தமிழகத்தையே உலுக்கிய பாலியல் வழக்கில் அதிமுக நிர்வாகி உட்பட மேலும் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பொள்ளாச்சியில் இளம்பெண்கள், மாணவிகளை ஃபேஸ்புக்கில் நட்பு கொண்டு, அவர்களைத் தனியான இடத்துக்கு வரவழைத்து, மிரட்டி பாலியல் தொந்தரவு கொடுத்து, வீடியோ எடுத்த விவகாரம் தமிழகம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இவ்வழக்கில் பொள்ளாச்சி பகுதியைச் சேர்ந்த திருநாவுக்கரசு, சபரி, சதீஷ்குமார், வசந்தகுமார், மணிகண்டன் ஆகிய 5 பேரை போலீசார் கைது செய்தனர். இவர்கள் தற்போது சேலம் மத்தியச் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
இதற்கிடையே, பாலியல் வழக்கு தொடர்பாக, புகார் அளித்த பெண்ணின் சகோதரரைத் தாக்கிய வழக்கு தொடர்பாகப் பார் நாகராஜ் உள்ளிட்ட மூன்று பேர் தனியாகக் கைது செய்யப்பட்டனர். இவ்வழக்கை சிபிசிஐடி விசாரித்து வந்த நிலையில், கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் சிபிஐ வசம் ஒப்படைக்கப்பட்டது. இதையடுத்து பொள்ளாச்சி பாலியல் வழக்கு விவகாரம் தொடர்பாகப் புதிதாக வழக்குப்பதிவு செய்த சிபிஐ புலனாய்வு பிரிவினர், வழக்கில் கைதானவர்களிடம் விசாரணை மேற்கொண்டு வந்தனர்.
2019ஆம் ஆண்டு குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டு, கோவை மகளிர் நீதிமன்றத்தில் இந்த வழக்கு நடந்து வருகிறது. மேலும் இந்த வழக்கில் சில அரசியல் பிரமுகர்களுக்கும் தொடர்பு இருப்பதாகவும், அவர்கள் கைது செய்யப்படாமல் இருப்பதாகவும் தொடர் குற்றச்சாட்டு இருந்து வருகிறது.
இந்நிலையில், இவ்வழக்கில் மேலும் 3 பேரை சிபிஐ அதிகாரிகள் கைது செய்துள்ளனர். பொள்ளாச்சி ஆச்சிப்பட்டி அருகேயுள்ள சங்கம் பாளையத்தைச் சேர்ந்த ஹேரேன்பால் (29), வடுகபாளையத்தில் உள்ள விகேவி லேஅவுட்டைச் சேர்ந்த பாபு என்ற ‘பைக்’ பாபு (27), வடுகபாளையத்தைச் சேர்ந்த அருளானந்தம் (34) ஆகிய மூவரை சிபிஐ அதிகாரிகள் நேற்று மாலை விசாரணைக்கு அழைத்துச் சென்று, பின் விசாரணையின் இறுதியில் நள்ளிரவில் மூவரையும் கைது செய்துள்ளனர்.
இதில், கைது செய்யப்பட்ட அருளானந்தம் அதிமுக பொள்ளாச்சி நகர மாணவரணி செயலாளராக உள்ளதோடு, கார் வாங்கி விற்கும் தொழில் செய்து வருவது விசாரணையில் தெரியவந்துள்ளது. இவருக்கு சில மாதங்களுக்கு முன்பு தான் திருமணம் நடந்ததாகவும், திருமணத்தில் அமைச்சர் உட்பட சில முக்கிய அரசியல் பிரமுகர்கள் கலந்துகொண்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. அதுபோன்று பைக் பாபு அடிதடி வழக்கில் விசாரணை வளையத்திலிருந்தவர் என்று கூறப்படுகிறது.
அதோடு, அருளானந்தம், துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமனுக்கு நெருக்கமானவர் என்று கூறப்படும் நிலையில், இருவரும் இருப்பது போன்ற புகைப்படங்களும் இணையத்தில் பரவி வருகிறது. இந்நிலையில், பொள்ளாச்சி ஜெயராமன், அருளானந்தத்திற்கும் தனக்கும் எந்த தொடர்பும் இல்லை எனக் கூறியுள்ளார். கட்சிக்காரர் என்ற முறையில் கூட்டங்களுக்கு எங்கேயாவது அருளானந்தம் வந்திருக்கலாம் என்றும், அவரை நேற்று முன்தினம் தான் நேரில் பார்த்ததாகவும் தெரிவித்துள்ளார்.
இதனிடையே கைது செய்யப்பட்ட மூவரையும் போலீசார் இன்று கோவை மகளிர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். மூவருக்கும் வரும் 20ஆம் தேதி வரை நீதிமன்ற காவல் விதிக்கப்பட்டுள்ளது.
அதுபோன்று, அருளானந்தத்தை தற்போது அதிமுகவிலிருந்து நீக்கி கட்சி ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர் செல்வம் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளனர்.
**-பிரியா**�,