�ஜூலையில் உள்ளாட்சித் தேர்தல்- பாமகவினருக்கும் பதவிகள்: அன்புமணி பொதுக்குழு பூஸ்ட்!

public

அதிமுகவும், பாமகவும் சேர்ந்திருப்பது இயற்கையான கூட்டணி என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

அதேபோல வரும் உள்ளாட்சித் தேர்தலிலும் அதிமுக கூட்டணி தொடரும் என்றும் பாமகவினருக்கு உள்ளாட்சிப் பதவிகள் கிடைக்கும் என்றும் பூஸ்ட் கொடுத்திருக்கிறார் அன்புமணி.

பிப்ரவரி 19 ஆம் தேதி அதிமுக-பாமக கூட்டணி ஒப்பந்தம் கையெழுத்தானதை அடுத்து, பிப்ரவரி 22 ஆம் தேதி முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் மற்றும் அமைச்சர்களுக்குத் தனது தைலாபுரம் தோட்டத்தில் விருந்துக்கு ஏற்பாடு செய்தார் ராமதாஸ்.

அதன் பின் நேற்று பிப்ரவரி 23 ஆம் தேதி புதுச்சேரியில் பாமகவின் அவசரப் பொதுக்குழு கூட்டத்தைக் கூட்டினார். அதிமுக-பாமக கூட்டணி பற்றி பலத்த விமர்சனங்கள் எழுந்து வரும் நிலையில் பாமக நிர்வாகிகளுக்கு சில விஷயங்களை எடுத்துச் சொல்லும் வகையில் இந்தப் பொதுக்குழு கூட்டப்பட்டது.

இதில் பேசிய டாக்டர் ராமதாஸ்,

“கூட்டணி குறித்து நாம் பேசிக்கொண்டுதான் இருந்தோம், அறிவிக்கவில்லை. ஆனால் எந்த ஜோசியக் காரன் சொன்னானோ தெரியவில்லை, எந்த மாந்திரீகன் சொன்னானோ தெரியவில்லை. அதிமுக தொண்டனும், பாமக தொண்டனும் கை குலுக்கிக் கொண்டான். கூட்டணி அறிவிப்புக்கு முன்னரே இது நடந்தது. அந்த வகையில் அதிமுக, பாமக கூட்டணி இயற்கையான கூட்டணி.

நாம் நிற்கும் தொகுதியில் அதிமுகவினரும், மற்ற கூட்டணிக் கட்சியினரும் உயிரைக் கொடுத்து வேலை செய்வார்கள். அதேபோல அவர்களது தொகுதிகளில் நாம் இரண்டு மடங்கு உழைப்பைக் கொட்டி வேலை செய்ய வேண்டும். இன்னும் 20, 25 நாள் கடுமையாக உழைத்தோம். கூட்டணி சேரும்போது உழைப்பதற்கான வியூகங்கள் வரும். உங்களுக்கு நிறைய அனுபவம் கிடைக்கும்.

நம்முடைய கொள்கையை நாம் எந்த காலத்திலும் விட்டுக் கொடுத்ததில்லை. நாம் தேக்கு மரம். கூட்டணி என்று வரும்போது கொஞ்சம் நாணலாக வளைந்துகொடுக்கிறோம். அவ்வளவுதான். பத்து கோரிக்கைகள் வைத்தோமே… இதையெல்லாம் வேறு கட்சியாக இருந்தால் வைப்பார்களா? இந்தப் பத்து கோரிக்களையும் அன்புமணிதான் வாங்கித் திருத்திக் கொடுத்தார்.

அந்த கோரிக்கைகளில் நாம் அழுத்தம் கொடுத்து ஏழு தமிழர் விடுதலை. முந்தாநாள் இரவு பேரறிவாளனின் தாயார் அற்புதம் அம்மாள் தைலாபுரம் தோட்டத்துக்கு வந்து அழுதார். ‘ஐயா..முதலமைச்சர் உங்க வீட்டுக்கு வர்றாரு. பேரறிவாளன் விடுதலைபத்தி பேசுங்க’ என்று அழுதார். அவரிடம் நான் தைரியம் சொல்லி அனுப்பினேன். நம் கோரிக்கைகளை இந்த கூட்டணி வென்றெடுக்கும்” என்று பேசினார் ராமதாஸ்.

இக்கூட்டத்தில் பேசிய பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி, அதிமுகவோடு கூட்டணி வைத்தது ஏன் என்று விளக்கினார்.

“எட்டு ஆண்டுகள் பாமக தமிழ்நாட்டில் தனியாக தேர்தலை சந்தித்தோம். மக்கள் கடந்த 2016 சட்டமன்றத் தேர்தலில் கால் கோடி வாக்குகளை நமக்கு அளித்தார்கள். தமிழகத்தில் மூன்றாவது பெரிய கட்சியாக வந்தோம். ஆனால், எந்த ஒரு ஊடகமாவது இதைப் பாராட்டியதா? பாராட்ட வேண்டாம்… எடுத்துச் சொல்லவாவது செய்ததா?

தனிச்சு நின்னா ஆதரிக்க மாட்டீங்க. கூட்டணி சேர்ந்தா திட்டுறீங்க. ஊடகங்கள் செய்யுறது என்ன நியாயம்? எங்க மேல் என்ன ஆத்திரம்? மற்ற கட்சிகள் எவ்வளவோ இருக்கு. அதையெல்லாம் ஏன் விமர்சனம் பண்ண மாட்டேங்குறீங்க? அதனாலதான் சொல்றேன்… கூட்டணி விஷயத்துல ஐயாவை விமர்சனம் செய்யுறதுக்கு யாருக்கும் தகுதியில்ல.

நம் இலக்கை அடைய வேண்டுமென்றால் சூழலுக்கேற்ற வியூகங்களை வகுக்க வேண்டும். அந்த அடிப்படையில்தான் இந்த முடிவு” என்ற அன்புமணி மேலும் பேசினார்.

“தமிழ்நாட்டின் முதலமைச்சரும், துணை முதலமைச்சரும் தைலாபுரம் தோட்டத்துக்கு வந்து ஐயாவப் பாத்து, ஆசிர்வாதம் பண்ணுங்கனு சொல்றாங்க. இந்த மரியாதை நமக்கு ரொம்ப முக்கியம். தமிழ்நாட்டின் உரிமைகளை மீட்டு எடுக்கறதுக்காகதான் இந்த கூட்டணி வச்சிருக்கோம்.

ஒரு உதாரணம் சொல்றேன்… புகையிலையை எதிர்த்து நாம் போராட்டம் பண்ணினோம். எத்தனையோ போராட்டம் பண்ணினோம்.

எங்கெங்கயோ போராடினோம். ஆனால் அதனால ஒரு பிரயோஜனமும் இல்லை. ஆனால், ஐயா கூட்டணிக்கு நாம் செல்வோம் என முடிவெடுத்து மத்திய அரசில் சுகாதாரத் துறை அமைச்சர் ஆனவுடனே அவ்வளவு நாள் நடத்தின போராட்டத்தை ஒரே நாளில் ஒரு கையெழுத்தில் முடித்து, தமிழ்நாடு மட்டுமில்ல இந்தியா பூராவுக்கும் புகையிலைக்கு தடை போட்டோம்.

களத்துல எவ்வளவு போராட்டம் நடத்தினாலும் பொறுப்புல உட்கார்ந்து ஒரு நிமிஷத்துல அதை முடிச்சுட்டோம். இதை ஒரு உதாரணமா நான் சொல்றேன்.

இப்ப நம்ம நோக்கம் காவிரி டெல்டா பாதுகாக்கப்படணும். எதிர்காலத்து நம்ம சந்ததியும் இங்கே சோறு சாப்பிடணும். அதுக்கு ஹைட்ரோ கார்பன், மீத்தேன் எல்லாம் வரக் கூடாது. ரெண்டு ஆட்சியிலயுமே மீத்தேன், ஹைட்ரோ கார்பன்னு கொண்டுவந்தாங்க. ஆனா, நம்ம நோக்கம் டெல்டா பாதுகாப்பா இருக்கணும்.

தோடத்துக்கு வந்த எடப்பாடிகிட்ட ஐயா சொன்னார், ‘டெல்டாவை பாதுகாக்கப்பட்ட மண்டலமா அறிவிக்கணும்’னு. பதிலுக்கு அவர், ‘சரிங்க ஐயா’ என்று சொன்னாரு.

வர்ற ஜூலை மாசம் உள்ளாட்சித் தேர்தல் வருது. அதை மனசுல வச்சிக்கங்க. நாமளும் அதிமுகவும் சேர்ந்தா என்ன நடக்கும்? முடிஞ்சு போச்சு. அவ்வளவுதான். நாடாளுமன்றத் தேர்தல்ல நாம ஒழுங்கா வேலை செஞ்சு, நாம வெற்றி அடையணும். அதுக்குப் பின் உள்ளாட்சித் தேர்தல்லையும் நம்ம வெற்றி தொடரணும். நாடாளுமன்றத் தேர்தல்ல வேலை செய்யலை அப்படி இப்படினு எனக்கு தகவல் வந்துச்சு… அப்புறம், உள்ளாட்சித் தேர்தலை மறந்துட வேண்டியதுதான்” என்று சுமார் 15 நிமிடங்கள் பேசி முடித்தார் அன்புமணி.

நேற்று பகல் 12 மணிக்கு துவங்கிய பொதுக்குழு 1.30க்கெல்லாம் முடிந்துவிட்டது. ஆனாலும் பொதுக்குழு உறுப்பினர்களுக்கு உணவு வசதி ஏற்பாடு செய்யப்படவில்லை.

“டிசம்பர் மாதம் கோயமுத்தூர்ல நடந்த பொதுக்குழுவுல ரெண்டு நாளும் நல்லா சாப்பாடு போட்டாங்க. ஆனா கூட்டணி அமைச்சு குஷியா இருக்குற நேரத்துல இப்படி பண்ணிட்டாங்களே… நேத்துதான் எடப்பாடியை கூப்பிட்டு விருந்தே வச்சாரு டாக்டர். ஆனா இன்னிக்கு சொந்தக் கட்சிகாரனையே பட்டினி போட்டு அனுப்புறாரே?’’ என்ற முணகல்கள் பொதுக்குழு வளாகத்திலேயே கேட்டன.

�,

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *