கொரோனாவால் ஆண்களுக்கு மலட்டுத்தன்மை: ஆய்வில் தகவல்

public

கொரோனா வைரஸ், ஆண்களின் குழந்தை பேறு திறனில் பாதிப்பை ஏற்படுத்துமா என்பதை அறிய மும்பை ஐ.ஐ.டி., மும்பை ஜஸ்லோக் ஆஸ்பத்திரி ஆகியவற்றை சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் இணைந்து ஒரு ஆய்வில் ஈடுபட்டனர். இதற்காக குழந்தை பேறு பிரச்சனை இல்லாத 20 முதல் 45 வயது வரையிலான 27 ஆண்களை ஆய்வுக்கு பயன்படுத்தினர். இவர்களில் 10 பேர் நன்கு ஆரோக்கியமானவர்கள். மீதி 17 பேர், லேசான, மிதமான கொரோனாவால் பாதிக்கப்பட்டு சமீபத்தில் குணமடைந்தவர்கள்.

27 ஆண்களின் விந்தணுவில், இனப்பெருக்க நிகழ்வுடன் தொடர்புடைய புரோட்டீன்களை ஆய்வு செய்து ஒப்பிட்டு பார்த்தனர். அப்போது, கொரோனா தாக்காத ஆண்களின் புரோட்டீன்களை விட கொரோனா தாக்கி குணமடைந்த ஆண்களின் புரோட்டீன்கள் பாதிக்கும் குறைவாக இருந்தன. மேலும், கொரோனா தாக்கி குணமடைந்த ஆண்களுக்கு விந்தணு எண்ணிக்கையும் கணிசமாக குறைந்திருந்தது. அதன் நகரும் தன்மை, சரியான வடிவிலான விந்தணு எண்ணிக்கை ஆகியவையும் குறைவாக காணப்பட்டன.

எனவே, லேசான, மிதமான கொரோனா பாதிப்பு கூட ஆண்களின் குழந்தை பேறு திறன் மீது நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ பாதிப்பு ஏற்படுத்தி, மலட்டுத்தன்மைக்கு காரணமாக இருப்பது கண்டறியப்பட்டது. கொரோனாவில் இருந்து குணமடைந்த பிறகும் அந்த பாதிப்பு நீடிப்பது தெரியவந்தது.

கொரோனாவை உண்டாக்கும் சார்ஸ் வைரஸ், பொதுவாக சுவாச உறுப்புகளைத்தான் தாக்கும். இருப்பினும், அந்த வைரசும், அதற்கு உடல் காட்டும் எதிர்வினையும் இதர திசுக்களையும் சேதப்படுத்துவது கண்டறியப்பட்டது. இருப்பினும், இதை உறுதிப்படுத்த பெரிய அளவிலான ஆய்வுகள் நடத்தப்பட வேண்டும் என்றும், இதர காய்ச்சலில் இருந்து குணமடைந்த ஆண்களையும் ஆய்வுக்கு உட்படுத்த வேண்டும் என்றும் ஆராய்ச்சியாளர்கள் யோசனை தெரிவித்துள்ளனர்.

.

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *