ஒருமுறை பயன்படுத்தும் நெகிழிக்கு நாடு முழுவதும் தடை!

public

ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்களின் பயன்பாட்டைக் கட்டுப்படுத்துவதற்கான முயற்சிகள் நாடு முழுவதும் பல ஆண்டுகளாக நடைபெற்று வந்தாலும் உரிய பலன்கள் கிடைக்கவில்லை. தமிழகத்தில் கடந்த அதிமுக ஆட்சியின்போது ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்களைப் பயன்படுத்தத் தடை விதிக்கப்பட்டாலும் அது ஒரு சில மாதங்களுக்கு மேல் நடைமுறையில் இல்லை. இந்த நிலையில் நாடு முழுவதும் இத்தகைய தடையை ஒன்றிய அரசு பிறப்பித்துள்ளது. ஜூலை 1 முதல் இது அமலுக்கு வருகிறது.
ஒருமுறை மட்டுமே பயன்படுத்தித் தூக்கி எறியும் பிளாஸ்டிக் பொருட்களின் பயன்பாட்டுக்கு ஜூலை 1ஆம் தேதிமுதல் தடை விதிக்கப்படுவதாக ஒன்றிய சுற்றுச்சூழல் அமைச்சகம் அறிவித்துள்ளது.
மக்காத தன்மை கொண்ட நெகிழிப் பொருட்களின் பயன்பாடு உலக அளவில் சுற்றுச்சூழலுக்கும் உயிரினங்களுக்கும் பெரும் அச்சுறுத்தலாக உருவெடுத்திருக்கிறது. முக்கியமாக, கடலில் வீசப்படும் இத்தகைய கழிவுகளால் வாழ் உயிரினங்களுக்கு ஆபத்துகள் அதிகம்.
இந்த நிலையில் இந்த அபாயத்துக்கு முடிவுகட்டும் வகையில் ஒன்றிய அரசு அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளது. குறைந்த அளவிலேயே பயன்பட்டு, மறு சுழற்சி செய்ய முடியாமல் குப்பையாக மாறும் பிளாஸ்டிக் பொருட்களின் பயன்பாட்டுக்கு அது தடை விதித்துள்ளது. இந்தப் பொருட்களின் உற்பத்தி, இறக்குமதி, இருப்பு, விநியோகம், விற்பனை, பயன்பாடு ஆகிய அனைத்தும் ஜூலை 1 முதல் நாடு முழுவதும் தடை செய்யப்படும் என ஒன்றிய சுற்றுச்சூழல், வனம் மற்றும் காலநிலை மாற்ற அமைச்சகம் அறிவித்துள்ளது.
இது அதிரடியாக எடுக்கப்பட்ட முடிவல்ல என ஒன்றிய அரசு விளக்கம் அளித்துள்ளது. ஒருமுறை மட்டுமே பயன்படுத்தக்கூடிய பிளாஸ்டிக்கைக் கைவிடுவதற்கு அரசு போதிய அவகாசம் அளித்துள்ளது என்றும், அதன் பிறகே இத்தகைய முடிவை எடுத்திருப்பதாகவும் ஒன்றிய சுற்றுச்சூழல் அமைச்சர் பூபேந்தர் யாதவ் தெரிவித்தார்.
இந்தியாவில் 2009ஆம் ஆண்டு இமாலச்சப் பிரதேசத்தில் நெகிழிப் பொருட்கள் பயன்பாடு தடை செய்யப்பட்டது. அதைத் தொடர்ந்து ராஜஸ்தான், ஜம்மு – காஷ்மீர், உத்தரப்பிரதேசம், மகாராஷ்டிரம் ஆகிய மாநிலங்களும் தடை விதித்தன. கோவா, குஜராத், கேரளா, ஒடிசா, மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களிலும் நெகிழிப் பயன்பாட்டிற்கு பகுதி அளவு தடை விதிக்கப்பட்டன. 2019ஆம் ஆண்டு தமிழகத்தில் இதற்கான தடை விதிக்கப்பட்டது. பஞ்சாப் அரசும் அண்மையில் நெகிழிப் பயன்பாட்டுக்குத் தடை விதித்தது.
மாநில அரசுகள் பலவும் இத்தகைய நடவடிக்கைகளை எடுத்தாலும் நடைமுறையில் பெரிய பலன் ஏதும் ஏற்படவில்லை. இந்த நிலையில் ஒன்றிய அரசின் உத்தரவு எந்த அளவுக்குப் பலன் தரும் என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

.

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *