ஆவின் டேங்கர் லாரிகள் வேலைநிறுத்தம்: பால் தட்டுப்பாடு அபாயம்!

public

ஆவின் டேங்கர் லாரி உரிமையாளர்கள் நேற்று நள்ளிரவு முதல் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். இதன்மூலம் பால் விநியோகம் பாதிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

கடந்த சில ஆண்டுகளாக வாகன எரிபொருள் விலை உயர்வு, வாகன பராமரிப்பு, காப்பீடு கட்டணம், ஓட்டுநர் உள்ளிட்ட பணியாளர்கள் சம்பள உயர்வு என லாரி உரிமையாளர்களின் செலவினங்கள் தொடர்ந்து உயர்ந்து வருவதாக கூறப்படுகிறது. இந்நிலையில், 2011ஆம் ஆண்டு நிர்ணயம் செய்த ஒரு கிலோ மீட்டருக்கு ரூ.27. 6 காசுகள் என்கிற வாடகை முறையையே கடைப்பிடித்து இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை அந்த ஒப்பந்தம் புதுப்பிக்கப்பட்டு வருவதாகவும். அந்த ஒப்பந்தமும் 2018ஆம் ஆண்டே காலாவதியாகிவிட்டதாகவும் ஆவின் டேங்கர் லாரி உரிமையாளர்கள் குற்றம்சாட்டுகின்றனர். அதோடு சத்துணவு டெண்டர் முறைகேடு புகாரில் சிக்கிய கிறிஸ்டி நிறுவனத்துக்கு முழு ஒப்பந்தத்தையும் வழங்கப்போவதாகத் தகவல் வெளியானது.

இதற்கு ஆவின் டேங்கர் லாரி உரிமையாளர்கள் எதிர்ப்புத் தெரிவித்து போராட்டத்தில் ஈடுபடப்போவதாக அறிவித்தனர். இந்நிலையில் நேற்று சென்னை நந்தனத்தில் உள்ள ஆவின் தலைமை அலுவலகத்தில் லாரி உரிமையாளர்கள் சங்கத்தினர் மற்றும் அதிகாரிகளுடனான பேச்சுவார்த்தை நடைபெற்றது. இதில் உடன்பாடு எட்டப்படவில்லை.

இதன் பின் செய்தியாளர்களைச் சந்தித்த சங்கத் தலைவர் சுப்பிரமணி, பேச்சுவார்த்தையில் சுமூக முடிவு எட்டப்படவில்லை. எனவே நள்ளிரவு முதல் போராட்டம் நடைபெறும் என்று அறிவித்திருந்தார்.

அதன்படி நள்ளிரவு முதல் போராட்டம் நடைபெற்று வருகிறது. வெளி மாவட்டங்களிலிருந்து பால் கொள்முதல் செய்யும் 300 டேங்கர் லாரிகளும் இந்த வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளன. இதனால் பால் விநியோகம் பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. ஆனால் நிர்வாகத்துக்கு சொந்தமான 53 டேங்கர் லாரிகளை கொண்டு நிலைமையைச் சமாளிப்போம் என்று ஆவின் நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது.

இதுகுறித்து பால் முகவர்கள் சங்க தலைவர் பொன்னுசாமி வெளியிட்டுள்ள அறிவிப்பில், ”டேங்கர் லாரிகளின் ஒப்பந்தம் 2019ஆம் ஆண்டே காலாவதியாகி விட்ட நிலையில் அப்போதைய நிர்வாக இயக்குநர் காமராஜ், ஆவின் ஒன்றியங்கள் கவனித்து வந்த லாரி உரிமையாளர்கள் ஒப்பந்த முறையை ரத்து கிறிஸ்டி புட்ஸ் எனும் நிறுவனத்திற்குத் தாரை வார்க்கும் விதமாக நடவடிக்கை மேற்கொண்டு வந்ததோடு லாரி வாடகையையும் உயர்த்தாமல் காலம் தாழ்த்தி வந்திருக்கிறார்.

இதுமட்டுமின்றி ஏற்கனவே வழங்கப்படும் வாடகையான கிலோ மீட்டருக்கு ரூ.27.60ஐ இன்னும் குறைக்குமாறும் ஆவின் அதிகாரிகள் லாரி உரிமையாளர்களை வலியுறுத்தியுள்ளனர். ஏற்கனவே கொடுத்து வரும் லாரி வாடகையே கட்டுபடியாகவில்லை என்கிற நிலையில் தற்போது அதனை இன்னும் குறைத்து வழங்கிட நிர்ப்பந்தம் செய்வது, லாரி வாடகை ஒப்பந்தத்தைப் புதுப்பிக்காமல் காலம் தாழ்த்தி இழுத்தடிப்பது என லாரி உரிமையாளர்களுக்கு ஆவின் நிறுவனம் கடும் நெருக்கடியை அளித்து லாரி உரிமையாளர்களாகவே ஆவின் நிறுவன ஒப்பந்தத்திலிருந்து வெளியேற வேண்டும் என முன்னாள் ஆவின் நிர்வாக இயக்குநர் போட்டுக் கொடுத்த திட்டத்தின்படி தற்போதைய ஆவின் இணை நிர்வாக இயக்குநர் உள்ளிட்ட உயரதிகாரிகள் செயல்பட்டு வருகின்றனர்.

ஆவின் நிறுவனத்திற்குப் பால் ஏற்றி வரும் டேங்கர் லாரி உரிமத்தை கிறிஸ்டி புட்ஸ் எனும் நிறுவனத்திற்குத் தாரை வார்க்கும் விதமாக தற்போதுள்ள லாரி உரிமையாளர்களின் உரிமைகள் பறிக்கப்பட்டு வருகிறது.

லாரி உரிமையாளர்களின் போராட்டத்தால் தமிழகம் முழுவதும் ஆவின் பால் தட்டுப்பாடு ஏற்படும் நிலை உருவாகியுள்ளதாலும், லாரி வாடகை பல ஆண்டுகளாக உயர்த்தப்படாமல் இருப்பதால் இத்தொழிலை நம்பியுள்ள ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் வேலையிழக்கும் சூழல் உருவாகி வருவதாலும் தமிழக முதல்வர் இவ்விவகாரத்தில் உடனடியாக தலையிட்டு லாரி வாடகையை உயர்த்தி வழங்கிடவும், ஒப்பந்தத்தை உடனடியாக புதுப்பிக்கவும் உத்தரவிட வேண்டும்” என்று வலியுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து விருதுநகர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ராஜேந்திர பாஜாஜி, இதுகுறித்து சம்பந்தப்பட்டவர்களுடன் தொடர்ந்து போனில் பேசி வருவதாகவும், விரைவில் வேலைநிறுத்தம் முடிவுக்கு கொண்டுவரப்படும் என்றும் தெரிவித்தார்.

**-கவிபிரியா**

�,

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *