மின்னம்பலம் மின்னம்பலம்

சனி 23 நவ 2019

மணிமண்டப திறப்பு விழாவா? நலத்திட்ட விழாவா? குழப்பும் ஆட்சியர்!

மணிமண்டப திறப்பு விழாவா? நலத்திட்ட விழாவா? குழப்பும் ஆட்சியர்!

கடலூர் மஞ்சை நகர் மைதானத்தில் ராமசாமி படையாட்சியார் மணிமண்டபம் திறப்புவிழா வரும் 25ஆம் தேதி நடைபெறுகிறது. அதில், தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் பன்னீர்செல்வம் உட்பட அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் பங்கேற்க இருக்கின்றனர்.

இதனையொட்டி குண்டும் குழியுமாக இருந்த கடலூர் நகர சாலைகளை நகராட்சி அதிகாரிகள் அவசர அவசரமாக சீர்செய்துவருகிறார்கள். அதுபோலவே, வடிகால் வாய்க்கால்களை தற்காலிகமாக சீரமைப்பது, நீண்ட நாட்களாக பழுதடைந்து கிடக்கும் மின்விளக்குகளை மாற்றிவிட்டு புதிய மின்விளக்குகள் பொருத்துவது என படுவேகத்தில் பணிகள் நடந்துவருகின்றன.

அனைத்தும் சரிசெய்யப்படும் நிலையில், “கடலூரில் பிரதானமாக உள்ள பேருந்து நிலையப் பகுதிகளில் தண்ணீர் தேங்கி குட்டை போல காட்சியளிக்கிறது. இதனை மாவட்ட ஆட்சியர் மறந்துவிட்டாரா அல்லது அந்தப்பக்கம் போனதே இல்லையா” என்று கேள்வி எழுப்புகிறார்கள் கடலூர் நகரவாசிகள்.

முதல்வரை சந்தித்து ராமசாமி படையாட்சியார் நினைவு மண்டபத் திறப்பு விழா அழைப்பிதழை உள்ளூர் அமைச்சர் எம்.சி.சம்பத், மாவட்ட ஆட்சியர் அன்புச் செல்வன் ஆகியோர் வழங்கிவிட்டுவந்தனர்.

இந்த நிலையில் மணிமண்டப திறப்பு விழாவோடு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியையும் சேர்த்து நடத்த முயற்சி செய்த மாவட்ட ஆட்சியர் அன்புச் செல்வன், கடந்த 19ஆம் தேதி, மாவட்டத்தின் பத்து தாலுகாக்களிலும் உள்ள தாசில்தார், ஆர்.டி.ஒ, சப் கலெக்டர், டி.ஆர்.ஒ, திட்ட அதிகாரி என அனைத்து அதிகாரிகளையும் அழைத்து ஆலோசனைக் கூட்டம் நடத்தினார். அதில், முதியோர் உதவித் தொகை, வீட்டுமனைப் பட்டா, விதவைகளுக்கு வேலை என 500 முதல் 700 பயனாளிகளை ஒவ்வொரு தாசில்தாரும் அழைத்துவரவேண்டும் என்று அறிவுறுத்தினார்.

மறுநாள் மீண்டும் (நவம்பர் 20) அனைத்து தாசில்தார்களையும் தொடர்புகொண்ட ஆட்சியர் அலுவலகம் , ‘உங்கள் தாலுகாவுக்கு 15 பஸ் அனுப்பப்படும். 25ஆம் தேதி பயனாளிகள் அனைவரும் காலை 10.00 மணிக்குக் கடலூர் வந்தாக வேண்டும். வரும்போது காலை உணவு வாங்கி கொடுங்கள். திரும்பி அழைத்துச் செல்லும்போது மதிய உணவுகள் வாங்கி கொடுங்கள்” என்று உத்தரவிட்டிருக்கிறார்.

இதனைக் கேட்ட தாசில்தார்கள், “காட்டுமன்னார் கோயில், திட்டக்குடி, வேப்பூர் வட்டாரங்களில் இருந்து பயனாளிகளை அழைத்துவர வேண்டும் என்றால் காலை 5.00 மணிக்கே அவர்களை வீடு வீடாகச் சென்று அழைக்க வேண்டும். நபர் ஒருவருக்கு ரூ.150 செலவு செய்ய வேண்டும்” என்று தெரிவித்தபோது, உங்கள் கை காசுபோட்டுத்தான் அழைத்து வர வேண்டும் என்று மாவட்ட அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ஏற்கனவே மாவட்ட ஆட்சியருக்கு எதிராகப் போராட்டம் செய்து முற்றுகையிட்டிருக்கும் தாசில்தார்கள், “சாப்பாடு, வாட்டர் பாட்டில், ஸ்நாக்ஸ் வாங்கி கொடுத்து அழைத்து வரவேண்டும் எனில் ஒவ்வொரு தாசில்தாருக்கும் சராசரி 1.50 லட்சம் செலவாகும். இந்தப் பணத்தை எங்கே போய் கொள்ளை அடிப்பது. முதியவர்களை அழைத்துவந்து ஏதாவது அசம்பாவிதம் நடந்துவிட்டால் அதற்கு யார் பொறுப்பு” எனக் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில் விழா அன்று தாசில்தார்கள் போராட்டம் செய்துவிடுவார்களோ என்று யோசித்த ஆட்சியர் அன்புச் செல்வன் நேற்று (நவம்பர் 22) தாசில்தார் உள்ளிட்ட அதிகாரிகளை மீண்டும் அழைத்து ஆலோசனை நடத்தியுள்ளார். அதில், ‘பயனாளிகளை அழைத்துவரவேண்டாம், பயனாளிகளுக்கு நலத்திட்டம் வழங்குவது பற்றி பிறகு சொல்கிறேன்’ என கூறியுள்ளார். நலத்திட்டம் வழங்கும் விழாவை ஒத்திவைத்துவிட்டதால் முதல்வர் வரும் நேரத்தில் பயனாளிகள் சாலை மறியல் உள்ளிட்டவற்றில் ஈடுபடலாம் என்கிற அச்சமும் காவல் துறையினருக்கு ஏற்பட்டுள்ளது.

முதல்வர் வருவதால் கூட்டத்தை அதிகமாகக் கூட்டும் விதமாக மகளிர் சுய உதவிக் குழுவிலுள்ள பெண்களை அழைத்து வர மகளிர் திட்ட அதிகாரிகள் மூலமாகவும், உள்ளாட்சித்துறை அதிகாரிகள் மூலமாகவும் பேசிவருகிறார் ஆட்சியர்.

கர்நாடக நீர் வரத்து: உயரும் மேட்டூர் அணையின் நீர் மட்டம்!

3 நிமிட வாசிப்பு

கர்நாடக நீர் வரத்து: உயரும் மேட்டூர் அணையின் நீர் மட்டம்!

துப்பாக்கியுடன் செல்ஃபி: குண்டு பாய்ந்து பலியான சோகம்!

3 நிமிட வாசிப்பு

துப்பாக்கியுடன் செல்ஃபி: குண்டு பாய்ந்து பலியான சோகம்!

யானைகளின் வழித்தடம்: சர்வதேச நிபுணர்களுடன் ஆய்வு!

5 நிமிட வாசிப்பு

யானைகளின் வழித்தடம்: சர்வதேச நிபுணர்களுடன் ஆய்வு!

சனி 23 நவ 2019