ற்போது தமிழகம் முழுவதும் கொரோனா கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ளதால் மக்கள் அதிகம் குடும்பத்தினருடன் வெளியே வர ஆரம்பித்துள்ளனர். தமிழ்ப் புத்தாண்டு, புனித வெள்ளி, ஈஸ்டர் என்று தொடர் விடுமுறை வந்ததால் தமிழகம் முழுவதும் சுற்றுலாத் தலங்களிலும், கோயில் வழிபாடுகளிலும் கூட்டம் அலை மோதுகிறது. தொடர்ந்து சேலம் மாவட்டச் சுற்றுலாத் தலங்களில் மக்கள் கூட்டம் அலைமோதியது. தொடர் விடுமுறையைக் கொண்டாட பலரும் சுற்றுலாத் தலங்களில் குவிந்தனர்.
ஏழைகளின் ஊட்டி எனப்படும் ஏற்காட்டுக்குப் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகள் மற்றும் கர்நாடகா, கேரளா உள்ளிட்ட அண்டை மாநிலங்களைச் சேர்ந்த பயணிகள் வருகை அதிகரித்துள்ளது. ஏற்காட்டில் நேற்று முன்தினம் கொட்டிய கன மழையால் குளிர்ந்த சூழல் நிலவியதால் பயணிகள் மகிழ்ச்சியடைந்தனர்.
தோட்டக்கலைத் துறை பூங்காக்கள், லேடீஸ் சீட், ஜென்ஸ் சீட், பகோடா பாயின்ட் உள்ளிட்ட காட்சி முனைப்பகுதிகளில் பயணிகள் கூட்டம் அதிகரித்திருந்தது. ஏற்காடு ஏரியில் படகு சவாரி செய்ய பயணிகள் அதிகம் ஆர்வம் காட்டினர். இதமான வெயில், குளிர்ச்சியான காற்று, பசுமையான சூழல் என அனைத்தும் ஒருவரது மனதை மகிழ்விக்கும் வகையில் உள்ளது.
இதேபோல் மேட்டூர் அணைப் பூங்காவில் மக்கள் வருகை அதிகமாக இருந்ததால், பூங்கா முழுவதும் மக்கள் கூட்டம் அலைமோதியது. சேலம் குரும்பப்பட்டி உயிரியல் பூங்கா, சேலம் அண்ணா பூங்கா, ஆத்தூர் அடுத்த ஆனைவாரி சூழல் சுற்றுலா மையம், பூலாம்பட்டி காவிரி கதவணை பகுதி என மாவட்டத்தின் அனைத்து சுற்றுலா இடங்களிலும் பயணிகள் வருகை அதிகரித்துள்ளது.
இதுதொடர்பாக பயணிகள் சிலர் கூறுகையில், “கொரோனா தொற்று காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக கோடையில் சுற்றுலா செல்வதைத் தவிர்த்தோம். தற்போது கொரோனா நீங்கிவிட்டதால் ஆர்வமுடன் சுற்றுலாவுக்கு வந்துள்ளோம். நீண்ட நாட்கள் கழித்து குடும்பத்துடன் வருவது மகிழ்ச்சியாக உள்ளது” என்றனர்.
.
தொடர் விடுமுறை: ஏற்காடு, மேட்டூரில் குவிந்த சுற்றுலா பயணிகள்!
Published On:
| By admin
இதையும் படிங்க!
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel