர் மூத்தோரையும் அந்நியரையும் மரியாதை கொடுத்து விளித்தே பழக்கமானவர்கள். பிரிட்டிஷார் இங்கு ஆண்டபோது அவர்களுக்குக் குமாஸ்தா வேலை செய்தவர்கள் இங்கு கல்வியில் சிறந்த மேலோர். அவர்கள் மேற்பொறுப்பில் இருந்த வெள்ளையரை “சார்” எனத் தலைபணிந்து அழைக்கத் துவங்கிய பழக்கமே இன்னும் ஒட்டிக்கொண்டிருக்கிறது என ஒரு சாரார் கருதுகிறார்கள். சார் விளி அடிமைத்தனத்தின், தாழ்வுணர்வின் வெளிப்பாடு என இவர்கள் நம்புகிறார்கள். No Sir, No Madam எனும் பிரச்சாரத்தை இதற்கு எதிராக ஆரம்பித்தவர் ஹர்த்திக் தாவே. இவர் இந்த “சார்” பண்பாட்டை ஒழிக்க வேண்டுமெனப் போராடுபவர். இது ஒரு நிலப்பிரபுத்துவ காலத்து எச்சம் என அவர் கூறுகிறார், “சார்” எனும் சொல்லை ஒருவர் பயன்படுத்தும்போது அவரது உடல் மொழி அவரையும் அறியாது மாற்றம் கொள்கிறது; அவர் தலையைக் குனித்து உடம்பை வளைத்துத் தன் ஆகிருதியைக் குறுக்கிக்கொள்கிறார்; தனது தனித்தன்மையை, ஆளுமையை, திறமையைக் கழற்றிவைத்து இன்னொருவர் காலடியில் பணிகிறார். நமது பணியிடங்களில் அனைவரும் நமக்குச் சமமானவர் எனும் எண்ணம் வர வேண்டும். அப்போதுதான் நமது உழைப்பும் வேலையும் மேம்படும் எனக் கூறுகிறார் ஹர்த்திக் தாவே.

இந்தத் தரப்பு சற்றே தட்டையானது என்பது என் பார்வை. ஒன்று, ஒருவரைப் பணிந்து வணங்குவதால் நாம் நம்மைத் தாழ்த்திக்கொள்வதில்லை. மாறாக, நாம் நம்மை முன்னிறுத்தாமல் இருக்கிறோம். நான் ஒன்றும் முக்கியமல்ல எனச் சேதி விடுக்கிறோம். இது நம் பண்பாட்டின் ஒரு முக்கிய கூறு. இந்தியா மட்டுமல்ல, சீனா, ஜப்பான் போன்ற ஆசிய நாடுகளிலும் இந்தச் சுபாவத்தை மக்களிடம் பரவலாகக் காணலாம். இது அடிமைத்தனம் அல்ல, ஒரு வாழ்க்கைப் பார்வை, ஒரு தத்துவ நிலைப்பாடு.

**தனிமனித வாதம்**

அமெரிக்கர்கள் தனிமனித ஆளுமையை முன்னெடுப்பவர்கள். அவர்கள் பத்து வயதுக் குழந்தையையும் ஐம்பது வயது மனிதரையும் தனிமனிதர்களாய்க் கருதுகிறார்கள். தனிமனிதன் சமூகத்திலிருந்து பிளவுண்டவன். எல்லாப் பிரச்சினைகளுக்கும் தன்னையே அலகாய் வைத்துப் பரிசீலிப்பவன். நான் × மற்றமை என இருமையாய் எப்போதும் சிந்திப்பவன். ஐயன் ராண்ட் போன்ற எழுத்தாளர்கள் இந்தத் தனிமனித வாதத்தைக் கொண்டாடியவர்கள். இன்று ஐடி கலாச்சாரம் மூலமாய் இந்தத் தனிமனித வாதம் இங்கு இறக்குமதியாக, “நீதான் முக்கியம், உன்னை எப்போதும் முன்னிறுத்து, மக்கள் கூட்டத்தில் நீ தனியானவன், நீ உன்னை மேலும் மேலும் தனிமைப்படுத்தியே உன் தனித்துவத்தை வளர்க்க முடியும்” எனும் பிரச்சாரம் இங்கு உருவாகிறது. இன்று பதினான்கு வயதுப் பையன்கூட, “எனக்குத் தெரியாத ஒன்றும் இவ்வுலகில் இல்லை. நான் யாரிடமும் இனி கற்றுக்கொள்ள ஒன்றுமில்லை” எனும் மிகை நம்பிக்கையோடும், அதனோடு ஒட்டி வரும் பதற்றத்தோடும் இருக்கிறான். இப்படியானவர்கள் பாரம்பரியமான அடிபணிதல், தன்னை ஒரு குழுவில் அல்லது சமூகப் பரப்பில் கரைத்துக்கொள்ளுதல், தானற்றுப் போதல் ஆகியவற்றை கேவலமாக, கலாச்சார அடிமைத்தனமாக, அற்பமாகப் பார்க்கிறார்கள்.

இனி “சார்” விளியின் பாதகம் ஒன்றைப் பற்றிச் சொல்கிறேன்.

நான் கல்லூரிகளிலும் பதிப்புத் துறையிலும் பணியாற்றியிருக்கிறேன். கல்லூரியில் சக ஆசிரியர்கள் சதா “சார்” “சார்” எனப் பரஸ்பரம் விளிப்பார்கள் (சில பெண் பேராசிரியர்களிடத்து மட்டுமே நான் சக பெண் ஆசிரியர்களைப் பெயர் சொல்லி அழைக்கும் பாங்கைக் காண்கிறேன்). ஒருவர் தனக்கு நெருக்கமானவர் என்றால் பெயரின் பின்னொட்டாய் ஒரு “சார்” சேர்ப்பார்கள். நட்பு வட்டத்தில் இல்லாத வெறும் சக ஊழியர் என்றால் வெறும் சார்தான்.

நானும் இதுவரையில் எல்லா சக ஆசிரியர்களையும் “சார்” என்றே அழைத்துவந்தேன். எங்கள் பல்கலையின் சமூகவியல் பேராசிரியர் ஒருவர்தான் என்னை முதலில் கண்டித்தார். தன்னை “சார்” என்று அழைக்கல் ஆகாது என்றார். அவரைப் பெயர் சொல்லி அழைக்கவே ஒரு மாதம் தேவைப்பட்டது. இதனிடையே நான் எப்போதாவது “சார்” என்று குறிப்பிட்டால் அவர் கடுப்பாவார். அவரது இந்தப் பிடிவாதம் எனக்குச் சற்றே அபத்தமாய்த் தோன்றியதுண்டு.

**நீரில் மிதக்கும் தாமரை**

இன்று மனம் ஒரு கொதிநிலையில் இருந்தபோது என் தனிப்பட்ட பிரச்சினைகளை ஏதாவது ஒரு சக ஆசிரியரிடம் நாளை பேச வேண்டும் என எண்ணினேன். ஒரு நண்பரின் முகம் மனதில் எழுந்தது. அவரிடம் சொல்லலாம். எனக்குப் பிரியமானவர்; நெருக்கமானவர்; என்னிடம் அக்கறை கொண்டவர். கற்பனையில் அவரிடம் உரையாடலை வளர்த்துப் பார்த்தேன். அப்போது தான் “சார்” இடறியது. “சார்” நடுவே வந்தால் என்னால் அவரிடம் மனம் திறந்து பேச முடியாது எனத் தோன்றியது. சரி அவரைப் பெயரைச் சொல்லி அழைத்து உரையாடலாம் என்றால் இதுவரை அல்லாமல் இப்போது அப்படி திடீரென அழைப்பது அதிர்ச்சியாய் விநோதமாய் இருக்கும்.

அப்போதுதான் இன்னொரு விஷயம் நினைவுக்கு வந்தது. நான் இதற்கு முன் பணி செய்த எந்த தனியார் நிறுவனத்திலும் இது போன்ற “விளிப்பெயர்” நெருக்கடி எழுந்ததில்லை. அங்கு எல்லாரையும் பெயராலே அழைப்போம். அங்கு சட்டென நான் சிலரிடம் நெருங்கிவிட்டதுண்டு. இங்கும் நான் சிலரிடம் பார்த்ததுமே பிரியத்தை, அணுக்கத்தை உணர்ந்ததுண்டு. ஆனால், இந்த “சார்” எந்த உறவுக்கு இடையிலும் ஒரு மரியாதை நிமித்தமான இடைவெளியை உண்டு பண்ணுகிறது. இச்சொல்லைக் கைவிடாது அந்த இடைவெளியைத் தாண்டுவது சுலபமில்லை. ஆனால் அவ்வளவு எளிதாய் நீங்கள் “சாரை” உதிர்த்திட முடியாது. ஆசிரியர்களின் சமூகமாக்கல் மொழியுடன் தவிர்க்க முடியாத அம்சமாக மாறிவிட்டது “சார்” விளி.

வேறெந்த வேலையிடத்தையும்விடக் கல்லூரியிலே ஊழியர்கள் இடையில் இறுக்கமும் முறைப்பும் பூடக வன்மமும் அதிகம். அங்கு அன்பு மலராது இருப்பதற்கு இந்த விளிப்பெயரும் ஒரு காரணமோ?

“சார்” என்பது தன்னை மறுத்து, தன்னை மற்றமையில் கரைக்கும் நம் பண்பாட்டின் சூட்சுமம் பொதிந்த விளி.

அதே நேரம், நெருக்கமான உறவுகள் தோன்ற “சாரை” ஒழிக்க வேண்டும். “சார்” என்பது நீரில் மிதக்கும் தாமரை. அதில் எதுவும் ஒட்டவே ஒட்டாது.

**(கட்டுரையாளர் ஆர்.அபிலாஷ், நாவலாசிரியர், விமர்சகர். இவரைத் தொடர்புகொள்ள: [abilashchandran70@gmail.com](mailto:abilashchandran70@gmail.com)**�,”

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *