புரட்சியாளர்களின் கட்டப் பஞ்சாயத்து! – தேவிபாரதி

public

கௌசல்யா மறுமணம் தொடர்பான சர்ச்சைகளும், அதன் தாக்கங்களும்!

நான்கு வாரங்களுக்கு முன்னால் குங்குமம் வார இதழின் பொறுப்பாசிரியர் கே.என். சிவராமன் தன் முகநூல் பதிவொன்றில் ஆதிக்கச் சாதியினரால் படுகொலை செய்யப்பட்ட உடுமலைப்பேட்டை சங்கரின் மனைவி கௌசல்யாவை மறுமணம் செய்துகொண்ட பறை இசைக் கலைஞர் சக்தியைப் பற்றி அதிர்ச்சியூட்டும் தகவல்கள் சிலவற்றைப் பகிர்ந்திருந்தார். கோவையைச் சேர்ந்த பறை இசைக் கலைஞரான சக்தியின் பாலியல் தொடர்புகள் குறித்தும் அவரால் காதலித்து ஏமாற்றப்பட்டதாகச் சொல்லப்படும் பெண் ஒருவரைக் குறித்தும் மூன்றாம் பாலினத்தவர் ஒருவரைக் குறித்தும் அப்பதிவில் காணப்பட்ட தகவல்களின் உண்மைத் தன்மை குறித்த சந்தேகங்கள் எழுந்தன. அது சாதி வெறியர்களால் பரப்பப்பட்ட கட்டுக்கதை எனப் பலர் விமர்சித்தார்கள். ஆனால் பதிவிட்டவர் அனுபவம் மிக்க பத்திரிகையாளர். தகுந்த ஆதாரத்துடன் அந்தத் தகவல்களைப் பகிர்ந்திருப்பதாகச் சொன்னார் கே.என்.சிவராமன்.

**கௌசல்யாவின் போராட்டம்**

அப்போது கௌசல்யா – சக்தியின் திருமணத்துக்குத் தமிழக அரசியல் தலைவர்களும் சமூக ஆர்வலர்களும் முற்போக்குவாதிகளும் வாழ்த்துத் தெரிவித்துக்கொண்டிருந்தார்கள். காதல் கணவர் சங்கர் தனது பெற்றோரால் படுகொலை செய்யப்பட்டதற்கு எதிராக வெகுண்டெழுந்த கௌசல்யா தனக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு எதிரான உறுதியான போராட்டங்களை முன்னெடுத்தார். கடந்த சில வருடங்களில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் ஆதிக்கச் சாதியினரால் நிகழ்த்தப்பட்ட சாதி ஆணவப் படுகொலைகளைப் புரட்சிகரமான முறையில் எதிர்கொண்டார். கொலைக்குப் பின்னணியில் இருந்த தனது தந்தை, தாய், சகோதரன் உள்ளிட்ட நெருங்கிய உறவினர்களுக்கெதிரான சட்டப் போராட்டங்களை மனித உரிமை அமைப்புகள், சமூக நீதிப் போராளிகள், ஊடகங்களின் ஆதரவுடன் நடத்தி அவர்களில் பலருக்கு அதிகபட்ச தண்டனைகளைப் பெற்றுத் தந்தார்.

ஐந்தாண்டுகளுக்கு முன்னால் தர்மபுரி நத்தம் காலனியைச் சேர்ந்த இளவரசன் ஆதிக்கச் சாதியினரால் படுகொலை செய்யப்பட்டதாகக் குற்றம் சுமத்தப்பட்டபோது அவரது மனைவியான திவ்யா மௌனமாக இருந்தார். அல்லது மனதளவில் சிதறிப் போனவராக ஒதுங்கிக்கொண்டார்.

மூன்றாண்டுகளுக்கு முன்னால் திருச்செங்கோட்டில், நாமக்கல் மாவட்டம் ஓமலூரைச் சேர்ந்த தலித் இளைஞரான கோகுல் ராஜ் படுகொலை செய்யப்பட்டார், ஆதிக்கச் சாதியைச் சேர்ந்த அவரது தோழி அந்தப் படுகொலைக்கான சாட்சியாக முன்னிறுத்தப்பட்டபோது நீதிமன்றத்தில் பின்வாங்கினார்.

இளவரசன், கோகுல்ராஜ் படுகொலைகளுக்குக் காரணமானவர்கள் சட்டத்திலிருந்து தப்புவதற்கு அது காரணமாயிற்று.

கௌசல்யா தனது கணவரின் படுகொலையைத் தனக்கேற்பட்ட தனிப்பட்ட இழப்பாகக் கருதாமல் அதைச் சாதிய வன்முறையாகப் பார்த்தார், சங்கரின் படுகொலைக்குக் காரணமான தன் உறவினர்களைச் சட்டத்தின் முன் நிறுத்தித் தண்டனை பெற்றுத் தந்ததற்கு அப்பால் சங்கரின் பெயரில் அறக்கட்டளை ஒன்றை நிறுவி சாதி ஆணவப் படுகொலைகளுக்கெதிரான பிரச்சாரத்தை மேற்கொண்டார். அதையெல்லாம்விட முக்கியமாக அவர் தன்னை ஒரு தலித்தாக அடையாளப்படுத்திக்கொண்டார்.

தனது வலியை அதன் வழியே கடந்து செல்ல முயன்று அதில் வெற்றியும் பெற்றார்.

**கௌசல்யாவும், மனித உரிமைப் போராளிகளும்**

பல்வேறு தலித் அமைப்புகளும் மனித உரிமைப் போராளிகளும் சமூக நீதிக்காகப் போராடும் அமைப்புகளும் அரசியல் கட்சியினரும் கௌசல்யாவுக்குத் துணையாக நின்றனர். குறிப்பாக எவிடென்ஸ் கதிர், பெரியார் திராவிடர் கழகத்தின் தலைவர் கொளத்தூர் மணி, தமிழ் தேசிய இயக்கத்தைச் சேர்ந்த தியாகு ஆகியோர் கௌசல்யாவுக்கு ஆதரவாக நின்று அவரது செயல்பாடுகளை ஆதரித்தனர்.

கௌசல்யா புரட்சிகரமான பெண்களுக்கான உதாரணமாகக் கருதப்பட்டார். அவர் தனது சொந்த வாழ்க்கையையும் பொது வாழ்க்கையையும் உணர்வு ரீதியில் இணைக்க முற்பட்டார். அவரது தந்தை, தாய், சகோதரன் உள்ளிட்ட நெருங்கிய உறவினர்கள் நீதிமன்றத்தால் தண்டனை தண்டிக்கப்பட்டதை சாதி ஆணவப் படுகொலைகளுக்கு எதிரான போராட்டத்தின் வெற்றியாகவே பார்த்தார்.

கௌசல்யா உதாரணமாகக் கொள்ளத்தக்கவர் என்பதில் சந்தேகமில்லை.

அவர் தன் செயல்பாடுகளின் எல்லைகளை விரிவுபடுத்திக்கொள்வதற்கும் அரசியல் சார்ந்த புரிதல்களை ஆழப்படுத்திக்கொள்வதற்கும் முயன்று வந்தார். பறையிசைக் கலைஞரான சக்தியைத் தனது இணையாகத் தேர்ந்தெடுத்ததையும் அவரது புரட்சிகரமான செயல்பாட்டின் ஒரு பகுதி என்றே கொள்ள வேண்டும்.

சக்தியின் கடந்த கால வாழ்வின் தவறுகள் தற்போது கௌசல்யாவின் புரட்சிகர செயல்பாடுகளைக் கடுமையாகப் பாதித்திருக்கின்றன.

கே.என். சிவராமனின் ஆதாரபூர்வமான குற்றச்சாட்டுகளை எதிர்கொள்ள வேண்டிய கட்டாயம் கௌசல்யாவுக்கும் அவரை ஆதரித்த அமைப்புகளுக்கும் ஏற்பட்டிருந்தது.

**விசாரணையும் தீர்ப்பும்**

ஆனால், அதை எதிர்கொண்ட விதத்தில் பெரியார் திராவிடர் கழகத்தின் கொளத்தூர் மணியும் புரட்சியாளராகக் கருதப்படும் தியாகுவும் பெரும் தவறிழைத்திருக்கிறார்கள். சட்ட விரோதமாகக் கட்டப் பஞ்சாயத்து ஒன்றை நடத்தி கேலிக்கூத்தான தீர்ப்புகளை வழங்கியிருக்கிறார்கள். சக்தி தன் மீதான குற்றச்சாட்டுகளில் சிலவற்றை ஒப்புக்கொண்டதாகவும் சிலவற்றை மறுத்திருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியிருக்கின்றன. பாதிக்கப்பட்ட பெயர் தெரியாத பெண்ணுக்கு சக்தி துரோகமிழைத்திருக்கிறார். திருநங்கை மீதான பாலியல் அத்துமீறல் பற்றிய குற்றச்சாட்டை மறுத்திருக்கிறார். தியாகு – கொளத்தூர் மணியின் புரட்சிகர நீதிமன்றம் அதை அப்படியே ஏற்றுக்கொண்டுவிட்டதுபோல் தெரிகிறது.

ஒப்புக்கொள்ளப்பட்ட, நிரூபிக்கப்பட்ட குற்றங்களுக்காக சக்திக்கு மூன்று லட்ச ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டிருப்பதோடு சக்தி ஆறு மாத காலத்துக்கு பறை இசைக்கவும் தடை விதிக்கப்பட்டிருக்கிறது. தியாகு – கொளத்தூர் மணியின் புரட்சிகர அறத்தைக் கேலிக்கூத்தாயிருப்பது இந்தத் தீர்ப்புதான்.

விசாரணை எங்கே, எப்போது நடந்தது? யார் யாரெல்லாம் விசாரிக்கப்பட்டார்கள்? பாதிக்கப்பட்டவர்கள் தரப்பின் சார்பாக யார் வாதாடினார்கள்? சாட்சியங்களோ, தடயங்களோ ஆராயப்பட்டனவா? எந்தச் சட்டத்தின் அல்லது சமூக நீதியின் கீழ் இந்த விசாரணை நடத்தப்பட்டது?

**‘தீர்ப்பின்’ தாக்கங்கள்**

இந்தத் தீர்ப்பு மணியும் தியாகுவும் சார்ந்த இயக்கங்களின் மீதான விமர்சனங்களுக்குக் காரணமாக அமைந்ததுடன், சாதியமைப்புகளின் வன்மத்தைத் தீர்த்துக்கொள்வதற்கான இடத்தையும் ஏற்படுத்திக்கொடுத்துள்ளது.

ஆதிக்கச் சாதி ஆதரவாளர்களும் சாதி மறுப்புத் திருமணங்களுக்கு எதிரானவர்களும் இந்தச் சந்தர்ப்பத்தைத் தந்திரமாகப் பயன்படுத்திக்கொண்டு பெரியாரியத்துக்கும் அம்பேத்கரியத்துக்கும் எதிரான ஆபாசமான சொல்லாடல்களை உருவாக்கிக்கொண்டிருக்கிறார்கள்.

சங்கரின் படுகொலையை நியாயப்படுத்தவும் சங்கரின் கொலைக் குற்றவாளிகளைப் புனிதமாக்கவும் முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன. தலித்துகளின் மீது வெறுப்பு கட்டமைக்கப்படுகிறது. கௌசல்யாவின் மீது பிரயோகிக்கப்படும் ஆபாசமான வசைகள் அவரது இருத்தலுக்கும் அவர் கைகொண்டிருக்கிற புரட்சிகர வாழ்வுக்கும் சவாலாக மாறியிருக்கின்றன. முகநூல் பதிவர்களில் பலர் சாதி மறுப்புத் திருமணங்களை எதிர்ப்பதற்கு இந்த நிகழ்ச்சிகளைப் பயன்படுத்திக்கொள்கின்றனர். இது அபாயகரமான போக்கு.

கடந்த இருபதாண்டுகளாகவே ஆதிக்கச் சாதியினர் தலித்துகளுக்கு எதிரான சொல்லாடல்களைக் கட்டமைத்து வந்திருக்கின்றனர். தலித் அரசியல் சாதி மறுப்பு அரசியலாக அடையாளப்படுத்தப்படுவது ஆதிக்கச் சாதியினரைப் பதற்றத்துக்குள்ளாக்கியிருக்கிறது. தலித் ஆண்கள், தலித் அல்லாத சாதிகளைச் சேர்ந்த பெண்களுடன் காதல் – மண உறவு கொள்வதை வன்முறைகளால் எதிர்கொள்வதற்கான நியாயங்களை தமிழகத்தின் ஆதிக்கச் சாதி அமைப்புகள் உருவாக்கிக்கொண்டிருக்கின்றன.

தலித் – தலித் அல்லாதவர் மண உறவு கொள்வதை நாடகக் காதல் என வர்ணித்துள்ள பாட்டாளி மக்கள் கட்சி தொடர்ந்து பல்வேறு அவதூறுகளைப் பரப்பி வந்திருக்கிறது. ஐந்தாண்டுகளுக்கு முன்னால் கொங்கு வேளாளர் சமூகத்தைச் சேர்ந்த பொங்கலூர் மணிகண்டன் தலித் அல்லாத சாதிகளை ஒருங்கிணைக்கும் நோக்கத்துடன் மாநாடு ஒன்றையும் நடத்தினார். அரசியல், பண்பாட்டுத் தளங்களில் தலித்துகளைத் தனிமைப்படுத்துவது தலித் அல்லாத சாதியமைப்புகளின் செயல்திட்டங்களில் ஒன்றாகவே மாறியிருக்கிறது.

அதன் தொடர்ச்சியாகவே சாதி ஆணவப் படுகொலைகள் நிகழ்த்தப்படுகின்றன. கௌசல்யா அரசியல் ரீதியான புரிதல்களுடன் அவற்றை எதிர்கொள்ள முற்பட்டார். பறையிசைக் கலைஞர் சக்தியுடனான அவரது தனிப்பட்ட உறவு இப்போது பொது வெளியில் தவறாகப் பயன்படுத்தப்படுகிறது.

சக்தியின் மீதான குற்றச்சாட்டுகள் சட்டப்படியான விசாரணைக்கு உட்படுத்தப்பட வேண்டியவை. சக்தி தவறிழைத்திருக்கும்பட்சக்தில் அவர் மீது நீதிமன்றம் நடிவடிக்கை எடுப்பதற்கு வாய்ப்பிருக்கிறது. தவிர அவரால் பாதிக்கப்பட்டதாகச் சொல்லப்படும் பெண்களுக்கும் நியாயம் கிடைக்க வழியிருக்கிறது.

ஆனால், கொளத்தூர் மணியும் தியாகுவும் நடத்திய கட்டப் பஞ்சாயத்து ஏற்கத்தக்கதல்ல. கட்டாயமாக அது திரும்பப் பெறப்பட வேண்டும். தனது தனிப்பட்ட வாழ்க்கையைத் தனது சொந்த வழியில் எதிர்கொள்ள கௌசல்யா அனுமதிக்கப்பட வேண்டும்.

கௌசல்யாவுக்கு அதற்கான தகுதி உள்ளது.

*(கட்டுரையாளர் : **தேவிபாரதி** – சிறுகதைகள், கவிதைகள், நாடகங்கள், கட்டுரைகள் எழுதிவரும் தேவிபாரதி, மார்க்சிய, மார்க்சிய லெனினிய இயக்கங்களில் சிறிது காலம் செயல்பட்டவர். 1994இல் இளம் நாடக ஆசிரியருக்கான மத்திய சங்கீத நாடக அகாடமியின் பரிசு பெற்றார். இவரது சிறுகதைகளில் சில ஆங்கிலத்திலும் இந்தி, மலையாளம் உள்ளிட்ட சில இந்திய மொழிகளிலும் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. ‘வீடென்ப’ என்னும் தலைப்பிலான இவரது தேர்ந்தெடுக்கப்பட்ட பத்துச் சிறுகதைகள் என். கல்யாணராமன் மொழிபெயர்ப்பில் Horper Perinial வெளியீடாக Farewell Mahatma என்னும் தலைப்பில் வெளிவந்தது. காலச்சுவடின் பொறுப்பாசிரியராக ஆறு ஆண்டுகள் பணியாற்றினார். மின்னஞ்சல் முகவரி: devibharathi.n@gmail.com)*�,”

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *