சன் பிக்சர்ஸ் கலாநிதி மாறன் தயாரிப்பில் ஏ.ஆர் ரகுமானின் இசையில் உருவாகி வரும் ராயன் படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது இறுதிகட்ட வேலைகள் நடந்து வருகிறது.
தனுஷ் உடன் அபர்ணா பாலமுரளி, வரலட்சுமி சரத்குமார், எஸ்.ஜே.சூர்யா, செல்வராகவன், பிரகாஷ்ராஜ், சரவணன், காளிதாஸ் ஜெயராம், சந்தீப் கிஷன் ஆகியோர் நடித்துள்ள ராயன் படத்தை 100 கோடி ரூபாய் செலவில் முதல் பிரதி அடிப்படையில் நடித்து இயக்கி, தயாரித்து தனுஷ் கொடுத்துள்ளதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் ராயன் படத்தை தொடர்ந்து தெலுங்கு இயக்குநர் சேகர் கம்முலா இயக்கத்தில் குபேரா என்ற திரைப்படத்தில் நடித்து வருகின்றார் தனுஷ். இப்படத்தில் தனுஷுடன் இணைந்து ராஷ்மிகா மந்தனா, நாகர்ஜுனா என பலர் நடித்து வருகின்றனர். சமீபத்தில்தான் இப்படத்தின் தலைப்பு போஸ்டர் வெளியானது.
குபேரா படத்தில் தனுஷின் தோற்றம் புதிதாக இருப்பதால் கண்டிப்பாக இப்படமும் ஒரு வித்தியாசமான படமாக இருக்கும் என்றே எதிர்பார்க்கப்படுகின்றது. தொடர்ந்து படப்பிடிப்பு நடைபெற்று வரும் நிலையில் தயாரிப்பு நிறுவனம் போஸ்டர் ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், குபேரா படத்தின் முக்கிய அறிவிப்பு மே மாதம் 2-ம் தேதி வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
பண கட்டுகள் அடுக்கி வைத்துள்ள புகைப்படத்தில் குபேரா என்ற படத்தின் தலைப்பு இடம்பெற்றுள்ளது. அதன்படி படத்தின் டீசர் அல்லது கில்ம்ப்ஸ் வீடியோ வெளியாகும் என ரசிகர்கள் எதிர்ப்பார்த்துள்ளனர். மேலும் ஒரு பிச்சைக்காரன் எப்படி குபேரனாகிறான் என்பது படத்தின் கதையாக இருக்கலாம் என்றும் யூகித்து சமூகவலைதளங்களில் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
ராமானுஜம்