ரூ.100 கோடி ஊழல்: அமைச்சருக்கு எதிராக உயர் நீதிமன்றம் உத்தரவு!

public

அமைச்சர் வேலுமணிக்கு எதிரான ஊழல் வழக்கில் லஞ்ச ஒழிப்பு துறை பதிலளிக்கச் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது

சென்னை மற்றும் கோவை மாநகராட்சி டெண்டர்களில் உள்ளாட்சித் துறை அமைச்சர் வேலுமணி அவருடைய பினாமி நிறுவனங்களுடன் இணைந்து கூட்டு சதி செய்ததாக அறப்போர் இயக்கம் ஆதாரங்களுடன் மாநகராட்சி ஆணையர்களிடம் புகார் கொடுத்தது. புகார் அளித்த பிறகும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. டெண்டர்கள் ரத்து செய்யப்படவும் இல்லை என்று குற்றம்சாட்டியது.

புகார் மீது நடவடிக்கை எடுக்காமல் மாறாக அறப்போர் இயக்கத்திற்கு 20 அவதூறு நோட்டீஸ் அனுப்பப்பட்டதாகவும். 1 அவதூறு வழக்கு தொடரப்பட்டதாகவும் தெரிவித்திருந்தது. இதைத்தொடர்ந்து சென்னை உயர் நீதிமன்றத்தில் அமைச்சர் வேலுமணிக்கு எதிராக அறப்போர் இயக்க நிர்வாக அறங்காவலர் ஜெயராம் வெங்கடேசன் வழக்கு தொடர்ந்திருந்தார்.

அதில், ”2014, 2015 ஆண்டுகளில் கோவை மாநகராட்சியில் மட்டும் 66 கோடியே 75 லட்ச ரூபாய் மதிப்புள்ள 188 டெண்டர்கள் கேசிபி இன்ஜினியர்ஸ், எஸ்பி பில்டர்ஸ் நிறுவனங்களுக்கே ஒதுக்கப்பட்டுள்ளது. இதுமட்டுமின்றி, 20 கோடி ரூபாய் வருமானம் ஈட்டிய நிறுவனங்களே, சென்னை மாநகராட்சி சுகாதாரப் பிரிவு டெண்டரில் பங்கேற்கும் வகையில் விதிகள் உருவாக்கப்பட்டு அமைச்சருக்கு வேண்டப்பட்டவர்களுக்கு ஒதுக்கப்பட்டது. இது தொடர்பாக அமைச்சர் வேலுமணி மீது சிபிஐ, லஞ்ச ஒழிப்பு துறையிடம் கடந்த ஆண்டு செப்டம்பர் 12ஆம் தேதி அளித்த புகாரில் நடவடிக்கை இல்லை என்பதால், தமிழக ஆளுநரிடம் முறையாக அனுமதி பெற்று லஞ்ச ஒழிப்பு துறை வழக்குப் பதிய வேண்டும் அதை விசாரிக்கச் சிறப்பு புலனாய்வு குழுவை நீதிமன்றம் உருவாக்க வேண்டும் முறையாக அந்தக் குழு விசாரணை செய்து குற்றவியல் நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்” என்று வலியுறுத்தியிருந்தார்.

இந்த வழக்கு இன்று (ஜனவரி 4) நீதிபதிகள் சத்தியநாராயணன், ராஜமாணிக்கம் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரர் சார்பாக ஆஜரான வழக்கறிஞர் சுரேஷ் , கேசிபி நிறுவனத்தின் தலைவராக உள்ள சந்திரசேகர் என்பவர் அமைச்சரின் உறவினர் என்றும் அவர் ஆளுங்கட்சி பிரமுகராக இருப்பதாகவும் தெரிவித்தார். இந்த டெண்டரில் சுமார் 100 கோடி ரூபாய்க்கு மேல் முறைகேடு நடந்திருப்பதாகவும் வாதத்தை முன்வைத்தார்.

தகவல் அறியும் உரிமைச் சட்டம் மூலம் பெறப்பட்ட தகவலில் டெண்டர்கள் அனைத்தும் ஒரே ஐ பி கணினி முகவரியில் இருந்து விண்ணப்பிக்கப்பட்டிருப்பதாகத் தெரியவந்துள்ளது. மேலும் சாலைகள் போடும் போது முறையாகச் சாலைகள் அமைக்காமல் பழுதான சாலை மேல் சாலைகள் அமைக்கப்படுவதாகவும் குற்றம்சாட்டினார்.

இதைக் கேட்ட நீதிபதிகள் நாங்கள் தினம் வரும் சாலையில் உள்ள சென்னை போர் நினைவுச் சின்னம், முன்பெல்லாம் சாலையில் இருந்து உயர்ந்து காணப்படும் ஆனால் தற்போது போர் நினைவுச் சின்னம் தாழ்ந்து சாலைகள் தான் உயர்ந்து காணப்படுவதாக குறிப்பிட்டனர். இதை நாங்கள் கூட கவனிக்கிறோம் ஆனால் மாநகராட்சி அதிகாரி கண்களுக்கு தான் தெரியவில்லை என்றனர்

சென்னை மாநகராட்சி ஆணையர் கார்த்திகேயன் மாநகராட்சி தொடர்பான வழக்குகளுக்குச் சென்னை உயர் நீதிமன்றத்திற்கு அடிக்கடி வருகிறார். எனவே ரிப்பன் மாளிகையைக் கூட சென்னை உயர் நீதிமன்றத்திற்கே மாற்றி விடலாம் எனவும் கருத்து தெரிவித்தனர்.

இதன்பின் உத்தரவிட்ட நீதிபதிகள் சென்னை கோவை மாநகராட்சி நிர்வாகங்களை எதிர் மனுதாரர்களாகச் சேர்த்து, தமிழக லஞ்ச ஒழிப்புதுறை, சிபிஐ, தமிழக தலைமை செயலாளர், அமைச்சர் எஸ்.பி.வேலுமணி ஆகியோர் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கை ஜனவரி 23ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தனர்.

�,

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *