சவுதி அரேபியாவில் 23 ஆண்டுகளாக சட்டவிரோதமாக வசித்துவரும் இந்தியர், நாடு திரும்புவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது.
கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த கன பிரகாசம் ராஜமரியன் (52) என்பவர் கடந்த 1994ஆம் ஆண்டு துபாயின் ஹெயில் மாகாணத்தில் விவசாய வேலைக்காகச் சென்றார். முதல் ஆறு மாதம் ஒருவரிடமும், அடுத்த ஆறு மாதம் மற்றொருவரிடம் வேலை பார்த்து வந்துள்ளார். இவ்வாறு அடுத்தடுத்தவர்களிடம் வேலைக்காக மாறி மாறி சில மாதங்களில் ஒரு பாலைவனத்துக்குச் சென்றுள்ளார். சுமார் 23 ஆண்டுகள் வீட்டுக்குச் செல்லாமல் அவர் ஒரு பாலைவனக் கிராமத்தில் வசித்து வந்துள்ளதாகக் கூறப்படுகிறது.
இதுகுறித்து ராஜமரியன் கூறியதாவது, “நான் மூன்று முதலாளிகளிடம் வேலை செய்தேன். ஆனால், ஒருவரும் எனக்குச் சம்பளம் தரவில்லை. எனவே சட்டவிரோதமாக வாழ்வதற்கு முடிவு செய்து பாலைவனத்தில் தலைமறைவாக வாழ்ந்து வந்தேன். அங்கு சம்பாதித்து எனது மூன்று மகள்களின் திருமணச் செலவுக்குப் பணம் அனுப்பினேன். இறுதியாக எனது மனைவியிடம் இருந்து 2015ஆம் ஆண்டு தொலைபேசி மூலம் எனக்கு அழைப்பு வந்தது” என்று கூறியதாக செய்தித்தாள்களில் செய்தி வெளியாகியுள்ளது.
தனது வாழ்நாளில் பாதியைச் சவுதியில் கழித்த அவரது மகள்களுக்குத் திருமணமாகி பேரக் குழந்தைகளும் உள்ளனர். ராஜமரியனுக்கு ஆதார் கார்டு, வாக்காளர் அட்டை எதுவும் கிடையாது. ஏனென்றால் அவர் சவுதிக்குச் சென்ற பிறகு தான், இந்த வசதிகளை அரசு உருவாக்கியது. தற்போது சமூக ஆர்வலர் சர்புதின் தய்யல் என்பவர் ராஜமரியன் இந்தியா திரும்ப ஏற்பாடுகள் செய்துள்ளார்.
சவுதி அரேபியாவில் கடந்த மார்ச் 29ஆம் தேதி முதல் 90 நாட்கள் பொது மன்னிப்பு காலம் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த பொது மன்னிப்பு காலத்துக்குள் ஒன்று நாட்டைவிட்டு வெளியேற வேண்டும் அல்லது சட்டத்துக்குட்பட்டு தங்கள் நிலையை முறைப்படி மாற்றிக்கொள்ள வேண்டும் இல்லையேல் சட்ட விரோதமாகத் தங்கியிருப்பவர்கள்மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது. இதன் அடிப்படையில் ராஜமரியன் விரைவில் இந்தியா திரும்பவுள்ளார்.
சவுதியில் ரியாத்தில் உள்ள இந்திய தூதரகத்திலும் ஜெட்டாவில் உள்ள துணை தூதரகத்திலும் அவசர பயணச் சீட்டுகளுக்காக சுமார் 26,713 பேர் விண்ணப்பித்துள்ளனர். இதில் டெல்லியைச் சேர்ந்த 2,733 பேரும், மேற்கு வங்கத்தைச் சேர்ந்த 2,332 பேரும், தமிழ்நாட்டைச் சேர்ந்த 2,022 பேரும், கேரளாவைச் சேர்ந்த 1,736 பேரும், பீகாரைச் சேர்ந்த 1,491 பேரும், ஆந்திராவைச் சேர்ந்த 1,120 பேரும் விண்ணப்பித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.�,