[வெட்டிவேரு வாசம் கடலூரில் வீசும்!

public

கடலூர் மாவட்டத்தில் உள்ள ராசபேட்டை கிராமத்தில் வெட்டிவேர் உற்பத்தியில் மீனவர்கள் ஈடுபடத் துவங்கியுள்ளனர்.

கடலூரில் உள்ள 43 மீனவக் கிராமங்களில் ராசபேட்டையும் ஒன்றாகும். இங்கு வசிப்போரில் பெரும்பாலானோர் மீனவர்கள்தான். இந்தக் கிராமத்தில் தற்போது மீனவர்கள் வெட்டிவேர் உற்பத்தியில் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர். இதனால் இக்கிராமமே பசுமையாகக் காட்சியளிக்கிறது. வெட்டிவேர் என்பது புல் வகைத் தாவரங்களில் ஒன்றாகும். அழகு சாதனத் துறை உள்ளிட்ட பல்வேறு விதமான துறைகளில் வெட்டிவேர் பயன்படுகிறது.

ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட அண்டை மாநிலங்களிலும், வெளிநாடுகளிலும் வெட்டிவேரின் தேவை அதிகரித்துள்ளதாலும், டன் ஒன்றுக்கு ரூ.2 லட்சம் வரையில் கிடைப்பதாலும் வெட்டிவேர் சாகுபடி செய்ய இப்பகுதி மீனவர்கள் ஆர்வம் காட்டத் தொடங்கியுள்ளனர். தளர்வான மண்ணில் வெட்டிவேர் நன்கு வளர்வதால் மீனவர்களுக்கு வாய்ப்புள்ள பயிராக வெட்டிவேர் உள்ளது. வெட்டிவேர் சாகுபடி பரப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாலும், இதன்மூலம் கிடைக்கும் வருவாய் அதிகமாக இருப்பதாலும் இப்பகுதியில் வேளாண் நிலங்களின் மதிப்பு வேகமாகக் கூடி வருகிறது.

இதுகுறித்து வர்த்தகர் பிரசன்ன குமார் தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் ஊடகத்துக்கு அளித்துள்ள பேட்டியில், “இந்த மண்ணின் வளத்தையும், வெட்டிவேர் பயிரின் முக்கியத்துவத்தையும் உணராமல் பலர் நல்ல விலை கிடைக்கிறது என்பதற்காக நிலத்தை விற்பனை செய்து வருகின்றனர். சிலர் தொடர்ச்சியாக வெட்டிவேர் அறுவடை செய்து லாபமீட்டி வருகின்றனர்” என்று கூறியுள்ளார். இவர் விவசாயிகளிடமிருந்து வெட்டிவேரை வாங்கிக் கர்நாடக நிறுவனங்களுக்கு விற்பனை செய்து வருகிறார். மெக்கானிக்கல் எஞ்சினியரிங் படித்துக் கொண்டிருந்த சி.கே.அசோக் குமார் படிப்பை நிறுத்திவிட்டு இப்போது வெட்டிவேர் வர்த்தகத்தில் ஆர்வத்துடன் செயல்பட்டு வருகிறார்.

அதேபோல செந்தூர் குகன் தனக்குச் சொந்தமான ஐந்து ஏக்கர் நிலத்தில் வெட்டிவேர் சாகுபடி செய்து வருகிறார். சுமார் 30 தொழிலாளர்களை இதற்காகப் பணியில் ஈடுபடுத்தியுள்ளார். டன் ஒன்றுக்கு ரூ.1.4 லட்சத்திற்கு விற்பனை செய்வதற்கான ஒப்பந்தத்தையும் இவர் பெற்றுள்ளார். ஏக்கர் ஒன்றுக்கு எளிதாக 2 டன் வேர் உற்பத்தியாவதாகவும் இவர் கூறுகிறார். இப்பகுதியைச் சேர்ந்த மற்ற விவசாயிகளும் பல்வேறு நிறுவனங்களிடம் விற்பனை செய்வதற்கான ஒப்பந்தத்தைப் பெற்றுள்ளனர்.

வர்த்தகர் ராம்கி கூறுகையில், “பல இளைஞர்களும், இடைத்தரகர்களும் வெட்டிவேர் வாங்கி விற்க ஆர்வம் காட்டுகின்றனர்” என்கிறார். மீன்பிடித் தடைக் காலங்களில் மீனவர்களுக்கு வேலையளிக்கும் விதமாக வெட்டிவேர் உருவாகியுள்ளது. இப்பகுதியைச் சேர்ந்த மீனவர்கள் வெட்டிவேர் உற்பத்தியில் ஈடுபடவும் மாவட்ட நிர்வாகம் ஊக்குவித்து வருகிறது. மருத்துவத் துறையிலும் இதன் பயன்பாடு அதிகமாகவே உள்ளது. தூக்க மருந்துகளிலும், நச்சுத் தடை மருந்துகளிலும் இது பயன்படுகிறது. உலகம் முழுவதும் 130க்கும் அதிகமான நாடுகளில் 23 விதமான ரகங்களில் பல்வேறு பெயர்களில் வெட்டிவேர் பயிரிடப்பட்டு வரப்படுகிறது என்பது கூடுதல் செய்தி.

நன்றி: [தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்](http://www.newindianexpress.com/states/tamil-nadu/2018/apr/26/tamil-nadu-heady-vetiver-gradually-greening-up-cuddalores-coast-and-farmers-pockets-1806500.html)�,”

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *