பிஹார் மாநிலத்தில் பிரிட்டிஷ் காலத்து பழைய கட்டடம் இடிப்பு!

public

பிஹார் மாநிலத்தில் பழைய புகழ்பெற்ற ஆங்கிலேயர் காலத்து கட்டடம் ஒன்று இடித்து தரைமட்டமாக்கப்பட்டது. இந்தக் கட்டடம் ஆஸ்கர் விருது பெற்ற ‘காந்தி’ திரைப்படத்தில் சில காட்சிகளில் இடம்பெற்ற கட்டடமாகும். இந்தக் கட்டடம் இருபதாம் நூற்றாண்டுத் தொடக்கத்தில் கட்டப்பட்டது. வரலாற்று சிறப்புமிக்க இந்த பிரிட்டிஷ் கால கட்டடம், பாட்னா மாவட்ட கலெக்டர் அலுவலகமாகச் செயல்பட்டு வந்தது. பிஹார் அரசின் மறு சீரமைப்பு திட்டங்களின் ஒரு பகுதியாக இந்த பிரிட்டிஷ் கால கட்டடம் இடிக்கப்பட்டது.
இந்த பாட்னா கலெக்டர் அலுவலக வளாகம் இடிக்கும் பணிகள் கடந்த மாதம் தொடங்கியது. அப்போதிலிருந்தே பல வரலாற்றாசிரியர்கள், அறிஞர்கள், பாதுகாப்புக் கட்டடக்கலை நிபுணர்கள், காந்தியவாதிகள் மற்றும் சாதாரண குடிமக்கள் தங்கள் எதிர்ப்புகளைத் தெரிவித்து வருகின்றனர்.
கடந்த மே 13ஆம் தேதி அன்று இந்த கட்டடத்தை இடிக்காமல் புனரமைப்பு செய்ய வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டிருந்தது, ஆனால், இந்த வழக்கை சுப்ரீம் கோர்ட் நிராகரித்து உத்தரவிட்டது.
கங்கை ஆற்றின் கரையில் அமைந்துள்ள இந்த இரண்டு மாடி பிரதான கட்டடம் நேற்று புல்டோசர்கள் உதவியுடன் இடிக்கப்பட்டது. அப்போது அங்கு இருந்த ஆர்வலர்கள் மற்றும் சில காந்தியவாதிகள் சோகமாகக் காணப்பட்டனர்.
இந்த நிலையில் இந்தக் கட்டடத்தில் உள்ள பழைய பாதுகாப்பு பெட்டகங்கள், கடிகாரங்கள், தொங்கும் ஸ்கைலைட்கள், சுழல் படிக்கட்டுகள், பழங்கால ஸ்டீம் ரோலர், மிகவும் பழைமையான அச்சு இயந்திரம் போன்ற வரலாற்று கலைப்பொருட்களையாவது மீட்டெடுக்குமாறு நகரத்தின் பாரம்பரிய ஆர்வலர்கள் அதிகாரிகளிடம் முறையிட்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

.

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *