பொள்ளாச்சி பாலியல் கொடுமை: ஜாமீன் மனு நிராகரிப்பு!

public

பொள்ளாச்சியில் மாணவிகள், இளம்பெண்களைக் கூட்டாகப் பாலியல் வன்கொடுமை செய்ததாகக் குற்றம்சாட்டப்பட்டுள்ள திருநாவுக்கரசுவை ஜாமீனில் விடுவிக்கக் கோரி அவரது தாயார் தாக்கல் செய்த மனுவை நிராகரித்துள்ளது பொள்ளாச்சி நீதிமன்றம்.

ஃபேஸ்புக்கில் இளம்பெண்களுடன் நட்பாகப் பழகி, அவர்களை ஆபாசமாக வீடியோ பதிவு செய்து, அதனைக் காட்டி அப்பெண்களைக் கூட்டாகப் பாலியல் வன்கொடுமை செய்ததாக பொள்ளாச்சி எம்ஜிஆர் நகர் சபரிராஜன் என்ற ரிஸ்வந்த், மாக்கினாம்பட்டி திருநாவுக்கரசு, சூளேஸ்வரன்பட்டி சதீஷ், பக்கோதிபாளையம் வசந்தகுமார் ஆகியோர் மீது குற்றம்சாட்டப்பட்டுள்ளது. பிப்ரவரி 24ஆம் தேதியன்று இந்த நபர்களால் பாதிக்கப்பட்டதாகக் கூறி, ஒரு கல்லூரி மாணவியும் அவரது சகோதரரும் பொள்ளாச்சி கிழக்கு காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இதற்கு அடுத்தநாள், அந்த மாணவியின் சகோதரரை நான்கு நபர்கள் தாக்கினர். அவர்களைப் பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர் அக்கம்பக்கத்தினர். இதன்பின்னர், இந்த பாலியல் வன்கொடுமை விவகாரம் வெளியே தெரிய வந்தது.

இந்த வழக்கு தொடர்பாக, திருநாவுக்கரசு கடந்த மார்ச் 5ஆம் தேதியன்று கைது செய்யப்பட்டார். இவரது குடும்பத்துக்குச் சொந்தமாக உள்ள ஊஞ்சவேலாம்பட்டி பண்ணைவீட்டில் இந்த பாலியல் கொடுமைகள் நடந்ததாகக் கூறப்படுகிறது. சபரிராஜன், சதீஷ், வசந்தகுமார் ஆகியோர் கடந்த மாத இறுதியில் கைது செய்யப்பட்டனர். இந்த விவகாரம் தொடர்பாக நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று, நேற்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கருத்து தெரிவித்தார். இது தொடர்பாகப் பேசிய கோவை காவல் கண்காணிப்பாளர் பாண்டியராஜன், சம்பந்தப்பட்ட நான்கு பேர் மீதும் குண்டர் சட்டம் பாயும் என்று கூறியிருந்தார். கோவை ஆட்சியர் ராஜாமணி உத்தரவின்பேரில், இன்று அவர்கள் மீது குண்டர் சட்டம் தொடுக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இன்று (மார்ச் 12) பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை விவகாரத்துக்கு எதிர்ப்பு தெரிவித்துப் போராட்டம் நடத்தப்போவதாகத் தெரிவித்துள்ளார் திமுகவைச் சேர்ந்த கனிமொழி. இந்த நிலையில், இன்று காலையில் பொள்ளாச்சி நீதிமன்றத்தில் மகன் திருநாவுக்கரசுவுக்கு ஜாமீன் கோரி மனுதாக்கல் செய்தார் அவரது தாயார் செல்வி. மனுவை விசாரித்த நீதிமன்றம், திருநாவுக்கரசு ஜாமீன் மனுவை நிராகரித்தது.

நான்கு பேர் மீதும் புகார் தெரிவித்த மாணவியின் சகோதரர் வெளியிட்ட வீடியோ பதிவொன்று, இன்று (மார்ச் 12) சமூக ஊடகங்களில் வெளியாகியுள்ளது. அதில், இந்த விவகாரத்தில் அரசியல் ஆதாயம் தேட வேண்டாம் என்று தமிழகக் கட்சிகளுக்கு அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

“திருநாவுக்கரசு, சபரிராஜன், சதீஷ், வசந்தகுமார் மீது வழக்கு தொடர்ந்தது நாங்கள்தான். எனது தங்கையைப் போல வேறு எந்தப் பெண்ணும் பாதிக்கப்படக்கூடாது என்ற நல்ல எண்ணத்தில்தான் வழக்கு தொடர்ந்தோம். வழக்கின் ஆதாரமான வீடியோவை போலீசில் ஒப்படைத்தோம். பொள்ளாச்சி சட்டமன்ற உறுப்பினரிடம் புகார் தெரிவித்தவுடன், காவல் துறை மூலம் நடவடிக்கை எடுத்து உடனடியாக 3 பேரைக் கைது செய்தனர். சில அரசியல் விஷமிகள் தங்கள் அரசியல் நோக்கத்திற்காக தேர்தல் தேதி அறிவித்தவுடன் ஆளும் கட்சிக்குக் கெட்ட பெயர் ஏற்படுத்த இணையத்தில் அவதூறு பரப்புகின்றனர். உங்களிடம் குற்றத்திற்கான ஆதாரம் இருந்தால், அதைக் காவல் துறையிடம் கொடுங்கள். அவர்கள் நடவடிக்கை எடுப்பார்கள். முடிந்தால் அந்த 4 பேருக்கும் தூக்குத் தண்டனை வாங்கித் தரப் போராடுங்கள். இதில் அரசியல் ஆதாயம் தேடாதீர்கள்” என்று அவர் அந்த பதிவில் தெரிவித்துள்ளார்.�,

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *