�‘மின்னம்பலம்’ தொடங்கப்பட்டது எதற்காக? – கேள்வி ஞானம்: ஓசை காளிதாசன் உரை – 1

public

தமிழின் முதல் மொபைல் பத்திரிகையான நம் மின்னம்பலமும் கோவை எஸ்.வி.எஸ். கல்லூரியும் இணைந்து நடத்திய ‘கேள்வி ஞானம்’ நிகழ்வில் கவிஞர் தமிழச்சி தங்கபாண்டியன் அவர்கள் ஆற்றிய உரையை ஐந்து பாகங்களாக கடந்த நாள்களில் நாம் பார்த்தோம். அடுத்து தமிழகச் சுற்றுச்சூழல் செயல்பாடுகளில் முன்னோடியாகவும், ‘தமிழக மேற்குத்தொடர்ச்சி மலையைக் காப்போம்’ என்ற அமைப்பின் ஒருங்கிணைப்பாளராகவும் தற்போது செயல்படும் ஓசை காளிதாசன் அவர்களின் உரையைக் கேட்போம்…

எனக்கு தெரியும் மூன்று நாள்கள் விடுமுறை, மணி வேறு நான்கு… எவ்வளவு சிறந்த உரையாக இருந்தாலும் நான்கரைக்குள் முடித்துவிடுங்கள், நாங்கள் போகணும் என்ற உங்களின் உணர்வு தெரியும். ஆக, அதன்படி முடித்து விடுகிறேன்.

நான் தமிழகத்தில் பல கல்லூரிகளில் பேசியிருக்கிறேன். இந்த அரங்கம் எனக்குப் பிரம்மிப்பூட்டுவதாக உள்ளது. ஒரு பொறியியல் கல்லூரியில் இத்தனை விசாலமாக ஒரு தமிழ் மன்றம் நடைபெறுவது இங்குதான். கல்லூரியின் நிர்வாகத்துக்கு என் நெஞ்சம் நிறைந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன். நிறைய கல்லூரிகளில் தமிழ்மன்ற நிகழ்வுகள் நடக்கும். ஆனால், சின்ன சின்ன அரங்கங்களில் தமிழ் சுருங்கிப் போயிருக்கும். ஒரு ஆங்கில பேராசிரியை தமிழைப் பற்றி இவ்வளவு நேர்மையாக பேச முடியும் என்பதற்கு தமிழச்சி தங்கபாண்டியனை விட ஓர் உதாரணம் இருக்க முடியாது. அவர் தமிழச்சி என்ற தன்மான மனுஷியாக உங்களிடம் நிறைய பேசினார்.

இந்த நிகழ்வு ஏற்பாடு செய்தது தமிழ் மன்றமாக இருந்தாலும். ‘மின்னம்பலம்’ என்கிற இணைய இதழின் முன்முயற்சியால்தான் இந்த நிகழ்ச்சி நடத்தப்படுகிறது, இந்த இதழை நடத்துகிற தோழர் காமராஜ் அவர்கள், நீண்ட காலமாக பத்திரிகைத்துறையில் இருப்பவர். பத்திரிகை துறையிலுள்ள எல்லோருக்கும் அவரை தெரியும். ஆனால், அவர் வழக்கமான ஓர் இதழைக் கொண்டுவராமல், இணைய இதழை கொண்டுவர வேண்டுமென்று முடிவெடுத்தது எப்போது தெரியுமா?.

இங்கிலாந்து நாட்டின் தலைநகரான லண்டனிலே பத்திரிகைகள் பற்றிய உலகப்புகழ் பெற்ற மாநாட்டிலே அவர் பங்கு பெறுகிறார். அங்கு ஒரு செய்தி உச்சரிக்கப்படுகிறது. ‘நீங்கள் ஒரு தரமான பத்திரிகை நடத்த வேண்டும். அப்படியானால் நீங்கள் எதை முன்னெடுக்க வேண்டும்?’ என்ற கேள்வி அங்கு எழுகிறபோது, அங்கிருக்கக்கூடிய உலகம் முழுவதுமுள்ள மக்களின் மனநிலை அறிந்த புள்ளிவிவரங்கள் என்ன கூறுகிறதென்றால், எந்த வடிவத்தில் நீங்கள் இளைஞர்களைச் சென்று சேர முடியுமோ… அந்த வடிவத்தைத் தேர்ந்தெடுங்கள் என்று கூறுகின்றன.

அப்போதுதான் காகிதமில்லாத ஒரு பத்திரிகையைக் கொண்டுபோக வேண்டும்; அது இளைஞர்களின் கைபேசிகளில் சென்று சேர வேண்டும் என்ற எண்ணத்தோடு காமராஜ் அவர்களால் ஆரம்பிக்கப்பட்டதுதான் மின்னம்பலம் என்கிற இணைய இதழ். எத்தனை பேர் இதுவரை பார்த்திருப்பீர்களோ எனக்குத் தெரியாது. நாளை முதல் ஒரு பதினைந்து நிமிடம் மின்னம்பலம்.காமில் சென்று பாருங்கள். இந்த மேடைக்காக சொன்னோமா அல்லது நிஜத்துக்காக சொன்னோமா என்பது உங்களுக்குப் புரியும். மின்னம்பலம் இதழைப் பற்றி விளம்பரப்படுத்துவதற்காக இந்த நிகழ்வை நடத்தவில்லை. உங்கள் மீது வைத்திருக்கக்கூடிய ஒரு நம்பிக்கைக்காக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

ஏனெனில் தமிழ்மன்றத் தொடக்க விழாவில் ஒரு பட்டிமன்றத்தை நடத்தி, நான் நான்கு நகைச்சுவையையும், தமிழச்சி நான்கு நகைச்சுவைகளையும் பேசிவிட்டால், ‘நீங்கள் ஆகா… பட்டிமன்றம் பிரமாதம்’ என்பதோடு போய் விடுவீர்கள். பட்டிமன்றத்தையே உங்கள் கல்லூரி நிர்வாகம் ஏற்பாடு செய்திருக்கலாம். ஆனால், இங்கே வித்தியாசமாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

நீங்கள் பொறியியல் படிக்கிறீர்கள். உங்களை இந்தக் கல்லூரியில் சேர்த்திருக்கிற பெற்றோரின் எண்ணம் ஒன்றுதான். என் பிள்ளை படித்து ஒரு நல்ல வேலைக்கு போக வேண்டும். அடுத்து உங்கள் கல்லூரி நிர்வாகத்தின் எண்ணம், எங்கள் கல்லூரியில் படிக்கும் மாணவர்கள் உயர்ந்த இடத்தில் இருக்க வேண்டும் என்பது.

ஆனால், தமிழச்சியின் நோக்கம், என்னுடைய நோக்கம், மின்னம்பலம் நோக்கம் என்னவென்றால், உங்களுக்கு ஒரு கோபம் இருக்கிறது. இந்த சமூகத்தின் மீதான கோபம் அது. ஆட்சியாளர்களைத் திட்டுகிறோம், தவறு செய்வதற்காக திட்டுகிறோம். ஆனால், நாம் இந்தச் சமூகத்தை புரிந்துகொள்ள வேண்டுமென்றால் என்ன செய்ய வேண்டும்? சமூகத்தை படிக்க வேண்டும்.

இந்த மேடையில் நாங்கள் பேசுகின்ற எந்த பேச்சையும் உங்களுடைய செமஸ்டரில் கேட்க மாட்டார்கள். கேம்பஸ் இன்டர்வியூவிலும் கேள்வியாகக் கேட்க மாட்டார்கள். எனக்கு தெரியும். ஆனால், அதையும் மீறி இங்கு பரிமாறப்படுகிற விஷயங்களின் அர்த்தம் என்னவென்றால், உங்களின் படிப்பு, நீங்கள் செய்யப் போகிற வேலையைவிட, அதற்கும் மேலாக நீங்கள் வாழப்போகிற வாழ்க்கை மிகவும் முக்கியம். அந்த வாழ்க்கைக்கு உங்கள் படிப்பு, சம்பாத்தியம் மட்டும் போதாது. இந்த சமூகம் எவ்வளவு நலமுற்று இருக்கிறதோ, அதுவரைதான் நாமும் நம் பிள்ளைகளும் நலமாக இருக்க முடியும். அந்தச் சமூகத்தை அடிப்படையாகக் கொண்டதுதான் இந்த மின்னம்பலம். உள்ளங்கைகளுக்குள் உலகத்தை கொண்டுவரக்கூடிய ஓர் இணைய இதழ். உங்களோடு உரையாட வேண்டுமென்பதற்காகத்தான் உருவாக்கப்பட்டிருக்கிறது.

தமிழச்சி அவர்கள் தமிழைப் பற்றி பேசுகிறபோது எனக்கு எல்லாவற்றையும்விட ஒரு பெருமிதம் வருகிறது. எனக்கு எல்லாவற்றிலும் ஒரு பெருமிதம் உண்டு. நாம் ஏன் தமிழர்களாக இருப்பதில் பெருமிதம் கொள்ளவேண்டுமென்றால், உலகத்திலேயே முதன்முறையாக இந்த உலகத்தில் பிறந்த அத்தனை பேரையும் என் சொந்தக்காரர்களாக நினைக்கிறேன் என ‘யாதும் ஊரே யாவரும் கேளீர்’ என்ற கூறிய முதல் குரல் தமிழரின் குரல்தான். அடுத்து மற்றொரு குரல் வருகிறது ‘பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல்’ என்று. இதில் பல்லுயிர் என்றால் மனிதன் மட்டுமல்ல.

ஓசை காளிதாசனின் ஓசை நாளையும் ஒலிக்கும்…

�,

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *