பூமியும் உயிரினங்களும் அவ்வப்போது தங்களைத் தகவமைத்துக்கொள்வதற்கான வாய்ப்பை காலநிலை மாற்றங்கள்தாம் அளிக்கின்றன. காலநிலை மாற்றம் என்பது இயற்கை நமக்களித்திருக்கும் வரப்பிரசாதம். அதற்குக் கோடையும் விதிவிலக்கல்ல.
இந்த நிலையில் ‘வெயிலுக்கு வெல்கம் சொல்வோம்’ என்கிறார்கள் சித்த மருத்துவர்கள். அதைப் பற்றி மேலும் விளக்குகிறார்கள்.
“சித்த மருத்துவத்தில், ‘வெயில் நல்லது’ என்றுதான் கூறப்பட்டிருக்கிறது. ‘உடல் உழைப்பில் ஈடுபடுவர்களுக்கு காலை வெயிலும், சொகுசு வாழ்க்கை வாழ்பவர்களுக்கு மாலை வெயிலும் நல்லது’.
சூரிய ஒளியிலிருந்து கிடைக்கும் வைட்டமின் டி, உடலில் வைட்டமின் ஈ சத்துகளை நிலைநிறுத்த மறைமுகமாக இந்த வெயில் நேரம் உதவி செய்யும்.
கோடைக்காலத்தில் மூட்டுவலி உள்ளிட்ட அனைத்து வகையான வாத நோய்களும் அதிக பாதிப்பை ஏற்படுத்தாமல் சற்று மட்டுப்பட்டிருக்கும். கப நோய்களான அடிக்கடி சளித் தொந்தரவு, ஆஸ்துமா பிரச்சினை ஏற்படுபவர்களுக்கு கோடைக்காலம் சற்று ஆறுதல் அளிக்கும்.
கோடைக்காலத்தில் புழுக்கம் அதிகரிப்பதால், பெரும்பாலும் இரண்டு தடவை குளித்து விடுவோம். தாகம் அதிகரிக்கும் என்பதால், சாதாரண நாட்களில் குடிக்கும் தண்ணீரைவிட இரண்டு மடங்கு தண்ணீர் அதிகம் குடிப்போம்.
தயிர் சாதம், பழைய சாதம், மோர் சாதம் போன்ற குளிர்ச்சியான உணவுகளை உடலே விரும்பத் தொடங்கும். பூட்டிய அறைகளுக்குள்ளே ஏ.சியில் இருந்தாலும் சற்று காற்றோட்டமான இடத்தை மனது விரும்பும்.
பொதுவாக, கோடையில் செயற்கை விஷயங்களைத் தவிர்த்துவிட்டு இயற்கையோடு ஒன்றி வாழும் தகவமைப்பு ஏற்படும்.
உணவு விஷயத்தில் கோடைக்காலத்தில் காரச் சுவையின் மீது நாட்டம் குறையும். வெப்பத்தைச் சமன்படுத்த கல்லீரலும் சருமமும் அதிகமாக வேலை செய்யும். இதனால் பித்தத்தின் குணம் அதிகரிக்கும். பித்தம் அதிகரிக்கும்போது நம்மையும் அறியாமல் நாக்கில் கசப்புச் சுவை தோன்றும். நாவறட்சி, சுவையின்மை, நாக்கில் கசப்புச் சுவை தெரிவது என மூன்றில் ஏதாவது ஓர் அறிகுறியின் மூலம் நம் அனைவருக்கும் தெரியவரும். அந்த நேரங்களில் நமக்கு இயற்கையாகவே கசப்புச் சுவையின் எதிர் சுவைகளான இனிப்பு, புளிப்பின் மீது ஆர்வம் ஏற்படும்.
அதனால்தான் கோடையில் மாம்பழம், திராட்சை, இளநீர், கரும்புச்சாறு போன்ற இனிப்பு, புளிப்பு உணவுகளை அதிகம் விரும்பிச் சாப்பிடுகிறோம். பித்தத்தின் தன்மை அதிகரிக்கத் தொடங்கும்போதே அதற்கேற்ற உணவுகளைச் சாப்பிட்டால் பித்தத்தின் தன்மை குறைந்து, கோடைக்கால நோய்களிலிருந்து உடல் தன்னைத்தானே இயற்கையாகவே தற்காத்துக்கொள்ளும்.
எனவே, கோடைக்காலத்தில் ‘வெயிலோடு விளையாடி… வெயிலோடு உறவாடி… வெயிலோடு மல்லுக்கட்டி ஆட்டம்’ போட வெயிலுக்கு வெல்கம் சொல்வோம்!” என்கிறார்கள்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
சிஎஸ்கேவை சிதறடித்த பஞ்சாப்: 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி!
பாடல் அனைவருக்கும் சொந்தம்: இளையராஜாவை மீண்டும் சீண்டிய வைரமுத்து