சிலைகளுக்கு பாதுகாப்பு இல்லை : பொன்மாணிக்கவேல் எச்சரிக்கை!

public

தமிழ்நாடு கோயில்களில் உள்ள மூன்று லட்சத்து 50 ஆயிரம் தெய்வ விக்கிரகங்கள் பாதுகாப்பாக இல்லை என்று சிலை கடத்தல் தடுப்புப் பிரிவில் பணியாற்றி ஓய்வுபெற்ற ஐஜி பொன் மாணிக்கவேல் கவலை தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு சிலை கடத்தல் தடுப்பு பிரிவில் ஐஜியாக சிறப்பாக பணியாற்றி ஓய்வு பெற்ற பொன்மாணிக்கவேல் சமீபத்தில் சென்னை மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலுக்கு சென்று விட்டு வெளியே வந்தார்.

அப்போது செய்தியாளர்களை சந்தித்த அவர், ”சிலை தடுப்பு பிரிவில் ஐந்து வருடமாக பணியாற்றிய அனுபவம் எனக்கு இருக்கிறது. அதனால் சிலை பாதுகாப்பின் முக்கியத்துவம் குறித்து எனக்கு தெரியும்.கடந்த இரண்டு ஆண்டுகளாக தமிழ்நாடு முழுவதும் உள்ள 290 கோயில்களுக்கு சென்று ஆய்வு செய்தேன். தமிழ்நாட்டில் 10 ஆயிரம் தொன்மையான கோயில்கள் உள்ளன.

இந்த கோயில்களில் பஞ்சலோக சிலைகள், தங்கம், வெள்ளிசிலைகள் உள்பட 3 லட்சத்து 50 ஆயிரம் சாமி சிலைகள் உள்ளன. இந்த சிலைகள் பாதுகாப்பாக இல்லை. அந்த சிலைகள் தொன்மையா? இல்லையா? என்பது இதுவரை ஆய்வு செய்யாமல், சட்டரீதியாக பதிவு செய்ய முடியால் இருக்கிறது. 40 ஆண்டுகளாக ஆட்சியாளர்கள் தொன்மையான சிலைகளைப் பதிவுசெய்யாததால்தான், பல சிலைகள் திருடப்பட்டு வெளிநாட்டிற்குக் கொண்டுசெல்லப்பட்டன.

இந்த சிலைகளை நம் முன்னோர்கள் மிகவும் பாதுகாப்பான முறையில் நம்மிடம் கொடுத்துவிட்டு சென்றனர். நாம் அதை பாதுகாப்பாற்ற முறையில் வைத்திருக்கிறோம். இதை பாதுகாக்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சொல்வதை விட அனைவரும் இணைந்து செயல்படுவது நாம் ஒவ்வொருவரின் கடமையாகும். அடுத்த தலைமுறைக்கு இந்த கலாச்சாரத்தை கொடுக்க வேண்டுமென்றால் அனைவரும் இணைந்து செயல்பட வேண்டும். அதனால் நேரம் கிடைக்கும்போதெல்லாம் இதற்காக வேலை செய்யலாம் என்று எண்ணியிருக்கிறேன்” என்று கூறினார்.

தொடர்ந்து பேசிய அவர்,” மூன்று லட்சத்து 50 ஆயிரம் சிலைகளுக்குத் தொன்மையான சான்றிதழ் வழங்கும் நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டும் என முதல்வர் ஸ்டாலினிடம் ஆடியோ, வீடியோ ஆதாரங்களுடன் மனு அளித்துள்ளேன். தற்போது நடைபெற்று வரும் ஆட்சி, இன்னும் கூடுதலாக நல்ல பெயரை எடுக்க வேண்டுமென்றால் இந்த சிலைகள், கல்வெட்டுகளை பதிவு செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். இதனை காப்பற்ற வேண்டும். இதனை பதிவு செய்து விட்டால் வரலாற்றில் இல்லாத நல்ல பெயர் இந்த அரசுக்கும் அதிகாரிகளுக்கும் கிடைத்து விடும். தமிழ் கலாச்சாரமான தொன்மையான சிலைகளை பாதுகாக்க ஒரே வழி இது தான்.

இந்த சிலைகளை நம் முன்னோர்கள் உற்சவ திருவிழாவுக்காக படைத்தார்கள். திருவிழாவுக்காக படைக்கப்பட்ட சிலைகளை வெளிநாடுகளில் காட்சி பொருளாக வைத்திருக்கிறார்கள். வெளிநாட்டில்தான் காட்சிபொருளாக வைத்திருக்கிறார்கள் என்றால் தமிழ்நாட்டில் உள்ள அருங்காட்சியகத்திலும் காட்சி பொருளாக வைத்து அதன்மூலம் பணம் சம்பாதிக்கின்றனர். எவ்வளவு பெரிய அவலமான செயல்.

நான் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு சிறப்பு அதிகாரியாக இருந்த போது சிலைகடத்தல் வழக்கில் சிக்கியவர்கள் வெளியே வர முடியாத அளவுக்கு கடுமையான வழக்குகளை போட்டுள்ளோம். அதற்கு உரிய ஆதாரங்கள் இருக்கிறது. சிலைகளுக்கு தொன்மையான சான்றிதழ் வழங்குவது குறித்து தனிப்பட்ட முறையில் நான் அளித்த மனுவுக்கு முதல்வர் நடவடிக்கை எடுப்பார் என்று நம்பிக்கை இருக்கிறது” என்று கூறினார்.

**-வினிதா**

�,

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *